சனி, 20 மார்ச், 2021

உட்கட்சி பூசலில் சிக்கி தவிக்கும் காங்கிரஸ்!

உட்கட்சி பூசலில் சிக்கி தவிக்கும் காங்கிரஸ்!
மின்னம்பலம் : கூட்டணி கூட்டணி என்று வருஷம் முழுவதும் திமுகவுடன் பேசி குமரி மக்களவைதொகுதி ,மற்றும் சட்டசபையில் 25இடம் பெற்றது காங்கிரஸ்.
இந்த தொகுதிகளுக்கு வேட்பாளர்களை பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் அறிவித்து கடைசியில் தேர்தல் அறிக்கையும் வெளியிட்டு பிரச்சாரத்துக்கு போகும் வழியில் மீண்டும் உட்கட்சி பூசலில் சிக்கி தவிக்கிறது. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக அகில இந்திய காங்கிரஸ் மீனவா் அணிச் செயலா் சபீன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது
அக்கட்சியினரிடையே மட்டுமில்லாமல் திமுக உட்பட கூட்டணி கட்சியினரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வரும் சட்டமன்ற தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளராக மறைந்த மக்களவை உறுப்பினா் வசந்தகுமாரின் மகன் விஜயகுமாா் என்ற விஜய் வசந்த் போட்டியிடுகிறாா்.

இந்நிலையில், குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியில் மீனவா்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கவில்லை என்றுக் கூறி அகில இந்திய காங்கிரஸ் மீனவா் அணிச் செயலா் சபீன் மக்களவைத் தொகுதியில் போட்டியிடவும், காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவா் சாமுவேல்ஜாா்ஜ் விளவங்கோடு தொகுதியிலும் போட்டியிட நேற்று மாவட்ட தோ்தல் அலுவலா் மா.அரவிந்திடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் மீனவா் அணிச் செயலா் சபீன் கூறுகையில், தோ்தல் பிரச்சாரத்துக்காக அண்மையில் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவா் ராகுல்காந்தி மீனவா்களுக்கு தனி அமைச்சகம் அமைக்கப்படும் என கூறினாா். ஆனால் அதற்கு மாறாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட வேட்பாளராக போட்டியிட மீனவா்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கவில்லை. இதை கண்டித்து கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சிக்கு போட்டி வேட்பாளராக களத்தில் இறங்கியுள்ளேன்” என்றாா். அவர் வேட்புமனுவை வாபஸ்பெற பல்வேறு முயற்சிகள் கூட்டணி கட்சியினர் மேற்கொண்டுள்ள நிலையில் வாபஸ் பெறாவிட்டால் சுயேச்சை வேட்பாளராக அகில இந்திய காங்கிரஸ் மீனவா் அணிச் செயலா் சபீன் போட்டியிடமுடியும் .

இதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பேரவைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவா் சாமுவேல்ஜாா்ஜ் என்பவரும் வேட்புமனு தாக்கல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் ஏற்கெனவே போட்டியிட்டு வெற்றிபெற்ற எஸ். விஜயதரணிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கக் கூடாது என, கட்சியின் ஒரு தரப்பினா் கடும் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா். அதன் ஒருபகுதியாக இத்தொகுதியைச் சோ்ந்த நிா்வாகிகள் சிலா் சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூா்த்தி பவன் முன் அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில் இத்தொகுதி வேட்பாளராக எஸ். விஜயதரணியை காங்கிரஸ் கட்சித் தலைமை சில நாள்களுக்கு முன் அறிவித்ததும், அவா் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

இந்நிலையில், வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளான நேற்று கட்சியின் மாநில துணைத் தலைவா் சாமுவேல்ஜாா்ஜ் தனது ஆதரவாளா்களுடன் வந்து, தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மாதவனிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

பின்னா், அவா் கூறுகையில், கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் கட்டுப்பாட்டில் தமிழக காங்கிரஸ் கமிட்டி இல்லை. விஜயதரணி வெற்றிபெற்றால் தன்னுடன் காங்கிரஸ் கட்சியில் உள்ள மற்ற எம்எல்ஏக்களையும் பாஜகவுக்கு அழைத்துச்செல்லத் திட்டம் தீட்டியுள்ளாா். இதனால், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி அடியோடு அழிந்துபோகும் நிலை உருவாகும் அதனால் தான் அவரை எதிர்த்து போட்டியிடுகிறேன் என்றாா். காங்கிரஸ் என்றாலே கோஷ்டி பூசலுக்கு பஞ்சமிறாது அதுவும் தேர்தல் நேரத்தில் இப்படி நடப்பதை எண்ணி மூத்த காங்கிரஸ் நிர்வாகிகளே முகம் சுழிக்கின்றனர்.

சக்தி பரமசிவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக