வெள்ளி, 5 மார்ச், 2021

உதயநிதிக்கு சீட் மறுக்கும் ஸ்டாலின்

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்கு சீட் மறுக்கும் ஸ்டாலின்

minnambalam :மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.    “திமுக வேட்பாளர் பட்டியல் வரும் 10 ஆம் தேதி வெளியிடப்படுமென்ற தகவல் பரவி வரும் நிலையில், அதோடு சேர்ந்த கூடுதல் எதிர்பார்ப்பாக திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவாரா இல்லையா என்ற கேள்வி திமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது.

உதயநிதி ஸ்டாலினுக்காக ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி உள்ளிட்ட தொகுதிகளில் பலர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்திருக்கிறார்கள். பிப்ரவரி 25 ஆம் தேதி உதயநிதியே சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவதற்கான தனது விருப்ப மனுவை அறிவாலயத்தில் சமர்ப்பித்தார். 


இந்நிலையில்தான் சில நாட்களுக்கு முன்... உதயநிதி வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடமாட்டார் என்று தகவல்கள் பரவின. முதலில் ஒரு தொலைக்காட்சி இதை செய்தியாக வெளியிட, அதன் பின் பல தொலைக்காட்சி ஊடகங்களும் தொடர்ந்து இதையே செய்தியாக வெளியிட்டன. இந்நிலையில் இதற்காகவே அறிவாலயத்தில் முதன்மைச் செயலாளர் கே.என். நேருவும், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும் செய்தியாளர் சந்திப்பு நடத்தி விளக்கம் அளித்தனர். ஆனால் உதயநிதி தேர்தலில் போட்டியிடுவதில் இன்னும் அறிவாலயத்தில் விவாதங்கள் நடந்து வருகின்றன.

உதயநிதி ஸ்டாலின் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது எவ்வித பதவியும் இல்லாமல் தமிழகம் முழுதும் பிரச்சாரம் செய்தார். திமுக கூட்டணி அப்போது பெற்ற பெரு வெற்றி காரணமாக உதயநிதிக்கு இளைஞரணிச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது சன் டிவிக்கு ஸ்டாலின் அளித்த சிறப்புப் பேட்டியில், ‘உங்கள் குடும்பத்தினருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படுமா என்று கேட்டதற்கு, ‘என் குடும்பத்தினர் யாரும் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள். இது உறுதி உறுதி உறுதி’ என்று பதிலளித்தார் ஸ்டாலின். பேட்டிக்கு முன்னர் தயார் செய்யப்பட்ட கேள்விகளைப் பார்த்த கலாநிதிமாறன் இதை சுட்டிக் காட்டி, ‘இந்த கேள்வி வேண்டுமா, தவிர்த்துவிடலாமே?’ என்று கேட்டிருக்கிறார். ஆனால் ஸ்டாலின் தான் இந்த கேள்வியும், பதிலும் இருக்கட்டும் என்று சொல்லிவிட்டார்.

இதற்கிடையில் திமுகவின் தேர்தல் உத்தி வகுப்பு நிறுவனமான ஐபேக் கும், ‘கலைஞரின் வாரிசு என்ற பிரச்சாரம் ஸ்டாலினுக்கு எதிராக பலமாக பேசப்பட்டது. ஆனால் அதை முறியடித்து நீண்ட கால அரசியல் பணியின் அடிப்படையில் திமுகவின் தலைவராக உயர்ந்தார். இந்த நிலையில் உதயநிதிக்கு இப்போது தேர்தலில் நிற்க வாய்ப்பு கொடுத்தால் அது கட்சிக்குள்ளேயும் கட்சிக்கு வெளியேயும் திமுகவுக்கு எதிரான வாரிசு அரசியல் என்ற பிரச்சாரத்துக்கு உயிர் கொடுக்கும்’ என்று தெரிவித்தது.

அதற்கேற்றாற்போல் அதிமுக சார்பில் தேர்தல் பிரச்சாரம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘திமுகவில் துரைமுருகன் போன்ற தகுதியான தலைவர்கள் பலர் இருக்கும்போது ஸ்டாலின் மகன் என்ற ஒரே தகுதியின் அடிப்படையில் உதயநிதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஒரு குடும்பத்தின் பிடியில்தான் திமுக இருக்கிறது’என்று பிரச்சாரம் செய்தார். சில நாட்களுக்கு முன் தமிழகம் வந்த அமித் ஷா கூட தன் பிரச்சாரத்தில், ‘மாறன் குடும்பம் 2ஜி (இரண்டு தலைமுறை) கருணாநிதி குடும்பம் 3ஜி ( மூன்று தலைமுறை), நேரு குடும்பம் 4ஜி ) நான்கு தலைமுறையாக அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது’ என்று குறிப்பிட்டார்.

உதயநிதி தேர்தலில் இன்னும் அதிகாரபூர்வமாக நிறுத்தப்படாதபோதே அதிமுக, பாஜக தலைவர்கள் திமுக மீது வாரிசு அரசியலையும் உதயநிதிக்கு கொடுக்கப்படும் அதீத முக்கியத்துவத்தையும் குறிவைத்து தாக்குதல் நடத்த ஆரம்பித்துவிட்டனர். ஒருவேளை உதயநிதிக்கு தேர்தலில் நிற்க வாய்ப்பு கொடுக்கப்படும் பட்சத்தில், ‘ஸ்டாலின் முதல்வரானால், உதயநிதிதான் நிழல் முதல்வராக செயல்படுவார். அப்படிப்பட்ட ஆட்சி உங்களுக்கு தேவையா?’ என்று அதிமுக,பாஜகவினர் பிரச்சாரத்தை கூர்மைப்படுத்த திட்டமிட்டுள்ளனர். இது நடுத்தர மக்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் ஸ்டாலினின் இமேஜுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஐபேக் சுட்டிக் காட்டியிருக்கிறது.

மேலும் தனது குடும்பத்தில் யாரும் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் இது உறுதி உறுதி என்று சொன்ன ஸ்டாலினின் வீடியோ பேட்டியையும் எடுத்து சமூக தளங்களில் பரப்பி, ஸ்டாலின் சொல்கிற எதையும் செய்ய மாட்டார் என்றும் பிரச்சாரம் செய்ய அதிமுக திட்டமிட்டுள்ளது.

இதுமட்டுமல்ல...ஸ்டாலினுக்கு நெருக்கமான அக்னி தல திமுக பிரமுகரின் மகனே விருப்ப மனு கொடுத்துவிட்டு, சபரீசனை சந்தித்து தனக்கு சீட் கேட்டிருக்கிறார். ‘இது உங்க அப்பாவுக்கு தெரியுமா?’ என்று சபரீசன் கேட்க, ‘தெரியும்’என்று பதிலளித்திருக்கிறார் அந்த வாரிசு. சபரீசன் இதை ஸ்டாலின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார்.

இதையெல்லாம் அறிந்துதான் ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்பு உதயநிதியை தனியாக அழைத்து, ‘இந்தத் தேர்தலில் நீ போட்டியிட வேண்டாம். ஏற்கனவே நம் கட்சிப் பிரமுகர்கள் சிலர் தங்கள் மகனுக்கு சீட் கேட்டு வருகின்றனர். நான் உனக்குக் கொடுத்தால் அவர்களுக்கு இல்லையென்று சொல்ல முடியாது. இப்படி வாரிசுகளுக்குக் கொடுத்தால் நம் மீதான எதிர்க்கட்சிகளின் விமர்சனமும் பலமடையும். எனவே ஆட்சி அமைத்த பிறகு பார்த்துக்கொள்ளலாம்’என்று கூறியிருக்கிறார் ஸ்டாலின். இதைக் கேட்டு உதயநிதி அதிருப்தியாகி வெளியே சென்றுவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக