வியாழன், 25 மார்ச், 2021

நீரில் மூழ்கி ஐந்து சிறுவர்கள் உயிரிழப்பு!

நீரில் மூழ்கி ஐந்து சிறுவர்கள் உயிரிழப்பு!

minnambalam : தமிழகத்தில் இருவேறு இடங்களில் குளத்துக்கு குளிக்க சென்ற ஐந்து சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி அருகேயுள்ள கோமஸ்புரம் ராஜீவ்காந்தி நகர் குடியிருப்புப் பகுதியைச் சார்ந்த போஸ் இமானுவேல் என்பவரின் மகள்கள் சஞ்சனா (14) சப்ரினா (10).

இந்த இரு சிறுமிகள் உட்பட 10 பேர் அருகிலுள்ள துப்பாஸ்பட்டி கண்மாய்க்கு புதன்கிழமை குளிக்கச் சென்றனர். அங்கு குழந்தைகளை அழைத்துச் சென்ற பக்கத்து வீட்டு பெண் துணி துவைத்து கொண்டிருந்த போது, பள்ளி சிறுமிகள் சஞ்சனா, சப்ரினா இருவரும் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கினர். இவர்களை உயிருடன் மீட்க முடியவில்லை. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோல் அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே மூன்று சிறுவர்கள் ஓடை சேற்றில் சிக்கி உயிரிழந்தனர்.   செந்துறை அடுத்த மணப்பத்தூர் கிராமம் காலனித் தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் சுதாகர், ஜெயசீலன். இவர்கள் இரண்டு பேரும் சகோதரர்கள். சுதாகர் மகள் சுடர்விழி(7) ஜெயசீலன் மகள் சுருதி(10) ரோகித்(7) ஆகிய மூவரும் நேற்று பிற்பகல் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித்து வீட்டில் உள்ளவர்கள், விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை காணவில்லை என அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். எங்கும் காணாததால், வீட்டின் அருகேயுள்ள சின்ன ஓடைக்கு சென்று பார்த்துள்ளனர்.

அப்போது ஓடையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் தேங்கியுள்ள நீர் மற்றும் சேற்றில் மூன்று சிறுவர்களும் சிக்கி உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இது குறித்து தகவலறிந்து வந்த போலீஸார், சடலங்களை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது தமிழகத்தில் நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி இருக்கிறது. அதற்கு ஏற்றாற்போல கொரோனா விடுமுறையில் குளங்களில் குளிக்க செல்லும் சிறுவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை நீரில் மூழ்கி உயிரிழப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அண்மையில் திண்டுக்கல் அருகே 5 பேர் குளத்தில் மூழ்கி இறந்தது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற விபத்துகள் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.

-சக்தி பரமசிவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக