வெள்ளி, 19 மார்ச், 2021

விரைவில் சுங்கச்சாவடிகள் இல்லா நெடுஞ்சாலைகள்: நிதின் கட்கரி சொன்னது என்ன?

கட்கரி
BBC :இந்தியா முழுவதும் அனைத்து சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் ஓராண்டுக்குள்ளாக சுங்கச்சாவடிகள் இல்லாத நிலை ஏற்படும் என்று இந்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்களவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது, “வாகனங்கள் அழிப்பு கொள்கை” குறித்து பேசினார்.
அப்போது நிதன் கட்கரி, “அடுத்த ஓராண்டுக்குள்ளாக நாடு முழுவதும் மனிதர்கள் மூலம் கட்டணம் வசூலிக்கும் முறை ஒழிக்கப்படும்,” என்று கூறினார்.
அப்படியென்றால் இனி வாகனங்களின் ஜிபிஎஸ் படத்தை வைத்து சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறை அமலுக்கு வரும் என்று கட்கரி தெரிவித்தார்.  இந்தியாவில் தற்போது 93 சதவீத வாகனங்கள் ஃபாஸ்ட் டேக் அட்டை மூலம் ரீசார்ஜ் செய்து சுங்கக்கட்டணத்தை செலுத்தி வருவதாகக் கூறிய அவர், ஃபாஸ்ட் டேக் இல்லாத வாகனங்கள் இரட்டை வரி செலுத்த கட்டாயப்படுத்தப்படும் என்று தெரிவித்த பிறகும் 7 சதவீத வாகனங்கள் அவ்வாறே ஃபாஸ்ட் டேக் அட்டையின்றி செல்வதாக குறிப்பிட்டார்.

அந்த வாகனங்கள் தொடர்பாக காவல்துறை விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிதின் கட்கரி தெரிவித்தார்.

கட்டாயமாகிய ஃபாஸ்ட் டேக் வசதி

இந்தியா முழுவதும் ஃபாஸ்ட் டேக் ஒட்டி சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் செல்லும் வசதி 2016ஆம் ஆண்டில் அறிமுகமானது. ஆனால், மெதுவாக செயல்படுத்தப்பட்டு வந்த அத்திட்டம், இந்த ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டது. இதன் மூலம் நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்காக வரிசையில் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நேரம் குறையும் என்று அரசு கூறுகிறது.

பிப்ரவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட நள்ளிரவு முதல் ஃபாஸ்ட்டேக் அட்டை இல்லாத அல்லது ஃபாஸ்டேக் அட்டை ஒட்டப்பட்டும், அது இயக்கத்தில் இல்லாத வாகனங்கள் சுங்கச் சாவடிகளில் நுழைந்தால், அந்தந்த வாகனங்களுக்கு என்று ஏற்கனவே வரையறுக்கப்பட்டுள்ள சுங்கக் கட்டணத்தை விட இரண்டு மடங்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அரசு கூறியது.

சுங்கச்சாவடிகளில் பணப்பரிமாற்றத்தை தவிர்க்க, இந்திய நெடுஞ்சாலைத் துறையால் கொண்டுவரப்பட்ட திட்டம்தான் இந்த “FASTag”.

டிஜிட்டல் முறையில் சுங்கக் கட்டணம் செலுத்துதல், சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்கும் நேரத்தை குறைப்பது மற்றும் அதிகமான எரிபொருள் பயன்பாட்டை தவிர்ப்பது ஆகிய நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று இந்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் விளக்கம் அளித்தது.

நான்கு சக்கரங்கள் அல்லது நான்குக்கும் மேற்பட்ட சக்கரங்கள் உடைய பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்திற்கான வாகனங்களில் ஃபாஸ்ட்டேக் ஸ்டிக்கர் ஒட்டுவது இந்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

FASTag ஸ்டிக்கர் பெறுவது எப்படி?

வாகன உரிமையாளர்கள், தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் இருக்கும் FASTag ஸ்டிக்கர் வழங்கும் அதிகாரிகள் அல்லது முகவர்களின் உதவியோடு வாகனத்தில் FASTag ஸ்டிக்கரை பெற்று வாகனங்களில் ஒட்டிக் கொள்ளலாம்.

தனிநபர்கள் FASTag ஸ்டிக்கரை தங்களின் வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் ஒட்டியிருக்க வேண்டும். இந்த ஃபாஸ்ட் டேக் ஸ்டிக்கரை பெற வாகனத்தின் பதிவுச் சான்றிதழ், வாகன உரிமையாளரின் புகைப்படம், வீட்டு முகவரி மற்றும் அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம், பான் கார்ட், பாஸ்போர்ட், ஆதார் கார்ட் ஆகிய அடையாள அட்டைகளை இதற்கு பயன்படுத்தலாம்.

வாகன ஓட்டி, ஒவ்வொரு சுங்கச்சாவடியை கடக்கும் போதும், எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டது என்பதை அறிந்துகொள்ள, FASTag கணக்குடன் இணைக்கப்பட்ட செல்பேசிக்கு குறுஞ்செய்திகள் வரும். இதன்மூலம், அந்த கணக்கில் இன்னும் எவ்வளவு பணம் உள்ளது என்பதை அவர்களால் அறிய முடியும்.

கணக்கில் பணம் குறைந்து விட்டால், அதில் பணத்தை ரீசார்ஜ் செய்ய ஆன்லைன் வசதி உள்ளது. இதற்கு டெபிட் கார்ட் அல்லது கிரெடிட் கார்டை வாகன உரிமையாளர் பயன்படுத்தலாம்.

FASTag – யாருக்கெல்லாம் விலக்கு?

தேசிய நெடுஞ்சாலை விதிகளின்படி குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், மாநில ஆளுநர்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மக்களவை சபாநாயகர், கேபினட் அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதி, மத்திய இணை அமைச்சர், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர், முப்படை தலைமைத் தளபதி, சட்டமன்ற சபாநாயகர், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் (டெல்லி மற்றும் அவரது சொந்த தொகுதி என இரு ஃபாஸ்டேக் ஸ்டிக்கர்கள் வழங்கப்படும்), ராணுவ துணைத் தளபதி, மாநில அரசு தலைமைச் செயலாளர், மத்திய அரசுத் துறைகளின் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் (மாநிலத்துக்குள் பயன்படுத்த ஒரு ஸ்டிக்கர் வழங்கப்படும்) ஆகியோருக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

காவல்துறை வாகனங்கள், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை வாகனங்கள், அவசர ஊர்திகள், மத்திய ஆயுதப்படைகள், பாதுகாப்புத்துறை வாகனங்கள், அரசுப் பணியில் உள்ள அரசுத் துறைகளின் வாகனங்கள், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வாகனங்கள் (ஒரு ஸ்டிக்கர் வழங்கப்படும்) ஆகியவற்றும் ஃபாஸ்ட்டேக் கட்டாயமில்லை.

பரம் வீர் சக்ரா, அசோக சக்ரா, மகா வீர் சக்ரா, கீர்த்த சக்ரா, வீர் சக்ரா, செளரிய சக்ரா ஆகியவை வழங்கி கெளரவிக்கப்பட்ட அதற்கான அடையாள அட்டையுடன் இருப்பவர்கள், மாவட்ட ஆட்சியர், சீருடையில் உள்ள காவல்துறை, மத்திய துணை ராணுவப்படையினர் செல்லும் வாகனங்கள், இந்திய நெடுஞ்சாலைத் துறை ஆய்வுப்பணி வாகனங்கள் ஆகிய பிரிவுகளுக்கு ஃபாஸ்ட்டேக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக