செவ்வாய், 13 ஏப்ரல், 2021

மமதா பானர்ஜி பிரசாரம் செய்ய 24 மணி நேரம் தடை

BBC :மேற்கு வங்க மாநில தேர்தல் பிரசாரத்தின்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக எழுந்த புகாரில் சிக்கியுள்ள அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜிக்கு 24 மணி நேரம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் திங்கட்கிழமை மாலையில் பிறப்பித்த உத்தரவில், "ஆதாரமின்றி உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்புரையில் மமதா பானர்ஜி பதிவு செய்திருப்பதும், அது பற்றி விளக்கம் கேட்டபோது அவர் அது பற்றி உரிய வகையில் விளக்கம் அளிக்கவில்லை," என்றும் கூறப்பட்டுள்ளது.
மாநிலத்தின் முதல்வராக இருந்து கொண்டே தேர்தல் நடத்தை விதிகளை மமதா மீறிய செயலை தேர்தல் ஆணையம் கண்டிக்கிறது என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மமதா பானர்ஜியின் செயல், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் இருப்பதால், அத்தகைய சர்ச்சைக்குரிய பரப்புரையில் ஈடுபடக் கூடாது என்றும் ஏப்ரல் 12 இரவு 8 மணி முதல் 13ஆம் தேதி இரவு 8 மணிவரை அவர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட தடை விதிப்பதாகவும் உத்தரவில் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் நந்திகிராம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் மமதா பானர்ஜி, மத, இன ரீதியாக பேசி வாக்குகளை ஈர்க்க முயற்சி செய்ததாகவும், மத்திய ஆயுதப்படையினரின் செயல்பாட்டை விமர்சிக்கும் வகையிலும் பேசியதாக சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக பதில் அளிக்குமாறு கடந்த 7ஆம் தேதி மமதா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்த விவகாரத்தில் மமதா பானர்ஜியின் தேர்தல் பரப்புரை காட்சிகள், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதில் வெட்டப்படாத மமதா பானர்ஜியின் பரப்புரை காட்சிகள் ஒளிபரப்பாகின.

இது தொடர்பாக மமதா பானர்ஜி தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய பதிலில், "நான் வாக்குரிமை பெற்றுள்ள வாக்காளர்களில் குறிப்பாக பெண்களை மையப்படுத்தியே பேசினேன். தங்களுடைய வாக்குகளை சட்டவிரோதமாக ஈர்க்க முற்படுவோரை கேரோ செய்யுமாறுதான் நான் வலியுறுத்தினேன். மேற்கு வங்கத்தில் கேரோ என்ற வார்த்தையை பயன்படுத்துவது 1960களில் இருந்தே வழக்கத்தில் உள்ளது. அமைதி வழியில் பாதிக்கப்பட்டவர்கள், தங்களுடைய எதிர்ப்புணர்வை வெளிப்படுத்த கேரோ என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் நான் எவரையும் குறிப்பாக மத்திய ஆயுத படையினரை மிரட்டும் வகையிலோ அச்சுறுத்தும் வகையிலோ பேசவில்லை. அதனால் என் மீதான குற்றச்சாட்டை மறுக்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அவரது பதிலை பரிசீலித்த தேர்தல் ஆணையம், தேர்தல் பரப்புரையில் மமதா பானர்ஜி பேசிய பல்வேறு வரிகள் பற்றிய கேள்விகளுக்கு தமது பதிலில் விளக்கம் தராமல் அவர் தவிர்த்து விட்டதாக தெரிவித்துள்ளது.

மேலும், "பெண் வாக்காளர்களை வாக்குகளை செலுத்த விடாமல் மிரட்டும் வகையில் செயல்பட மத்திய காவல் படைக்கு யார் அனுமதி கொடுத்தது? 2019இலும், 2016இலும் இப்படித்தான் அவர்கள் செயல்பட்டனர். யாருடைய உத்தரவின்கீழ் அவர்கள் அப்படி செயல்படுகிறார்கள் என எனக்குத் தெரியும். நமது தாய்மார்கள், சகோதரிகளை வாக்களிக்க யாராவது அனுமதி மறுத்தால், நீங்கள் எல்லோரும் வெளிவந்து புரட்சி செய்யுங்கள். அஸ்ஸாமில் இருந்து அவர்கள் குண்டர்களை அழைத்து வருவார்கள். எனவே, அஸ்ஸாமை இணைக்கும் எல்லையை மூடுமாறு தேர்தல் ஆணையத்தை கேட்டுக் கொள்வேன். பூடான் நமது நட்பு நாடு மற்றும் அமைதியான நாடு. ஆனாலும், அந்த எல்லை மூடப்பட வேண்டும். கூச் பெஹாரை சுற்றிய பல பகுதிகள் வங்கதேசத்தில் உள்ளன. அந்த எல்லைகளையும் மூட வேண்டும். எந்தவொரு வெளியாரும் இங்கு வந்து பிரச்னை செய்ய முடியாது," என்று வெட்டப்படாத அவரது பரப்புரையில் இடம்பெற்ற வரிகளை தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த பேச்சுகளுக்கு எல்லாம் மமதா பானர்ஜி உரிய விளக்கம் தரவில்லை. இவை எல்லாம் அவரது செயல்பாடுகள் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக அமைகிறது என தேர்தல் ஆணையம் கருதுகிறது என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

எட்டு கட்ட வாக்குப்பதிவு

மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் உள்ள 294 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக 30 தொகுதிகளுக்கு மார்ச் 27, இரண்டாம் கட்டமாக 30 தொகுதிகளுக்கு ஏப்ரல் 1, மூன்றாம் கட்டமாக 31 தொகுதிகளுக்கு ஏப்ரல் 6, நான்காம் கட்டமாக 44 தொகுதிகளுக்கு ஏப்ரல் 10 ஆகிய தேதிகளில் தேர்தல் நடந்தது.

இதைத்தொடர்ந்து, ஐந்தாம் கட்டமாக 45 தொகுதிகளுக்கு ஏப்ரல் 17, ஆறாம் கட்டமாக 43 தொகுதிகளுக்கு ஏப்ரல் 22, ஏழாம் கட்டமாக 36 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26, எட்டாம் கட்டமாக 35 தொகுதிகளுக்கு ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை வரும் மே 2ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகவுள்ளது.

இந்த தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, இடதுசாரி கட்சிகள் ஆகியவற்றுக்கு இடையே தான் மும்முனை போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வைக்க மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும், 10 ஆண்டுகளுக்கு முன்பு இழந்த அரசை மீண்டும் கைப்பற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், மேற்கு வங்கத்தில் தமது கால்தடத்தை வலுவாக பதிக்கும் முனைப்புடன் பாரதிய ஜனதா கட்சியும் தேர்தல் களமாடுகின்றன.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக