திங்கள், 19 ஏப்ரல், 2021

திமுக கூட்டணிக்கு 205 இடங்கள்.. ஐபேக் நடத்திய எக்சிட் போல்!

minnambalam : ஏப்ரல் 6 ஆம் தேதிக்கும் மே 2 ஆம் தேதிக்குமான இடைவெளியில் தமிழக அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் வாக்குப் பதிவு சதவிகிதத்தையும், மற்ற கணக்குகளையும் வைத்துக் கொண்டு தலையை பிய்த்துக் கொண்டிருக்கின்றன....

வாக்குப் பதிவுகளுக்கு பிந்தைய கணிப்பான எக்சிட் போல் எனப்படும் முடிவுகளை வெளியிட ஏப்ரல் 29 வரை தடை இருப்பதால் முன்னணி செய்தி நிறுவனங்களுக்காக காத்திருக்காமல், கட்சிகளும் தங்களுக்குத் தாங்களே ஏஜென்சிகள் மூலமாக அந்த வேலையைச் செய்து வருகின்றன.... எக்சிட் போல் விஷயத்தில் ஐபேக் தனது அனுபவத்தை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு பணிகளைச் செய்துள்ளது. இது தொடர்பாக ஐபேக் வட்டாரத்தில் பேசியபோது,’  “இதற்கு முன்பு நடந்த தேர்தலில் தமிழகத்தில் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் எத்தனை ஓட்டுகள் இருக்கின்றன, எத்தனை ஓட்டுகள் பதிவாகின, அவற்றில் எந்தக் கட்சிக்கு எத்தனை ஓட்டுகள் விழுந்தன என்ற டேட்டா வெளிப்படையாகவே கிடைக்கிறது. இதன் அடிப்படையில் 2011, 2016 சட்டமன்றத் தேர்தலிலும்,2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் ஒவ்வொரு பூத்திலும் எவ்வளவு ஓட்டு பதிவாகியிருக்கிறது, யார் யாருக்கு எத்தனை ஓட்டுகள் பதிவாகியிருக்கிறது என்பதை எடுத்து வைத்துக் கொண்டோம்.

இந்த முறை திமுகவின் பூத் ஏஜென்டுகளில் ஐபேக் சார்பாக பயிற்சி அளிக்கப்பட்டவரும் உள்ளே சென்று அமர்ந்திருந்தார். ஏற்கனவே இருக்கும் டேட்டாக்களின் அடிப்படையில்... அந்தந்த வாக்குச் சாவடியைச் சேர்ந்த அவர் ஏற்கனவே திமுகவுக்கு சாதமான வாக்காளர்கள் வந்துவிட்டார்களா, அவர்களின் வாக்குப் பதிவாகிவிட்டதா என்பதை கவனித்துக் கொண்டிருந்தார். ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை வெளியே வந்து...வெளியே ஐபேக் சார்பில் பணியாற்றும் இன்னொருவரிடமும் விவரங்களைச் சொல்லுவார். அதன் அடிப்படையில் திமுகவுக்கு சாதகமான வாக்குகளை பூத்துக்குள் கொண்டு செல்லும் பணிகளை வெளியே இருக்கும் திமுகவினர் செய்தார்கள்.... தவிர, வாக்களித்துவிட்டு வந்தவர்களிடம் லேசாக பேச்சு கொடுத்து அவர்கள் எந்த கட்சிக்கு வாக்களித்தார்கள் என்பதை ஐபேக் எக்சிட் போல் குழுவினர் உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள், அவர்களுடன் ஒரு செஃல்பி எடுத்துக் கொள்கிறார்கள். பின் சில நாட்கள் கழித்து அவர்களின் வீடு தேடிச் சென்று தேர்தல் தினத்தன்று சொன்னதைத்தான் இப்போதும் சொல்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக்கொள்கிறார்கள்.

ஒரு சில இடங்களில் வாக்குச் சாவடி வாசலில் சொன்னதற்கு மாறாகவும் சிலர் நேரடி விசாரணையில் சொல்லியிருக்கிறார்கள். அதாவது வாக்களித்துவிட்டு வந்ததும் சூரியன் என்று சொன்னவர்கள், நேரடி விசாரணையில் மாம்பழம் என்று மாற்றியும் சொல்லியிருக்கிறார்கள். இந்தக் கணக்குகளை எல்லாம் கழித்து, மீண்டும் கடந்த வாரம் வரை நடத்திய ஆய்வுகளுக்குப் பின் ஐபேக் நடத்திய எக்சிட் போல் முடிவில் திமுக கூட்டணிக்கு 205 இடங்கள் கிடைக்கும் என்று திமுக தலைவரிடம் சொல்லியிருக்கிறார்கள். அதன் அடிப்படையிலேயே ஸ்டாலின் கொடைக்கானல் சென்று எதிர்கால வியூகங்களை வகுத்துக் கொண்டிருக்கிறார்” என்கிறார்கள்.

வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக