செவ்வாய், 9 மார்ச், 2021

திமுக வேட்பாளர்கள் தேர்வு எப்படி? மமதா பானர்ஜி போல ஸ்டாலின் செய்வாரா?

திமுக வேட்பாளர்கள் தேர்வு  எப்படி? ஸ்டாலின் சொன்ன ரகசியம்!

 மின்னம்பலம்  : திமுகவின் வேட்பாளர் பட்டியல் வரும் 10ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. விருப்ப மனு கொடுத்துவிட்டு, அது வேட்பு மனுவாக மாறுமா என்ற எதிர்பார்ப்போடு ஏகப்பட்ட பேர் காத்திருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக தேர்தல் உத்தி வகுப்பு நிறுவனமான ஐபேக் தான் வேட்பாளர்களைத் தேர்வு செய்கிறது என்ற தகவல் சில மாதங்களாகவே திமுகவில் பரவிக்கிடப்பதால், ஐபேக் யார் யார் பெயரை தலைமைக்குப் பரிந்துரை செய்திருக்கிறது என்ற பரபரப்பும் இந்த எதிர்பார்ப்போடு சேர்ந்துகொண்டிருக்கிறது.

திமுக தலைவர் ஸ்டாலின், வேட்பாளர் தேர்வில் ஐபேக் என்ன சொல்கிறதோ அதையே கேட்டு முடிவெடுக்கிறார் என்பதே திமுக தலைமைக் கழகத்தில் பரவிக்கிடக்கும் செய்தி. மார்ச் 7ஆம் தேதி நடந்த திருச்சி மாபெரும் பொதுக்கூட்டத்தின் ஒவ்வொரு அசைவையும், ஐபேக் சொன்னபடியே நடத்தியிருக்கிறார் ஸ்டாலின். அதிலேயே அப்படி என்றால் வேட்பாளர் தேர்வில் எப்படி ஐபேக்கை மீறி நடப்பார் என்று கேட்கிறார்கள்.

திமுக போட்டியிடும் ஒவ்வொரு தொகுதிக்கும் தலா மூன்று வேட்பாளர்களைக் கடுமையான பரிசோதனைகளுக்குப் பின் தேர்ந்தெடுத்து ஸ்டாலினிடம் கொடுத்திருக்கிறது ஐபேக். அந்தந்தத் தொகுதிகளில் மக்களுக்குப் பிடித்தமானவர்கள், கட்சித் தொண்டர்களிடையேயும் மக்களிடையேயும் செல்வாக்கு பெற்றவர்களை அவர்கள் பட்டியல் போட்டிருக்கிறார்கள். அவர்களின் வழக்கு பின்னணி, கட்சியில் அவர்கள் எத்தனை வருடங்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கும் தொகுதி மக்களுக்குமான தொடர்பு, கட்சித் தலைவர் ஸ்டாலின் மீது அவர்களுக்கு எந்த அளவுக்கு விசுவாசம் இருக்கிறது என்ற தகுதிகளை எல்லாம் வைத்து ஆராய்ந்து, ஒரு தொகுதிக்கு மூன்று பேர் என்ற பட்டியலை ஸ்டாலினிடம் கொடுத்திருக்கிறது ஐபேக். முதல் நபருக்குக் கண்டிப்பாக கொடுக்கலாம், இரண்டாவது நபருக்குக் கொடுக்கலாம் என்ற அடிப்படையில் மூவரை மதிப்பெண் மூலம் வரிசைப்படுத்திக் கொடுத்திருக்கிறது ஐபேக்.

இது ஏற்கனவே ஸ்டாலினிடம் இருக்கிறது. கடந்த சில நாட்களாக விருப்ப மனு கொடுத்தவர்களை நேர்காணல் நடத்தும்போது அருகே அந்தந்த மாவட்டச் செயலாளர்களும் அமர்ந்திருந்தார்கள். ஐபேக்தான் வேட்பாளர்களைத் தேர்வு செய்யப் போகிறது, வேட்பாளர்கள் தேர்வில் நமக்கு எந்த ரோலும் இல்லை என்று மாவட்டச் செயலாளர்கள் நினைத்துவிடக் கூடாது என்பதற்காக வழக்கம்போல் மாவட்டச் செயலாளர்களிடமும் தொகுதிக்கு மூவர் என்ற பட்டியலை வாங்கியிருக்கிறார் ஸ்டாலின்.

ஒரே தொகுதிக்கு ஐபேக் தந்த பட்டியலையும், மாவட்டச் செயலாளர் தந்த பட்டியலையும் வைத்து ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறார் ஸ்டாலின். ஐபேக் கொடுத்த பட்டியலை வைத்துக்கொண்டு, மாவட்டச் செயலாளர்கள் கொடுத்த பட்டியலை சம்பந்தப்பட்ட மாசெக்களிடம் குறுக்கு விசாரணையும் செய்திருக்கிறார் ஸ்டாலின்.

உதாரணத்துக்கு திமுகவின் கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குத்தாலம் அன்பழகன் மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதிக்கு விருப்ப மனு கொடுத்திருந்தார். மயிலாடுதுறை தொகுதிக்கு ஐபேக் கொடுத்த பட்டியலில் அன்பழகன் பெயரை முதல் பெயராக வைத்திருந்தது. ஆனால், இத்தொகுதிக்குரிய மாவட்டப் பொறுப்பாளரான நாகை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் நிவேதா முருகன் கொடுத்த பட்டியலில் அன்பழகன் பெயரே இல்லை. அன்பழகன் கலைஞருக்கு நெருக்கமான முன்னாள் மாவட்டச் செயலாளர் குத்தாலம் கல்யாணத்தின் மகன். தொகுதியிலும் மாவட்டத்திலும் நன்கு அறிமுகமானவர். ஐபேக் பட்டியலில் அன்பழகன் பெயர் முதலில் இருக்கிறது. மாவட்டச் செயலாளர் கொடுத்த பட்டியலில் அன்பழகன் பெயரே இல்லை. இதுகுறித்து நாகை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் நிவேதா முருகனிடமே விசாரித்திருக்கிறார் ஸ்டாலின். அப்போது, ‘தலைவரே நீங்க முடிவெடுங்க. நான் எனக்கு கிடைச்ச ரிப்போர்ட்டை கொடுத்திருக்கேன்’ என்று தடுமாறி பதில் சொல்லியிருக்கிறார் நிவேதா முருகன்.

இதேபோல ஐபேக்கின் பட்டியலில் முதல் பெயரில் இருப்பவர்கள் மாவட்டச் செயலாளர்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்திருக்கிறார்கள். எல்லாம் அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் உட்கட்சிப் பூசலின் உபயம். அப்படிப்பட்ட மாவட்டச் செயலாளர்களிடமெல்லாம், ஸ்டாலின் குறுக்கு விசாரணை செய்திருக்கிறார். என்ன ஏது எனக் கேட்கிறார். இப்படி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் விசாரணை நடத்திதான் வேட்பாளர்களைத் தேர்வு செய்திருக்கிறார் ஸ்டாலின்.

இதற்கிடையே, ‘ஐபேக் கொடுத்த பட்டியலிலேயே சிலர் தங்கள் மக்கள் செல்வாக்கு மூலமாக அல்லாமல் ஐபேக்கில் செல்வாக்கு செலுத்தி இடம்பெற்றிருக்கிறார்கள். அதிலும் சில பேரங்கள் நடந்திருக்கின்றன’ என்றெல்லாம் புகார்களும் தகவல்களும் தலைமை வரை சென்றிருக்கின்றன.

இதுகுறித்து ஐபேக்கில் சிலரிடம் விசாரித்தபோது, “நாங்கள் எந்த பாரபட்சமும் இல்லாமல் திமுக தலைமை எங்களுக்கு இட்ட பணியின் அடிப்படையில் நேர்மையாக மாதக் கணக்கில் ஆய்வு செய்து மூன்று பெயர் கொண்ட பட்டியலை ஒவ்வொரு தொகுதிக்கும் தலைமையிடம் கொடுத்திருக்கிறோம். அதில் உள்ளவர்களை வேட்பாளர்களாகப் போட்டால் வெற்றி பெற வாய்ப்புள்ளது. இந்தப் பட்டியலைத் தாண்டி வேறு யாரையாவது வேட்பாளர்களாக நியமித்தால் அது தலைமையின் பொறுப்பு.

மேற்கு வங்காளத்தில் திருணாமூல் காங்கிரஸில் சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் 30% பேருக்கு சீட் தரக்கூடாது என்று எங்கள் ஆய்வின்படி மமதா பானர்ஜியிடம் அறிக்கை அளித்தோம். அவர்கள் கட்சிக்கு எவ்வளவு முக்கியமானவர்களாக இருந்தாலும் மக்களிடம் அவர்களுக்கு ஆதரவு இல்லை என்பதே எங்கள் ஆய்வு முடிவு. எங்கள் பரிந்துரையை ஏற்றே மமதா பானர்ஜி 30% சிட்டிங் எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுக்கவில்லை. ஸ்டாலினும் அதுபோல செய்கிறாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்” என்கிறார்கள்.

சில நாட்களுக்கு முன் பொதுச் செயலாளர் துரைமுருகனோடு வேட்பாளர் பட்டியல் பற்றி நீண்ட நேரம் பேசிய ஸ்டாலின், “அண்ணன்... வேட்பாளர் பட்டியலை ரொம்ப ஆய்வு செய்து தயார் செய்திருக்கேன். யாரும் எந்தவித எதிர்ப்பும் இல்லாம 100% ஏத்துக்கும்படியா இருக்கும். பட்டியலைப் பாத்துட்டு நீங்களே என்னை நல்லா பண்ணியிருக்கீங்கனு பாராட்டுவீங்க” என்று கூறியிருக்கிறார். ஸ்டாலினின் நம்பிக்கைக்குக் காரணம் ஐபேக் பட்டியல், மாவட்டச் செயலாளர் பட்டியல் இரண்டையும் ஒப்பிட்டு விரிவான விசாரணை நடத்தி அவர் தயாரித்திருக்கும் இறுதிப் பட்டியல்தான்.

மேலும், கலைஞர் தலைவராக இருக்கும்போது விருப்ப மனு தாக்கல் செய்யாதவர்கள்கூட கடைசி நேரத்தில் குடும்பத்தில் யாரோ ஒருவரைப் பிடித்து வேட்பாளராக அறிவிக்கப்பட்டு விடுவார்கள். அதேபோல இப்போதும் குடும்பத்தில் சிலரை பிடித்து வேட்பாளராக ஆவதற்கு பலர் முயற்சி செய்திருக்கிறார்கள். இதையும் துரைமுருகனிடம் குறிப்பிட்டுச் சொன்ன ஸ்டாலின், “குடும்ப வழியா கூட சில தலையீடுகள் வந்துச்சு. ஆனா, எதையுமே நான் பொருட்படுத்தாமல் முழுக்க முழுக்க தகுதியின் அடிப்படையில்தான் நான் வேட்பாளர் பட்டியலைத் தயாரிச்சிருக்கேன்” என்று பெருமிதமாகச் சொல்லியிருக்கிறார்.

முந்தைய தேர்தல்களைவிட இந்தத் தேர்தலில் திமுகவின் வேட்பாளர் பட்டியல் வித்தியாசமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இதன் மூலம் ஏற்பட்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக