திங்கள், 15 மார்ச், 2021

மஞ்சை வசந்தன் : சமதர்மத்திற்கும் சனாதனத்திற்குமான இனப்போர்!

May be an image of 2 people and text that says 'நீட் எதிர்ப்புப் பெரும் பயணம் -நிறைவுப் பொதுக்கூட்டம் สT:30.0L'
மஞ்சை வசந்தன்  : வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் வழக்கமாக சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் தேர்தல் மட்டுமல்ல. இது இரு இனங்களுக்கான ஒரு தலைமுறைப் போர்.
இந்த நாட்டில், மக்களாட்சி நிலைக்க வேண்டுமா? _ பாசிச ஆட்சி நடக்க வேண்டுமா?
மாநில உரிமைகள் காக்கப்பட வேண்டுமா? _ பறிக்கப்பட்டு, மத்திய அரசின் ஆணைக்கிணங்க செயல்படும் அடிமை நிலை வேண்டுமா?
அந்தந்த மாநிலங்களின் மொழி காப்பாற்றப்பட்டு அழியாது நிலைக்க வேண்டுமா? _ சமஸ்கிருதம் மட்டுமே இந்தியாவின் ஒரே மொழி என்ற நிலை வேண்டுமா?
அந்தந்த மக்களின் பண்பாடு, கலாச்சாரம், விருப்பங்கள் காக்கப்பட வேண்டுமா? _ ஆரிய கலாச்சாரம் மட்டுமே அனைவர்மீதும் திணிக்கப்படும் நிலை வேண்டுமா?
அவரவர் விரும்பும் மதத்தைப் பின்பற்றும் நிலை வேண்டுமா? _ அனைவரும் இந்து மதத்தை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்ற அவலம் வேண்டுமா?
அவரவர் விரும்பும் கடவுளை வழிபட வேண்டுமா? _ இராமன் என்ற ஒற்றைக் கடவுளையே இந்தியர்கள் எல்லோரும் ஏற்க வேண்டும் என்ற கட்டாய நிலை வேண்டுமா?
அனைவருக்கும் கல்வி வேண்டுமா? அல்லது குலக்கல்வி வேண்டுமா?
பொதுத்துறை வளர்ந்து சமூகநீதி தழைக்க வேண்டுமா? _ தனியார் மயமாகி சமூகநீதி ஒழிக்கப்பட வேண்டுமா?
ஒடுக்கப்பட்ட ஏழை மக்களின் நலனுக்கும் உயர்வுக்கான திட்டங்கள் வேண்டுமா? _ கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சிக்கும் நலனுக்குமான திட்டங்கள் வேண்டுமா?
வேளாண்மை காப்பாற்றப்பட்டு, விவசாயி வாழ்வில் வளம் வேண்டுமா? _ வேளாண்மை ஒழிக்கப்பட்டு கார்ப்பரேட் கம்பெனிகள் பெருக வேண்டுமா?
மருத்துவ வசதிகள் அடித்தட்டு மக்களுக்கும் கிடைக்க வேண்டுமா? _ அது ஏழைகளுக்கு எட்டாத ஏக்க நிலை வேண்டுமா?
எது வேண்டும் என்பதை முடிவு செய்யும் தேர்தல் இது!
மாநிலங்கள் அவை ஒரு காப்பரண்
மத்தியில் மிகப் பெரும்பான்மையோடு பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும்போது மாநில சட்டமன்றத் தேர்தல்கள் மூலம் எப்படி இந்த நிலையை மாற்ற முடியும் என்று நீங்கள் எண்ணலாம், கேட்கலாம்.
பாசிச பி.ஜே.பி. அரசு, தான் நினைப்பதை எல்லாம் சட்டமாக்க மக்களவைப் பெரும்பான்மை மட்டும் போதாது. மாநிலங்களவையின் பெரும்பான்மையும் கட்டாயம் தேவை. மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லையென்றால் அவர்கள் விரும்பும் சட்டங்களை இயற்ற முடியாது.
மாநிலங்களவை உறுப்பினர்கள் பெரும்பாலும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவே தேர்வு செய்யப்படுகின்றனர்.
எனவே, சட்டமன்ற தேர்தல்களில் பி.ஜே.பி மற்றும் அவர்களின் ஆதரவு கட்சிகளை படுதோல்வி அடையச் செய்வதன் மூலம், பி.ஜே.பிக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாமல் செய்ய முடியும். அதன்மூலம் அவர்கள் இயற்ற முயலும் பாசிசச் சட்டங்களை நிறைவேறாமல் தடுக்க முடியும்.
மேலும், சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க.வையும், அதன் ஆதரவு கட்சிகளையும் தோல்வியுறச் செய்வதன் மூலம், அவர்களின் பாசிச வெறியாட்சிக்கு ஒரு கடிவாளம் போட முடியும்; கட்டுப்படுத்த முடியும். மக்கள் விரோத சட்டங்களை _ திட்டங்களைக் கொண்டு வந்தால், மக்கள் அடுத்த தேர்தலில் நம்மை படுதோல்வி அடையச் செய்வர் என்ற அச்சத்தை அவர்களுக்கு உருவாக்க முடியும். எனவே, சட்டமன்றத் தேர்தல் என்பது மாநிலத்திற்கானது மட்டுமல்ல, மத்தியில் உள்ள அதிகாரத்தையும் தீர்மானிக்கக் கூடியது; மத்திய ஆட்சியின் ஆணவத்தை, ஆதிக்கத்தை அடித்து நொறுக்கும் ஆற்றல் உடையது என்பதைப் புரிந்து கொண்டு இத்தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியை படுதோல்வி அடையச் செய்ய வேண்டும்.
தமிழகத்தின் நிலை
இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் பா.ஜ.க. பல்வேறு சூழ்ச்சிகளை, சதிகளைச் செய்து தன்னை வளர்த்து நிலை நிறுத்திக் கொண்டாலும் தமிழகத்தில் மட்டும் அக்கட்சியால் காலூன்ற முடியவில்லை. அதற்கு ஒரே காரணம் தந்தை பெரியார் பக்குவப்படுத்தி விழிப்பூட்டிய மண் தமிழகம் என்பதால்தான்.
ஜாதி ஒழிப்பு, சமூகநீதி, பெண்ணுரிமை, சனாதன எதிர்ப்பு, - ஒழிப்பு, சுயமரியாதை, மாநில உரிமை, சமதர்மம், மொழித் திணிப்பு எதிர்ப்பு, பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுத்து பண்பாட்டு மீட்பு போன்ற புரட்சிப் பணிகளைச் செய்து தமிழ்நாட்டைத் தனித்தன்மையுடன் ஆக்கியவர் பெரியார். அதனால், அவர் மறைந்து 47 ஆண்டுகளுக்கு மேலாகியும் அவர் பண்படுத்திய தமிழினம் தனது தனித்தன்மையை இழக்காமல், மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்து வருகிறது.
இதனால், பெரியார் மீது அவதூறுகளைப் பரப்பி அவரை, அவரது கொள்கைகளை மக்கள் வெறுக்கும்படி செய்துவிடலாம் என்று ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் தொடர்ந்து முயன்றும் தோல்வியையே தழுவி வருகின்றன.
அடகு வைத்த அடிமை ஆட்சி!
தி.மு.கழகத்திலிருந்து எம்.ஜி.ஆர். அவர்கள் விலகி வந்து அ.இ.அ.தி.மு.க.வை தொடங்கிய போது ஆரியப் பார்ப்பனர்களின் தலையீடும், அறிவுரையும் அதிகமாயின. ஜெயலலிதா அவர்கள் அக்கட்சியின் தலைவரானதும் திராவிட இயக்கக் கோட்பாடுகளிலிருந்து வெகுவாக விலகிச் செயல்பட்டார். என்றாலும் எம்.ஜி.ஆர் காலத்திலும், ஜெயலலிதா காலத்திலும் மாநில உரிமைகள் விட்டுக் கொடுக்கப்படாமல் காப்பாற்றப்பட்டது.
ஆனால், ஜெயலலிதா அவர்கள் மறைந்த பின், அக்கட்சியை பி.ஜே.பி விழுங்கிச் செரிக்க முயன்றது. இதை நுட்பமாகப் புரிந்து கொண்ட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், அம்முயற்சியை முறியடித்து அ.தி.மு.க. சிதையாது காத்தார். அ.தி.மு.க. சிதைந்தால், அது பி.ஜே.பி வளர்ந்து அந்த இடத்தைக் கைப்பற்றி விடும் என்பதால், அ.தி.மு.க. அழியாது இருக்க வேண்டும். அது திராவிட இயக்கத்துக்கு அரண் என்ற நுட்பத்தை தமிழக அரசியல்வாதிகளுக்கு உணர்த்தினார்.
அ.தி.மு.க.வை அபகரிக்க முயன்று தோற்ற பி.ஜே.பி., மத்தியிலுள்ள அதிகாரப் பலத்தைப் பயன்படுத்தி, அ.தி.மு.க. அரசை தனது அடிமை அரசாக, தன் கட்டளைகளை நிறைவேற்றுகின்ற அரசாக ஆக்கிக்கொண்டது. லஞ்சம், ஊழல், முறையற்று ஈட்டப்படும் பெருஞ்செல்வம் இவற்றோடு, பதவியையும் காப்பாற்றிக் கொள்ள, மத்திய பி.ஜே.பி. ஆட்சியிடம் தங்களை அடகுவைத்துக் கொண்டனர் அ.தி.மு.க. தலைவர்கள்.
ஆக, அ.தி.மு.க ஆட்சி என்ற போர்வையில் பி.ஜே.பி ஆட்சி தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நடந்துவருகிறது. அதன் விளைவாய் மாநில உரிமைகள் தொடர்ந்து பறிபோயின. தமிழ், தமிழர்க்கு எதிரான திட்டங்கள் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் உள்பட அனைத்திலும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அ.தி.மு.க. ஆட்சியை அகற்றுவோம்!
பி.ஜே.பி.யை தமிழகத்தில் காலூன்ற விடாமல் தடுப்பது என்பது பி.ஜே.பி.யை தோல்வியடையச் செய்வதில் மட்டுமல்ல, அ.தி.மு.க.வையும் படுதோல்வி அடையச் செய்வதிலும் உள்ளது. அ.தி.மு.க என்பது பி.ஜே.பி.யின் பினாமி என்று ஆனபின் இரண்டையும் படுதோல்வியடையச் செய்வதே தமிழர்களின் தலையாய இலக்காக இருக்க வேண்டும்.
அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமையாமல் தடுப்பதின் மூலம் மட்டுமே, மாநில உரிமைகளையும், தமிழ் வளர்ச்சியையும், சமூகநீதிப் பாதுகாப்பையும், நீர், இயற்கை வளங்கள், கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படையானவற்றையும் காப்பாற்ற முடியும்.
தற்போது உயர்கல்வி என்பது இவர்கள் ஆட்சியில் எட்டாக் கனியாகிவிட்டது. 69% இடஒதுக்கீட்டை ஒழித்துவிட்டு, சமூகநீதிக்கு எதிரான முற்பட்ட ஜாதிக்கான 10% இடஒதுக்கீட்டை உயர்கல்வித்துறையில் நடைமுறைப்படுத்தும் அநியாயம் அண்மையில் அரங்கேறியுள்ளது.
தமிழகத்திற்கு எதிரான பி.ஜே.பி. ஆட்சி
மத்தியில் பி.ஜே.பி ஆட்சி அமைந்ததிலிருந்தே 7 ஆண்டுகளாக தமிழகத்திற்கு எதிரான செயல்பாடுகள் ஒவ்வொரு நாளும் நடத்தப்படுகின்றன.
தமிழைப் புறக்கணித்து ஹிந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிப்பது; தமிழகத்திற்குரிய மருத்துவ இடங்களை அபகரித்து மற்ற மாநிலத்தவர்க்குக் கொடுப்பது; தமிழகத்தில் வடமாநிலத்தவரை எல்லாத் துறைகளிலும் நுழைத்து, தமிழர்களின் வேலைவாய்ப்பைப் பறிப்பது; எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிவிட்டு அதற்கான நிதியை ஒதுக்காமல் இருப்பது; எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்பட்ட மற்ற 16 மாநிலங்களுக்கு நிதியைக் கொடுத்துவிட்டு, தமிழகத்திற்கு மட்டும் நிதியை ஒதுக்கித் தராமல் வஞ்சிப்பது; ஜி.எஸ்.டி.யில் தமிழகத்துக்குத் தரவேண்டிய தொகையைத் தராமல் துரோகம் செய்து, சுற்றுச்சூழலைக் கெடுக்கக் கூடிய தொழிற்சாலைகளை தமிழகத்தில் அதிக அளவில் கொண்டுவருவது; புயல், வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு தமிழகத்திற்கு உரிய நிதியை ஒதுக்காமல் ஓரவஞ்சனை செய்வது; தமிழர் பெருமையை மறைக்க கீழடி அகழாய்வை நிறுத்தியது; செம்மொழி அலுவலகத்தை மைசூருக்கு மாற்றி செயல்படாமல் செய்தது; தமிழ் வளர்ச்சிக்கு நிதியைத் தராமல் சமஸ்கிருதத்துக்கு மட்டும் ஏராளமாய் வாரி வழங்குவது; தமிழகத்தின் சட்டமன்றத் தீர்மானங்களை உதாசீனப்படுத்தி ஒதுக்கி வைப்பது என்று பல வகையில் தமிழகத்திற்கு எதிரான, தமிழர், தமிழுக்கு எதிரான செயல்களைச் செய்து வருகிறது.
அ.தி.மு.க.வின் அவல ஆட்சி!
தூத்துக்குடியில் அநியாயமாக துப்பாக்கிச் சூடு நடத்தி 13பேரைக் கொன்ற எடப்பாடி, அச்செய்தியை தொலைக்காட்சியைப் பார்த்தே தெரிந்து கொண்டேன் என்று கூறியதைப் போன்ற ஒரு கேவலம், மக்கள் விரோதச் செயல் வேறு இல்லை.
நீட் நுழைவுத் தேர்வினால் தற்கொலை செய்து கொண்ட அனிதா உட்பட பல ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு பலி வாங்கப்பட்டன. 7 பேர் விடுதலையில், நீட் தேர்வு எதிர்ப்பில் சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானங்கள் என்ன ஆயின என்றுகூட தெரியாமல் ஆட்சி நடத்திய கையாலாகாத முதுகெலும்பற்ற ஆட்சி எடப்பாடி ஆட்சி. மின்சாரம் விலைக்கு வாங்கியதில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல்; அண்ணா பல்கலைக்கழகத்தைச் சீரழித்து மாணவர்களின் எதிர்காலத்தைக் கெடுத்த நிருவாகத் திறனற்ற ஆட்சி. எட்டுவழிச் சாலை, வேளாண் சட்ட திருத்தங்களுக்கு ஆதரவு என்று விவசாயிகளுக்கு எதிரான செயல்கள், மத்திய அரசு தரவேண்டிய தொகையைப் போராடிப் பெற முடியாத ஆளுமையற்ற ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி.
தமிழ்நாட்டின் காப்பரண் தி.மு.க.
இந்நிலையில் முதுகெலும்போடு துணிந்து நின்று பி.ஜே.பி.க்கு எதிராகப் போராடி, தமிழர்களின் காப்பரணாய் விளங்குபவை திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமுமாகும். இதில் திராவிடர் கழகமே _ சமுதாய இயக்கம். அரசியல் கட்சியல்ல. அப்படிப் பார்க்கும்போது, அரசியலில் தமிழர்களுக்கான காப்பரண் தி.மு.க. ஆகும்.
விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.முக., பொதுவுடைமைக் கட்சிகள், முஸ்லிம் லீக், தமிழர் வாழ்வுரிமைக் கட்சி மற்றும் தமிழ் உணர்வுள்ள கூட்டணிக் கட்சிகள் தமிழர்களின் நலனுக்குப் போராடுவதோடு, தி.மு.க.வுக்குப் பக்கபலமாய் _ உற்ற துணையாய் களத்தில் நிற்பவை.
காங்கிரசைப் பொறுத்தவரை பி.ஜே.பி.யை அகற்ற இந்திய அளவில் பயன்படும் ஒரே கட்சி. காங்கிரசின் கடந்த கால செயல்பாடுகளில் கசப்புணர்வு இருப்பினும், பி.ஜே.பி.யை ஒப்புநோக்குகையில், அதற்கு மாற்றாக காங்கிரசை நாம் ஆதரிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. பி.ஜே.பி. பேராபத்தான கட்சி என்பதால், அந்த ஆபத்தை அகற்ற காங்கிரசோடு மாநிலக் கட்சிகள் கை கோத்து களம் காண்பதுதான் அறிவுக்கு உகந்தது. பழைய கசப்புகளைப் பேசி, காங்கிரசை கைவிட்டால் பி.ஜே.பி. என்னும் பேராபத்து நம்மைச் சூழும் என்பதைத் தமிழக மக்களும், தமிழர் உணர்வாளர்களும் கருத்தில் கொள்ள வேண்டும்.
தேர்தல் என்று வருகிறபோது யார் வரக்கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
வாக்குகள் பிரியக்கூடாது
தமிழ், தமிழர், தமிழ்நாடு மீது பற்றுகொண்ட அரசியல் கட்சிகள், தங்களுக்குள் முரண்பட்டு மோதுவது, தமிழர்களின் இன எதிரிகளான ஆரியப் பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்கே வழிவகுக்கும். இனத்தின் எதிரிகளான ஆரியப் பார்ப்பனர்கள் மற்றும் அவர்களின் அரணான ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி போன்றவற்றை எதிர்ப்பதை விட்டுவிட்டு, தமிழரா, திராவிடரா? என்று திசைதிருப்பி மோதுவது பா.ஜ.க.வுக்கே துணை செய்வதாய் அமையும். தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் தமிழ் இனத்தின் பிரிவினர். ஆனால், ஆரியப் பார்ப்பனர்கள் தமிழினத்தின் எதிரிகள்; அயல்நாட்டிலிருந்து வந்து குடியேறி ஆதிக்கம் செலுத்தக்கூடியவர்கள். பங்காளிச் சண்டைக்கும், இன எதிரிகளின் ஆதிக்கத்துக்கும் வேறுபாடு உணர்ந்து செயல்படுவதே தமிழர்க்குப் பாதுகாப்பானது; அறிவுக்கும் உகந்தது.
10 ஆண்டுகளாக மாநிலத்தில் ஆட்சியிலிருக்கும் அ.தி.மு.க.வை விட்டு விட்டு, 7 ஆண்டுகளாக மத்தியில் இருக்கும் பா.ஜ.கவை எதிர்க்காமல், எதிர்க்கட்சியான தி.மு.க.வை முதன்மை எதிரியாகக் காட்டுவதும், எதிர்ப்பதும் இனத் துரோகம் மட்டுமல்ல, பா.ஜ.க.வுக்குத் துணைநிற்கும் பச்சை துரோகம்.
தாங்களும் வெற்றி பெறாமல், தி.மு.க.வையும் வெற்றி பெற விடாமல் தடுக்க முயற்சி செய்வது இனத் துரோகம் அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்?
தமிழ், தமிழர், தமிழர் பண்பாடு, தமிழர் உரிமை இவையெல்லாம் காக்கப்பட வேண்டுமானால் பி.ஜே.பி ஆட்சிக்கு வராமல் தடுப்பது ஒன்றே வழியாகும். பி.ஜே.பி.யை மத்தியில் _ அதிகாரத்தில் வைத்துக் கொண்டு தமிழ், தமிழர் நலன் காப்பது என்பது இயலாத கற்பனைக் கனவு ஆகும்!
3% அல்லது 4% வாக்கு வாங்கும் கட்சிகளால் ஆட்சிக்கு வர முடியாது. தி.மு.க. வரக்கூடாது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். அப்படியென்றால் பி.ஜே.பி., அ.தி.மு.க. கூட்டணி வரவேண்டும் என்று விரும்புகிறார்கள் என்று தானே பொருள்? அ.தி-.மு.க. ஆட்சி என்பது பி.ஜே.பி. ஆட்சி என்றுதான் பொருள். தி.மு.க.வை தடுத்து பா.ஜ.க., அ.தி.மு.க. அணியை ஆட்சியில் அமர்த்தினால் அது அடுத்த தேர்தலில் பா.ஜ.க. ஆட்சிக்கு வரத்தானே வழிவகுக்கும்? உண்மை இப்படியிருக்க தி.மு.க. வரக்கூடாது என்று முறுக்கி முழங்குவோர் பி.ஜே.பி.யின் கையாள் என்றுதானே அர்த்தம்? இளைஞர்கள் இவர்களிடம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, இவற்றைக் கூர்மையாகச் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும்.
எடப்பாடியின் ஏலப் போட்டி:
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஏலக் கேள்வியைப் போல், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவிப்பதற்குப் போட்டியாக அறிவிக்கிறார். 4 ஆண்டு ஆட்சியில் இருந்துவிட்டு தேர்தல் நெருங்கியதும் ஏராளமாய் அறிவிப்பது ஏமாற்று வேலை என்று மக்களுக்குத் தெரியாதா?
எதிர்க்கட்சியாய் இருந்தவர்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இவற்றைச் செய்வோம் என்று கூறுவது நியாயம். 10 ஆண்டுகள் ஆண்டவர்கள் இனிமேல் செய்வோம் என்பது எப்படிச் சரியாகும்? 10 ஆண்டுகளில் ஏன் செய்யவில்லையென்று மக்கள் கேட்க மாட்டார்களா?
கொரோனா காலத்தில் ரூ.5,000 கொடுக்கச் சொன்னபோது, ஏது பணம் என்று கூறிய எடப்பாடி, இன்று தேர்தல் நெருங்கியதும் மாதம் ரூ.1500 தருவேன் என்பது ஏமாற்று அறிவிப்பு என்று மக்களுக்குத் தெரியாதா?
ரூ.400க்கு விற்ற கேஸ் சிலிண்டரை ரூ.850க்கு உயர்த்திவிட்டு 6 சிலிண்டர் இலவசமாகத் தருவோம் என்பது நகைப்பிற்குரியதல்லவா? மக்கள் என்ன முட்டாள்களா?
பெட்ரோல், டீசல் விலையும், காய்கறி, மளிகை மற்றுமுள்ள பொருள்களின் விலையும், விண்முட்ட உயர்ந்து நிற்பது மக்களுக்கு எவ்வளவு எரிச்சலையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது என்பது எடப்பாடிகளுக்குத் தெரியாதா? இனி மக்கள் ஏமாற மாட்டார்கள். சரியான தீர்ப்பு வழங்குவார்கள்.
தி.மு.க. மீது அபாண்ட பழிகள்
பொய்யான 2ஜி வழக்கு, கச்சத்தீவை கலைஞர் கொடுத்துவிட்டார் என்ற பொய்யான குற்றச்சாட்டு. இலங்கையில் சிங்கள ராணுவத்தால், தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை தி.மு.க. வேடிக்கை பார்த்தது என்று தொடர்ந்து பழி போடுகின்றனர். சீனாவின் ஆதரவோடு செய்யப்பட்ட படுகொலை அது என்பதை மறைத்து பழியை தி.மு.க. மீது போடுகின்றவர்கள், இலங்கைத் தமிழர்களுக்காக தி.மு.க. இரு முறை ஆட்சியை இழந்ததை மறைப்பது நாணயமான செயலா?
இராஜீவ்காந்தி படுகொலைக்கு தி.மு.க. காரணம் என்று பழி போட்டது போன்ற அப்பட்டமான குற்றச்சாட்டுகள் அல்லவா இவை?
கால்வாய் நீரும் கானல் நீரும்!
திராவிட கட்சியான தி.மு.க. செய்த சாதனைகளும் செய்ய முன்வந்துள்ள திட்டங்களும் நடைமுறைச் சாத்தியமானவை. தி.மு.க. உறுதியளித்ததை என்றைக்கும் நிறைவேற்றத் தவறியதில்லை. தி.மு.க. அளிக்கும் உறுதிமொழிகள் கண்ணுக்குத் தெரியும் கால்வாய் நீர் போன்றது.
ஆனால், மாநில அரசுக்கு அதிகாரம் இல்லாதவற்றையெல்லாம் நாங்கள் செய்வோம் என்று கற்பனைத் திட்டங்களைக் கூறி, கானல் நீரைக் காட்டி ஏமாற்றும் மோசடிப் பேர்வழிகளை இளைஞர்கள் அடையாளம் காண வேண்டும். அவர்கள் வெற்று முழக்கங்களைக் கேட்டு ஏமாறக் கூடாது. மாநில உரிமைகளை முழுமையாகப் பெறாமல் எல்லாவற்றையும் மாற்றுவேன் என்பது உலகமகா மோசடி ஆகும்.
தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிப்பீர்!
நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் சமதர்மத்திற்கும் சனாதனத்திற்குமான தலைமுறைப் போர் என்பதால், தமிழர்கள் விழிப்போடு இருந்து தி.மு.க. கூட்டணிக்கு அனைவரும் வாக்களித்து வெற்றி பெறச் செய்து தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்க வேண்டியதும், மீட்க வேண்டியதும் கட்டாயக் கடமையாகும்!
-மஞ்சை வசந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக