வியாழன், 11 மார்ச், 2021

காங்கிரஸ் - திமுக: கேட்பதும் மறுப்பதும் - இழுபறிக்குக் காரணம் என்ன?

காங்கிரஸ் - திமுக: கேட்பதும் மறுப்பதும் -  இழுபறிக்குக் காரணம் என்ன?

minnambalm : அதிமுகவில் தொகுதிப் பங்கீடுப் பட்டியல் மட்டுமல்ல... வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டு வரும் நிலையில் திமுகவில் கூட்டணிக் கட்சிகளுக்குரிய தொகுதிப் பங்கீடே இன்னும் முடியவில்லை.

தொகுதிகளின் எண்ணிக்கையைதான் குறைத்துவிட்டீர்கள், நாங்கள் கேட்கும் தொகுதிகளையாவது கொடுங்கள் என்று காங்கிரஸ் தரப்பில் விடாமல் கேட்கிறார்கள். குறிப்பாக சில தொகுதிகளில் காங்கிரஸுக்கும் திமுகவுக்கும் இடையே இழுபறி நிலவுகிறது.    தற்போதைய காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் கே.ஆர்.ராமசாமி தனது காரைக்குடி தொகுதியில் இருந்து மாறி திருவாடானை சட்டமன்றத் தொகுதியில் இருந்து போட்டியிட விரும்புகிறார். ஆனால், திருவாடானை தொகுதியைத் தர முடியாது என்று திமுக தரப்பில் கடுமையாக இருக்கிறார்கள். சிட்டிங் காரைக்குடியிலேயே நில்லுங்கள் என்று சொல்கிறது திமுக.

மேலும், கோவை மேற்கு தொகுதியை காங்கிரஸ் கட்சி உறுதியாகக் கேட்கிறது. ஆனால், இந்தத் தொகுதியை ஒரு பெண் வேட்பாளருக்குத் தருவதற்காக எ.வ.வேலு விட்டுக்கொடுக்க மறுக்கிறார்.

அதேபோல மதுரவாயல் தொகுதியை காங்கிரஸ் கேட்கிறது. ஆனால், டி.ஆர்.பாலு தனக்கு வேண்டப்பட்ட ஒருவருக்கு அதைக் கொடுப்பதற்காக விட்டுக்கொடுக்க மறுத்து வருகிறார்.

மேலும் திருநாவுக்கரசர் அறந்தாங்கி, இளங்கோவன் மொடக்குறிச்சி, தங்கபாலு சேலத்தில் சேலம் மேற்கு என முக்கிய தொகுதிகளைத் தங்கள் வாரிசுகளுக்காகக் கேட்டு தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள். அதேநேரம் அறந்தாங்கி திமுகவினரோ, காங்கிரஸுக்குத் தொகுதியைக் கொடுக்கக் கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே திமுக தங்களுக்கு ஒத்துழைக்கவில்லை என்று கலைஞர் வரை காங்கிரஸ் புகார் செய்த தொகுதி அறந்தாங்கி. இந்த நிலையில் மீண்டும் நாங்கள் காங்கிரஸுக்குக் கொடுக்கவிட மாட்டோம் என்று மாவட்ட திமுகவினர் பிடிவாதமாக இருக்கிறார்கள்.

இப்படி குறிப்பிட்ட சில தொகுதிகளில் காங்கிரஸும் திமுகவும் விடாப் பிடியாக இருப்பதால்தான் தொகுதிப் பங்கிடுதலில் நேற்று இரவு வரை இழுபறி நீடிக்கிறது என்கிறார்கள் இரு தரப்பிலுமே.

-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக