ஞாயிறு, 28 மார்ச், 2021

ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு நடந்த அனைத்தும் பா.ஜ.கவின் சதிவேலை" - ஸ்டாலின்

BBC :தமிழகத்தில் பா.ஜ.கவால் வேரூன்ற முடியவில்லை. அதனால் அ.தி.மு.கவை மிரட்டி அவர்களின் நிழலில் சவாரி செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு நடந்த அனைத்து விஷயங்களும் பா.ஜ.கவின் சதிவேலைகள்தான் என்பது அடிக்கடி டெல்லியில் இருந்து பா.ஜ.க தலைவர்கள் வந்து போகிற காட்சிகளைப் பார்த்தாலே அறிய முடிகிறது." என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சேலத்தில் நடந்த திமுக கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசியபோது ஸ்டாலின் இதனை தெரிவித்தார். 10 ஆண்டுகளில் தமிழகம் பாதாளத்துக்குச் சென்றுவிட்டது. ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னால் பழனிசாமி தலைமையிலான ஆட்சி, பிரதமர் மோதிக்கும் அமித் ஷாவுக்கும் அடிபணியும் ஆட்சியாக உள்ளது. மாநில உரிமைகள் எல்லாம் இன்றைக்குப் பறிக்கப்பட்டுவிட்டன.

காவிரி உரிமையைப் பெற்றுத் தராத அரசால் பாதி தமிழகம் பாழ்பட்டுப் போய்விட்டது. மீத்தேன், கூடங்குளம், எட்டு வழிச்சாலை என இவை எல்லாம் மத்திய அரசு நடத்தும் ரசாயன தாக்குதலாகவே பார்க்கிறேன். நம் மீது ரசாயன தாக்குதலையும் கலாசார தாக்குதலையும் மத்திய அரசு நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. இதனை எதிர்ப்பதற்கு தி.மு.கவால் முடியும்" என்றார்.

தொடர்ந்து பேசுகையில், `` தமிழகத்தில் பா.ஜ.கவால் வேரூன்ற முடியவில்லை. அதனால் அ.தி.மு.கவை மிரட்டி அவர்களின் நிழலில் சவாரி செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு நடந்த அனைத்து விஷயங்களும் பா.ஜ.கவின் சதிவேலைகள்தான் என்பது அடிக்கடி டெல்லியில் இருந்து பா.ஜ.க தலைவர்கள் வந்து போகிற காட்சிகளைப் பார்த்தாலே அறிய முடிகிறது. பன்னீர்செல்வம் முதல்வர் ஆனதும் அவரது பினாமி வீடுகளில் ரெய்டு நடந்தது. தலைமைச் செயலகத்தில் ரெய்டு நடந்தது.

மத்திய அரசோடு இணக்கமான உறவு வைத்திருப்பதால் தேவையான நிதி கிடைத்திருக்கிறது என முதல்வர் பழனிசாமி அபாண்டமான பொய்யை கூறியிருக்கிறார். வர்தா புயல் ஏற்பட்டபோது மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்ட நிதி என்பது 23,570 கோடி ரூபாய். ஆனால் வந்தது 266 கோடி ரூபாய் மட்டுமே. ஒக்கி புயல் வந்தபோது தமிழக அரசு கேட்டது 9,302 ரூபாய். ஆனால், வந்த தொகை என்பது 133 கோடிதான். கஜா புயல் வந்தபோது 17,899 கோடி கேட்டதில் வெறும் 1,145 கோடி ரூபாய்தான் வந்தது. நிவர் புயல், புரவி புயல் ஆகியவற்றில் எல்லாம் உரிய நிவாரணம் கிடைத்ததா. தமிழக அரசுக்கு ஜி.எஸ்.டி மூலம் வரவேண்டிய நிலுவைத் தொகை சரியானபடி வந்ததா.. கொரோனா காலத்து நிதியாவது வந்ததா.. அப்புறம் எதற்கு அவர்களோடு கூட்டணி என்று கேட்க விரும்புகிறேன்.

நான் ராகுலிடம் உரிமையோடு கேட்கிறேன். அவரிடம் நான் தொலைபேசியில் பேசும்போது, `சார்' என்பேன். அவர், `பிரதர்' என அழைக்குமாறு கூறுவார். எனவே, சகோதரர் ராகுலிடம் அன்புகலந்த வேண்டுகோள் ஒன்றை வைக்கிறேன். இன்று மதவாத கும்பலிடம் இந்தியா சிக்கிக்கொண்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டமன்றத் தேர்தலிலும் மதச்சார்பற்ற கூட்டணி ஒன்று சேர்ந்துள்ளது. அதனால்தான் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க ஓர் இடத்தில்கூட வெற்றி பெற முடியவில்லை. தற்போதைய கருத்துக்கணிப்புகளும், தமிழ்நாட்டில் `பா.ஜ.க வாஷ் அவுட்' என்ற தகவல்தான் வருகிறது.

மத்தியில் அவர்கள் ஆட்சியிருக்கலாம். நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் பெற்ற வாக்கு சதவிகிதம் என்பது 37 சதவிகிதம்தான். அதேநேரம், 63 சதவிகித மக்கள் பா.ஜ.கவை எதிர்த்து பல்வேறு கட்சிகளுக்கு வாக்குகளைப் பிரித்துப் போட்டுவிட்டார்கள். நான் ராகுலிடம் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் உடனடியாகப் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். இந்திய அளவில் ஓர் கூட்டணியை அமைக்கும் பணியில் நீங்கள் களமிறங்க வேண்டும்.

கலைஞர் இன்றில்லை என்றாலும் அவரை நினைத்துக் கொண்டு தேர்தல் பணிகளை செய்து வருகிறோம். அவர் இறந்த பிறகு அண்ணாவுக்கு அருகில் அடக்கம் செய்ய அனைவரும் விரும்பினோம். அதற்கு அ.தி.மு.க அரசு அனுமதி கொடுத்ததா.. பிரதமர், அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் என்னைத் தொடர்பு கொண்டு, `என்ன உதவி வேண்டும்?' என்று கேட்டார்கள். நானும், `அண்ணாவுக்குப் பக்கத்தில் கலைஞரை அடக்கம் செய்ய விரும்புகிறோம். அவர் 5 முறை முதல்வராக இருந்திருக்கிறார். உலகளவில் தமிழர்களின் அடையாளமாக இருக்கிறார். அப்படிப்பட்ட தலைவருக்கு இடம் வேண்டும். நீங்கள் தலையிட வேண்டும்' என்றேன். ஆனால், பிரதமரும் மௌனமாக இருந்தார். அவர்களுக்குத் தமிழகத்தில் இடம் கொடுக்கலாமா?" என்றார்.

ஸ்டாலினை தொடர்ந்து ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ''தற்போது நடப்பது அரசியல் கட்சிகளுக்கு இடையிலான போர் அல்ல. தமிழகத்தில் பல தேர்தல்களை சந்தித்திருக்கிறோம். அது எல்லாம் அரசியல் கட்சிகளுக்கு இடையில் நடந்த போட்டி. இந்த முறை நடக்கும் தேர்தல் என்பது நேரடியாக தமிழ் மொழி, பண்பாட்டுக்கு, கலாச்சாரத்திற்கு எதிரான தாக்குதலுக்கு எதிரான போட்டி,'' என்றார். 

இந்தியா என்பது பல்வேறு மாநிலங்களின் ஒருங்கிணைப்பு, பல்வேறு மொழிகள், மதங்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு. இங்கு எல்லா மொழிகளுக்கும், மதங்களுக்கும் ஒரேவிதமான மரியாதை தரப்படவேண்டும். இந்தியாவுக்கு ஒற்றை சிந்தனை என்ற சித்தாந்தம் ஒத்துவராது. அதைஒப்புக்கொள்ள மறுப்பதாகவும் தெரிவித்தார் ராகுல்.

''தற்போது உள்ள அதிமுக பழைய அதிமுக அல்ல. தற்போது உள்ள அதிமுக என்பது முகக்கவசம் அணிந்த, பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளால் நடத்தப்படும் அதிமுக என்பதை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு தமிழர் கூட மோதியின் முன் தலையை குனிந்து நிற்க விரும்புவதில்லை, அமித்ஷா முன் காலடியில் விழ முடியாது. ஒரு தமிழர் கூட இதுபோன்ற நபர்கள் முன் தலை குனிந்து, காலடியில் விழ மாட்டார்கள். ஆனால் தற்போது தமிழகத்தில் உள்ள முதல்வர் தலைகுனிந்து நிற்கிறார். ஏனெனில், மோதி,மத்திய புலனாய்வு துறையை கையில் வைத்திருப்பதால், தமிழக முதல்வர் அவருக்கு தலைகுனிகிறார். அதற்கான விலையை அவர் கொடுப்பதில்லை. தமிழக மக்கள்தான் அதற்கான விலையை கொடுக்கிறார்கள். தமிழர்களின் உயர்ந்த பண்பாடு, கலாச்சாரத்தை விலையாக கொடுக்கிறார்கள்,'' என்று விமர்சித்தார்.

மேலும் ''உங்களின் வலிமை என்பது சிறு,குறு தொழில்கள். தமிழகத்தில் இருந்துதான் பலவிதமான காரர்கள் மற்றும் பல விதமான உற்பத்தி பொருட்களை இந்தியா முழுவதும் செல்கிறது. பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி இருபுறமான தாக்குதலை தமிழக உற்பத்தியாளர்கள் மீது செலுத்தியது. லட்சக்கணக்கானவர்கள் வேலையை இழந்துவிட்டார்கள். ஆனால் தமிழக முதல்வர் எதுவும் சொல்லவில்லை. தற்போது இந்திய விவசாயிகளுக்கு எதிராக சட்டம் போடப்பட்டிருக்கிறது. அதை எதிர்த்து ஒருவார்த்தை கூட முதல்வர் தெரிவிக்கவில்லை. அதேபோல, தமிழர்களை வஞ்சிக்கும் நீட் தேர்வுக்கு எதிராக பேசவில்லை. மோதி மற்றும் அமித் ஷா எது வேண்டுமென்றாலும் செய்யலாம், முதல்வர் எதுவும் சொல்லவில்லை,'' என்றும் தெரிவித்தார்.

''எந்தவிதமான சந்தேகமும் இல்லாமல், நீங்கள் உங்கள் மொழி, பண்பாடு மற்றும் வரலாறு ஆகியவற்றின் மீது தாக்குதலை சகிக்கமாட்டீர்கள். ஸ்டாலின்தான் தமிழகத்தின் முதல்வராக இருப்பார் என்பதை மக்களை பார்த்து சொல்லமுடியும். தற்போது தேர்தல் மக்களின் முடிவை உறுதிப்படுத்துவதாக அமையும்.முதலில் அவர்களை தமிழகத்தில் நுழைவதை தடுக்கவேண்டும். பின்னர் அவர்களை டெல்லியில் இருந்து துரத்தவேண்டும். அவர்கள் கடைபிடிக்கும் மோதல் போக்கை தமிழகம் போல இந்தியாவின் பல மாநிலங்களும் விரும்பவில்லை. அன்பு, மரியாதை, பாசம் என்பதுதான் தமிழர்களை அணுகும் ஒரேமுறை என்பதை பாஜகவினர் புரிந்துகொள்ளவில்லை. அவர்களுக்கு இந்த தேர்தல் மூலம் அதனை உணர்த்துவோம்,'' என்றும் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்பட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக