திங்கள், 15 மார்ச், 2021

விஜயதரணி :அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தலைமையிடம் சமர்ப்பிப்பேன்..!

Vijayadharani

நக்கீரன் : 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதில், 21 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது.
வேளச்சேரி, மயிலாடுதுறை, விளவங்கோடு, குளச்சல் ஆகிய நான்கு தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகவில்லை.
விளவங்கோடு காங்கிரஸ் சிட்டிங் எம்எல்ஏ விஜயதரணிக்கு எதிர்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து நக்கீரன் இணையத்திடம் அவர் பேசுகையில், ''கடந்த பத்து ஆண்டுகளில் பல்வேறு எதிர்ப்புகளை தாண்டிதான் மக்களுக்காகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். காங்கிரஸ் கட்சி என் மீது நம்பிக்கை வைத்துள்ளது.
அசாம், பாண்டிச்சேரி ஆகியவற்றுடன் தமிழ்நாட்டில் உள்ள நான்கு தொகுதி வேட்பாளர்களையும் காங்கிரஸ் தலைமை அறிவிக்கும்.
இந்த அறிவிப்பு நாளை காலை வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம். .
கடந்த பத்து ஆண்டுகளில் ரூபாய் ஆயிரத்து ஐநூறு கோடிக்கும் மேலான நிதிகளை எதிர்க்கட்சியில் இருந்தபோதும் பெற்று திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறேன்.


ஆளும் கட்சி தவறு இழைக்கும்போது அதனைத் தட்டிக்கேட்கும் விதமாகச் செயல்பட்டிருக்கிறேன்.
தொகுதி மக்களுக்கான குரலை சட்டசபையில் எழுப்பியிருக்கிறேன்.
தொகுதி மக்களுக்கு இழப்பீடு பெற்றுத்தரும் விசயத்தில் தனி ஒரு பெண்ணாக சட்டசபையில் போராடி கடுமையான முறையில் வெளியேற்றப்பட்டு, பல்வேறு கொடூரங்களுக்கு உள்ளாக்கப்பட்டேன்.
ஒரு பத்து பேர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
அதில் இரண்டு பேரின் முகம் மட்டும்தான் எனக்குத் தெரிகிறது. மீதமுள்ள அறியாத முகங்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள் எந்தக் கட்சியில் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது.
சிலரின் தூண்டுதல்களால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறவர்கள், கட்சி மேலிடம் தொகுதியை எனக்கு அறிவித்தவுடன் தானாகவே எழுந்து ஓடிவிடுவார்கள்.
காங்கிரஸ் கட்சியில் ஒரே பெண் எம்எல்ஏவாக செயல்பட்டதால், பெண் என்பதால் இதுபோன்ற பிரச்சனைகளை சிலர் செய்கின்றனர்.
 சட்டசபையில் கூட்டணிக் கட்சிகள் எடுக்கும் முடிவுகளுக்கு காங்கிரஸ் கட்சி சரியான வகையில் ஒத்துழைப்பு அளித்துள்ளது.
தொகுதியில் சிறப்பாகச் செயல்பட்டு கூட்டணிக் கட்சிகள் ஒத்துழைப்புடன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தலைமையிடம் சமர்ப்பிப்பேன்.
பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் இந்த விஜயதரணி உறுதியாகக் கூறுகிறேன் வெற்றி பெறுவேன்" இவ்வாறு கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக