புதன், 31 மார்ச், 2021

திமுக ஆட்சிக்கு வந்தால் : எச்சரித்த மோடி

மின்னம்பலம் :திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனித் தொகுதியில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார்.
அவரையும் வேட்பாளர்களையும் ஆதரித்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 30) தாராபுரம் - உடுமலை சாலையில் பிரச்சாரம் செய்தார்.
இதற்காக அவர் டெல்லியிலிருந்து  கோவை வந்தார். முதலில், கேரளா சென்று பிரச்சாரம் மேற்கொண்ட அவர் அங்கிருந்து தாராபுரம் வந்து பிரச்சாரம் செய்தார்.
இந்த பிரச்சாரக் கூட்டம் கவுண்டச்சி புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட மாருதி நகர் அருகே 68 ஏக்கரில் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
இதில், பாஜக வேட்பாளர்களுடன் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,  தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், வானதி சீனிவாசன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.நிகழ்ச்சியில்  பிரதமர் மோடிக்கு எல்.முருகன் வேல் ஒன்றைப் பரிசாக  வழங்கினார். இதைத்தொடர்ந்து  பேசிய பிரதமர் மோடி, வெற்றி வேல், வீர வேல் என்று முழக்கமிட்டார். அப்போது கூட்டத்திலிருந்த பாஜக தொண்டர்களும்  வெற்றி வேல் வீர வேல் என முழக்கமிட்டனர்.

தமிழகத்தின் மிக பழமையான நகரத்திற்கு  வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். திருப்பூர் குமரன், தீரன் சின்னமலை, பொல்லான், காலிங்கராயன் போன்றோரைக் கொடுத்த ஊர் இது என புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி,  “உலகிலேயே மிகவும் பழமையான மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியில், ஐக்கிய நாடுகள் மன்றத்தில் பேச  வாய்ப்பு கிடைத்தது என் வாழ்நாளில் மிகவும் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று. தமிழ் மொழியையும், பண்பாட்டையும் மேம்படுத்த நாங்கள் விரும்புகிறோம்” என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர்,  “இன்னும் ஒரு சில நாட்களில் புதிய சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க இருக்கிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இந்த குடும்பம், உங்களுடைய ஆசீர்வாதத்தை வேண்டி இருக்கிறது.  எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் லட்சியத்தால் உத்வேகம் பெற்றிருக்கிறோம். தாராபுரம் பகுதி மக்கள் நீண்டகாலமாக ரயில் பாதை  கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.  அதை  மத்திய அரசு பரிசீலிக்கும்.

மருத்துவ கல்வி உள்ளிட்டவற்றைத் தாய்மொழி கல்வியில் கற்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தேவேந்திரகுல வேளாளர்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

மேலும், ”ஒருபுறம் வளர்ச்சிக்கான திட்டத்தைத்  தேசிய  ஜனநாயகக் கூட்டணி உங்களிடம் வைக்கிறது. மறுபக்கம்   திமுக- காங்கிரஸ் கூட்டணி, அவர்களுடைய குடும்ப வாரிசு அரசியல் திட்டத்தை முன் வைத்திருக்கிறது.  தற்போது காங்கிரஸ் மற்றும் திமுக புதிதாக ஒரு ஏவுகணையை ஏவ துவங்கியிருக்கிறது.  அந்த 2ஜி ஏவுகணை ஒரே நோக்கத்திற்காக ஏவப்பட்டிருக்கிறது. அதாவது  பெண்களை இழிவுபடுத்துவதற்காக ஏவப்பட்ட ஏவுகணையாக இருக்கிறது.  காங்கிரஸும், திமுகவும் உங்களுடைய  கட்சியினரைக் கட்டுப்படுத்துங்கள். தமிழகத்தில் இருக்கக் கூடிய பெண்கள் இவ்வாறு இழிவுபடுத்துவதை பார்த்துக்கொண்டிருக்கமாட்டார்கள்.  முதல்வரின் தாயாரை இழிவுபடுத்திப் பேசியிருக்கிறார்கள். இவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழக பெண்களின் நிலையை நினைத்துப் பாருங்கள். இன்னும் பெண்களை இழிவுபடுத்துவார்கள்.

திண்டுக்கல் லியோனி என்ற திமுக பேச்சாளர் பெண்களை இழிவுபடுத்திப் பேசியதை திமுக தலைவர் கண்டிக்கவில்லை. திமுக இளவரசர்,அந்த கட்சியின்  மூத்த தலைவர்களை எல்லாம்  ஓரம் கட்டிவிட்டு இன்று நடுநாயகமாக இருக்க அவரும் அருவருக்கத்தக்க வகையில், பெண்களைப் பற்றி பேசியிருக்கிறார். அவரையும் திமுக தடுக்கவில்லை.

1989 மார்ச் 25ஆம் தேதி ஜெயலலிதாவைச் சட்டமன்றத்தில் திமுக தலைவர்கள் எப்படி நடத்தினார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.  திமுகவும், காங்கிரஸும் பெண்களுக்கு உறுதுணையாக இருந்தது இல்லை. தமிழகத்தில் மட்டும் அல்ல, மேற்கு வங்கத்தில் இவர்கள் நட்பு கட்சியான திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் தாக்கியதில் வயதான பெண் ஒருவர் உயிரிழந்திருக்கிறார்” என்று குறிப்பிட்டார் மோடி.

ஆண்டாள், ஒளவையார் ஆகியோரது கருத்துகளால் ஊக்கம் பெற்ற, தாங்கள் பெண்கள் மேம்பாட்டுக்கான திட்டங்களைச் செயல்படுத்துகிறோம் என்று  கூறிய பிரதமர்,  “தூய்மை பாரத திட்டத்தில் கட்டப்பட்ட கழிப்பறைகள் பெண்களுக்கு உதவிகரமாக இருந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள 32 லட்சம் பெண்கள் எரிவாயு இணைப்புகளால் பயனடைந்துள்ளனர்.

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் கிராமப்புறத்தில் 3 லட்சம் வீடுகளும் நகர்ப்புறத்தில் 3.8 லட்சம் வீடுகளும் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. மகளிர் பேறுகால உதவி திட்டத்தின் கீழ் 10 லட்சம் பெண்கள் பயன்பெற்றுள்ளனர்” என்றார்.

கொங்குப் பகுதி மக்களைப் பாராட்டுகிறேன். கொங்குப் பகுதி மக்கள் நாட்டிற்கு மரியாதை கொடுக்கிறீர்கள், செல்வத்தை கொடுக்கிறீர்கள். உங்கள் வியாபார நேர்த்தியை மக்கள் அறிவார்கள். நீங்கள் அளவிட முடியாத கருணையும் கொண்டவர்கள். கடந்த ஆண்டு மக்களுக்கு எப்படி உதவி செய்தீர்கள் என்பதைப் பார்த்தோம். நானும், மத்திய அரசும் இப்பகுதி வியாபார தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்போம் என்று தெரிவித்த பிரதமர் மோடி,

“தமிழகத்தில் வரவிருக்கிற ராணுவத் தளவாட உற்பத்தி தொழிற்சாலையால் வேலைவாய்ப்புகள் உருவாகும். அதேபோல் இங்கு பொம்மை உற்பத்திக்கான மையம் உருவாக்கப்பட்டு, உலக அளவில் தரமான பொம்மைகள் தயாரித்து ஏற்றுமதி செய்யப்படும் மாநிலமாக இந்தியா மாறும்.

நம் நாட்டின் முதுகெலும்பாக இருக்கக் கூடியது சிறு குறு நிறுவனங்கள்.  3.6 லட்சம் சிறு குறு தொழில் நிறுவனங்கள், 14 ஆயிரம் கோடி வட்டி தள்ளுபடி திட்டத்தில் பயன்பெற்றுள்ளன. அதே போன்று, 8.5 சதவீத தொழில் நிறுவனங்கள் கடன் உதவி திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளன. சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிக்காகத் தேசிய ஜனநாயகக் கூட்டணி பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.

ஆனால் திமுக மற்றும் காங்கிரஸின் ஊழல் கண்கள் நம்முடைய  தொழில்கள் வளர்வதை அனுமதிக்காது.  அவர்கள் ஆட்சிக் காலத்தில் மின் வெட்டு இருந்தது.  அதனால்  அப்போது  தொழில் பாதிக்கப்பட்டது.

விவசாயிகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பது திருக்குறளின் மையக் கருத்து.  விவசாயம் செய்ய முடியாத மற்றவர்களுக்காகவும் விவசாயிகள் உழைக்கிறார்கள்.  நம்முடைய நோக்கம், சிறு விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டு என்பதாகும்.  விவசாயிகளுக்கான பல திட்டங்கள் வாக்குறுதியில் கொடுக்கப்பட்டுள்ளன. மீனவர்களுக்கும், விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு 6000 ரூபாய் வழங்கப்படுகிறது.  நீர் ஆதாரங்களுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.  அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 16 லட்சம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

உங்களிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன். பாஜகவின் வாக்குறுதியை முழுமையாகப் படித்துப் பாருங்கள்” என்று  பேசினார் பிரதமர் மோடி.

முன்னதாக பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் நம்முடைய கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் 234 தொகுதிகளிலும் வெற்றிபெற்று வாகை சூடுவார்கள். பிரதமர் மோடி ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் இந்தியாவை உயர்த்த இரவு பகல் பாராமல் உழைக்கிறார். உலக அளவில், இந்தியாவை வல்லரசாக்கப் பிரதமர் உழைத்துக்கொண்டிருக்கிறார்.

உள்கட்டமைப்பில் தமிழகம் சிறந்த மாநிலமாக இருக்கிறது. இதற்கு  உதவிய பிரதமருக்கு மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் வளர்ச்சியை அடைந்து வருகிறோம்”  என்றார்.  மேலும், அத்திக்கடவு அவினாசி திட்டம், உலக முதலீட்டாளர் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்கள், திருப்பூர் மாநகராட்சிக்கு 950 கோடி ரூபாயிலே ஸ்மார்ட் சிட்டி திட்டம் ஆகியவை குறித்துக் குறிப்பிட்டு பிரச்சாரம் செய்தார்.

துணை முதல்வர் பன்னீர் செல்வம், “இந்தியாவை இருளுக்குள் தள்ளிய கட்சி காங்கிரஸ். மத்தியில் 16 ஆண்டுகள் ஆண்ட போதும் தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் எந்த திட்டத்தையும் காங்கிரஸ்-திமுக கொண்டு வரவில்லை. தற்போது, ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. என்னை ஜல்லிக்கட்டு நாயகன் என்று சொன்னார்கள்.  மெரினாவில் போராட்டம் நடந்த போது, நான் முதல்வராக இருந்தேன்.

மெரினாவில் 15 லட்சம் பேர் கூடியதும் உடனடியாக டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்தேன். அவரிடம் விவரத்தை எடுத்துக் கூறினேன். அவர் 24 மணி நேரத்தில் 4 துறைகளின் அனுமதி பெற்று ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவு பெற்றுத் தந்தார். ஜல்லிக்கட்டு தடையை உடைத்தெறிந்த பெருமை மோடியையே சாரும். ரியல் ஜல்லிக்கட்டு கதாநாயகன் பிரதமர் மோடி தான்"  என்று புகழாரம் சூட்டினார்.

-பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக