சனி, 13 மார்ச், 2021

மியான்மர் நாட்டவர்களுக்கு தற்காலிக அடைக்கலம்: அமெரிக்கா முடிவு

 தினத்தந்தி : வாஷிங்டன்,  தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது.
அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட 100-க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்களை ராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த பொதுத்தேர்தலில் மோசடி நடந்திருப்பதாக குற்றம்சாட்டி, ஆட்சிக்கவிழ்ப்பை நியாயப்படுத்தி கொண்டிருக்கிறது மியான்மர் ராணுவம்.
ஆனால் மியான்மர் மக்கள் ராணுவ ஆட்சியை ஏற்றுக்கொள்ளவில்லை.
நாட்டில் ஜனநாயகம் மீட்கப்பட வேண்டும் என்று கோரி ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.


மக்களின் இந்த தன்னெழுச்சி போராட்டம் சர்வதேச நாடுகளை மியான்மர் ராணுவத்துக்கு எதிராக தூண்டுவதால் இது ராணுவ ஆட்சியாளர்களுக்கு தலைவலியாக அமைந்துள்ளது.
எனவே மக்களின் போராட்டங்களை ராணுவம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது.‌
போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அவர்களை கொன்று குவித்து வருகிறது.
ஆட்சி கவிழ்ப்பு நடந்த பிப்ரவரி 1 முதல் இப்போது வரை ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 70-க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் பலியாகியுள்ளனர்.
ஆனாலும் ராணுவத்தின் இந்த அடக்குமுறையை மீறியும் மியான்மரில் நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
இந்த நிலையில்,   ராணுவ ஆட்சி மற்றும் வன்முறை காரணமாக  நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் மியான்மர் நாட்டு மக்களுக்கு தற்காலிக அடைக்கலம் அளிக்க தயராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தீவிர ஆய்வுக்கு பிறகு  ”தற்காலிக பாதுகாக்கப்பட்ட நிலை” என்ற முடிவின் கீழ் மியான்மர் நாட்டவர்களுக்கு அடைக்கலம் அளிக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக  உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை செயலாளர் அலெஜான்ட்ரோ மயோர்காஸ் தெரிவித்தார்.  
இதன்படி, மியான்மர் மக்கள்  தற்காலிகமாக அமெரிக்காவிலேயே இருக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக