புதன், 17 மார்ச், 2021

கொலை குற்றவாளி தளி.ராமச்சந்திரனை சுமக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி!

May be an image of 7 people and people standing
இளையரசன் பெரியார் : கொலைகார பார்ட்டி ஆப் இந்தியா ராமச்சந்திரனிஸ்ட்! கொலை குற்றவாளி தளி.ராமச்சந்திரனை: சுமக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.இந்தமுறையும் தளி தொகுதியில் ராமச்சந்திரனையே நிறுத்தியிருக்கிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. மாற்று ஆட்சி என்று முழங்கிய மக்கள் நலக் கூட்டணியிலும் 2016 ஆம் ஆண்டில், இ.கம்யூ.சார்பாக இதே தொகுதியில் ராமச்சந்திரன் நிறுத்தப்பட்டார். அப்போது, முகநூலில் அதை நாம் வன்மையாகக் கண்டித்தோம். ஊடகங்களில் சமூக ஆர்வலர்கள், அரசியல் விமர்ச்சகர்கள் பலரும் கண்டித்தார்கள். இப்போது, மீண்டும் அதே தளி தொகுதியில் ராமச்சந்திரன் இ.கம்யூ.கட்சி சார்பாக நிறுத்தப்படுகிறார். தளி ராமச்சந்திரன் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்தானே, அவரை ஏன் வேட்பாளராக நிறுத்தக்கூடாது என்கிறீர்கள் என்று கேட்பவர்கள் ராமச்சந்திரனின் மக்கள் விரோதம் என்னும் இன்னொரு பக்கத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வராகானப்பள்ளியில் பிறந்தவர் ராமச்சந்திரன். அடிதடி பஞ்சாயத்துகள், சமூக விரோதச் செயல்கள் போன்றவற்றால் தமக்கென்று பலத்தைக் கூட்டிக்கொண்ட ராமச்சந்திரன் கிராணைட் தொழிலில் இறங்கினார். வரம்பு மீறி அரசு நிலத்திலும் கிராணைட் வெட்டி எடுத்தார். தம்முடைய அடாவடித் தனத்திற்கு அரசியல் துணைத் தேவை என்பதை உணர்ந்த ராமச்சந்திரன் 2001-ஆம் ஆண்டு நடைப்பெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவளித்தார். பிறகு, இந்திய மார்க்ஸிஸ்ட் கட்சியில் இணைந்தார்.
2006 சட்டமன்றத் தேர்தலில், தளித் தொகுதியில் இடம் கேட்டுக் காத்திருக்க, அத்தொகுதி கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. கட்சியின் கட்டுப்பாட்டை மீறி ராமச்சந்திரன் சுயேட்சையாகப் போட்டியிட்டு அத்தேர்தலில் வென்றார். அத்தேர்தலில் தமிழகத்தில் வென்ற ஒரே சுயேட்சை வேட்பாளர் அவர்தான். அந்த வெற்றிக்கு பின்னணியில் இருந்தவை ராமச்சந்திரனின் பணபலம், ஆள்படை, மிரட்டல் அரசியல் ஆகியவைதான்.
ராமச்சந்திரனை சேர்க்கும் போது கட்சிக்கு வந்த களங்கத்தை கண்டுகொள்ளாத மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அவர் சுயேட்சையாக நின்றதால் களங்கப்பட்டு ராமச்சந்திரனை கட்சியிலிருந்து நீக்கியது. தங்களுடைய வேட்பாளரான நாகிராஜி ரெட்டியை அடாவடியாகத் தோற்கடித்திருந்தாலும் கூட, கட்சியின்றி அனாதையாக்கப்பட்ட ராமச்சந்திரன் மீது பரிவுக்காட்டி அவரை தங்கள் கட்சியில் இணைத்துக் கொண்டது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. கட்சியில் இணைந்ததும் முதல்வேலையாக தம்மிடம் தேர்தலில் தோற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகிராஜியை கொலை செய்ய முயன்றார் ராமச்சந்திரன்.
வழக்கம் போல ராமச்சந்திரனின் அடாவடியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேடிக்கைப் பார்க்க, தம்முடைய உயிருக்கு பாதுகாப்புத் தேடி நாகிராஜி அதிமுகவில் சேர்ந்தார். இதையெல்லாம் தொடர்ந்து ராமச்சந்திரன் சட்டமன்ற உறுப்பினர் என்னும் அதிகாரத்தை வைத்து மேலும் பல அடாவடிகளை செய்து வளர்ந்தார். கிராணைட் ஊழல், பல்வேறு முறைகேடுகள், ரியல் எஸ்டேட் ஆதிக்கம், மோசடிகள், ஆள்கடத்தல்கள், என்று வளர்ச்சிகளை அடைந்துகொண்டிருந்த ராமச்சந்திரனை உச்சிமுகர்ந்து ரசித்துக்கொண்டிருந்தது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி. குறிப்பாக தா.பாண்டியனின் கண்ணுக்கு கம்யூனிஸ வானில் மின்னும் மாபெரும் நட்சத்திரமாய் தெரிந்தார் ராமச்சந்திரன்.
அதைத் தொடர்ந்து 2011இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தளி தொகுதியில் மீண்டும் சட்ட மன்ற உறுப்பினராக ஆனார் ராமச்சந்திரன். அதே காலத்தில்தான், முன்னாள் நக்சல்பாரி இயக்க வாதியாக இருந்து, பிறகு, பெரியார் திராவிடர் கழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட அமைப்பாளராக பொறுப்பேற்றிருந்த தோழர் பழனி என்பவர் அப்பகுதி பிரச்சனைகளை எதிர்த்து போராடினார்.
பழனி அனைத்து சமூகத்து ஏழை எளிய மக்களிடம் இனிமையாகப் பழகக் கூடியவர். எளிமையான வாழ்க்கையில் மக்கள் தொண்டை ஆற்றிவந்த பண்புடையவர். அவர் மக்களின் பிரச்சனைகளை எதிர்த்து களத்தில் நின்றது பிரச்சனைகளின் ஊற்றுக்கண்ணாக இருந்த ராமச்சந்திரனுக்கு பெரும் தலைவலியைக் கொடுத்தது. இத்துனைக்கும் பழனி ராமச்சந்திரனுக்கு நன்கு அறிமுகமானவர்தான். ஆனாலும், தம்முடைய அடாவடி அரசியலுக்கு எவரும் குறுக்கே இருக்கக் கூடாது என்பதில் கறாராக இருந்த ராமச்சந்திரன் பழனியை தீர்த்துக்கட்டும் முடிவை எடுத்தார்.
அதைத்தொடர்ந்து, 2012 ஆம் ஆண்டு, ஜூலை 5 ஆம் தேதி, அந்த எளியத் தோழர் தம்முடைய வயலில், தம்முடைய மகன் வாஞ்சிநாதனின் கண் முன்னாலேயே ராமச்சந்திரனின் கூலிப்படையால் துப்பாக்கியில் சுட்டுக் கொல்லப்பட்டார். அருகில் தம்முடைய மாமனாரோடு காரில் அமர்ந்தபடி அந்தக் கொலையை ரசித்துக்கொண்டிருந்தார் ராமச்சந்திரன். ராமச்சந்திரனுக்கு இன்னும் களிப்பைக் கூட்டும் வகையில், சுட்டுக் கொல்லப்பட்ட பழனியின் தலையை அறுத்து எடுத்துப்போய் அருகில் நின்ற காரில் இருந்த ராமச்சந்திரனின் முகத்தருகே காட்டியது அந்தக் கொலைக்கார கும்பல்.
ராமச்சந்திரனின் கொலைவெறி அரசியலை எதிர்த்து பல இயக்கங்கள் போராடின. அவற்றில் மார்க்ஸிய லெனினிய இயக்கத்தைச் சார்ந்த பாஸ்கர் என்னும் தோழர் சுவரொட்டி ஒட்டிக்கொண்டிருந்த போது, நடுரோட்டில் வைத்து வெட்டிக்கொன்றது ராமச்சந்திரனின் கொலைக்காரக் கும்பல்.
விஸ்வநாதன் என்பவரையும் ராமச்சந்திரன்தான் கொலை செய்தார் என்று அ.மார்க்ஸ் தலைமையிலான உண்மை அறியும் குழு கண்டறிந்து கூறியது.
இப்படியாக மூன்று கொலை வழக்குகளையும் 15 கொலை முயற்சி வழக்குகளையும் பெற்ற ராமச்சந்திரன் கிராணைட் முறைகேடு, ஆள்கடத்தல் போன்ற பலக் குற்ற வழக்குகளிலும் முக்கியக் குற்றவாளியாக இருக்கிறார்.
அவருடைய மனைவியின் மீதும் மாமனாரின் மீதும் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட குற்ற வழக்குகள் பல உள்ளன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய துணைத் தலைவர் சுந்தரேசன் கொலைவழக்கு ராமச்சந்திரனின் மைத்துனர் கேசவமூர்த்தி மீது உள்ளது.
ராமச்சந்திரனின் நிழலுலக ராஜ்யத்தின் தளபதிகளும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர்களும் கூட பயங்கர குற்றப் பின்னணிக் கொண்டவர்கள்தான். அவர்களில் பெரியாசாமி என்பவர் மீது மனைவியைக் கொலை செய்த வழக்கும், சுந்தரேசன் என்பவர் மீது குவாரி உரிமையாளர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கும், பலவண்ணன் என்பவர் மீது ஒரு கொலை வழக்கும், கலீல் என்பவர் மீது ஒரு கொலை வழக்கும் பதிவாகியுள்ளன.
இத்துனை குற்றப் பின்னணியுள்ள தளி.ராமச்சந்திரனுக்குதான் இப்போது மீண்டும் தளி சட்டமன்றத் தொகுதியில் இடம் கொடுத்திருக்கிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
எத்தனையோ விமர்சனங்களும் கண்டனங்களும் வந்தபோதும்கூட, தளி ராமச்சந்திரனை இ.கம்யூ. தோழர்கள் விடுவதாக இல்லை.
மறைந்த தா.பாண்டியனின் செல்லப்பிள்ளையாக இருந்த ராமச்சந்திரன் அவருடைய மறைவுக்கும் பிறகும் அதே செல்வாக்குடன் கட்சியில் இருக்கிறார் என்பதையே அவர் வேட்பாளராக நிறுத்தப்படுவது எடுத்துக் காட்டுகிறது.
இரண்டு மாதத்திற்கு முன்புகூட, இவரிடம் தோற்று, கம்யூனிஸ்ட் கட்சியாலும் கைவிடப்பட்டு, அதிமுகவில் இணைந்து, ராமச்சந்திரனின் கொலை முயற்சியில் தப்பிய நாகிராஜன் ரெட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கில், "தளி ராமச்சந்திரன், என்னைக் கொலை முயற்சி செய்த வழக்கு விசாரணை, கிருஷ்ணகிரி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், எனக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அந்த மிரட்டல் கடிதத்தில், தொடர்ந்து வழக்கை நடத்தினால் கொலை செய்வோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். மேலும், வழக்கு விசாரணையை சேலம் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும்" என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
ஆனாலும், ராமச்சந்திரனக்காகவே தளித் தொகுதியைக் கேட்டு வாங்கியிருக்கிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. அகில உலக முதலாளித்துவத்தையே எதிர்க்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ராமச்சந்திரனிடம் அடங்கி ஒடுங்கி பரிதாபமாக நிற்கிறார்கள். மேலும், ராமச்சந்திரனின் மீதான அத்தனைக் குற்றங்களையுமே கம்யூனிஸ்டுகள் மறுக்கிறார்கள் என்பதுதான் வேதனை.
கம்யூனிஸ்டான வீரபாண்டியன் "எப்படி இருந்தாலும் ராமச்சந்திரன் சுற்றி சுற்றி கம்யூனிஸ்ட் கட்சிகளில்தானே சேருகிறார்" என்று மெய்சிலிர்க்கிறார்.
இ.கம்யூ.கட்சியின் முக்கிய சிந்தனையாளராக கருதப்படும் சி.மகேந்திரன் அவர்களோ "தளி ராமச்சந்திரன் மீதான குற்றச்சாட்டுகள் அத்தனையும் உள்நோக்கம் கொண்டவை" என்று சித்தாந்த விளக்கம் கொடுக்கிறார். இப்போதும் கூட, வேட்பாளராக தளி ராமச்சந்திரன் அறிவிக்கப்படுவதற்கும் இரண்டு நாட்களுக்கும் முன்பாகவே தளி தொகுதிக்குச் சென்று ராமச்சந்திரனுக்கு பணியாற்றத் துவங்கிவிட்டதை சிலாகித்துக் கூறியிருக்கிறார் சி.மகேந்திரன்.
நல்லக்கண்ணுகளை வெளியேக் காட்டிக்கொண்டு ராமச்சந்திரன்களை உள்ளே வளர்ப்பது எந்தவகையான வர்க்க நலன் என்று கம்யூனிஸ்டுகள்தான் கூறவேண்டும்.
பாஜக போன்ற கட்சிகள்தான் குற்றப்பின்னணிக் கொண்டவர்களை அதிகாரமிக்க பதவிகளில் அமர்த்துகிறது என்கிற விமர்சனத்தை முன்வைத்துக் கொண்டே, குற்றப்பின்னணிக் கொண்ட சமூகவிரோதிகளை மக்கள் பிரதிநிதிகளாக ஆக்குவதுதான் மாற்றத்திற்கான அரசியல் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கருதிக்கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
- இளையரசன் பெரியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக