புதன், 17 மார்ச், 2021

ஈழப்போராட்டம் யாருக்கு விடிவைக் கொடுத்தது?

இலங்கைநெற் -ஞானசக்தி சிறிதரன்:   : என் தம்பியின் மரணம்!
1987 மார்ச் 16 பேரிடியாக பேரதிர்ச்சியாய் வந்த செய்தி என் தம்பியின் மரணம்.
இலங்கை இராணுவத்தின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக. அவன் அக்காலத்தில் முல்லைத்தீவு தேவி புரத்தில் ஈழப்புரட்சி அமைப்பில் செயற்பட்டான்.
எம்மைப்பொறுத்தவரை அவரது உடலையோ அவர்தொடர்பான வேறு எந்த ஆதாரங்களையோ நாம் பெறமுடியவில்லை.
புலிகளின் ஜனநாயக மறுப்பு காரணமாக ஏனைய அமைப்புக்கள் தடைசெய்யப்பட்டு இயங்கமுடியாத காலம், டிசம்பர் 12 ஈழப் பெண்கள் விடுதலை முன்னணியினரால் அனைத்து ஜனநாயக மறுப்புக்களுக்கும் எதிராக திரண்ட பெண்களின் ஊர்வலம் யாழ் பெரியகோயிலில் ஆரம்பித்து பெருமாள் கோவிலில் முடிவடைந்தது. புலிகளின் அராஜகங்களுக்கெதிராக கண்டன உரைகளுடன் கொடும்பாவி எரிக்கப்பட்டதை தொடர்ந்து மறுநாள் எமது அமைப்பும் நாங்களும் செயற்பட முடியாத சூழல் ஏற்பட்டது.

கைதுகளும் சுற்றி வளைப்புக்களும் கொலைகளுமாக புலிகளின் அராஜகம் அட்டூழியம் தாண்டவமாடியது. எமது வீடும் புலிகளால் சுற்றி வளைக்கப்பட்டது. அதனை அறிந்து அந்த சூழலில் எனது நிலையை அறிவதற்கு தம்பி எமது வீட்டிற்கு வந்திருந்தான். புலிகளின் அராஜகம் அவனையும் மிகவும் பாதித்திருந்தது. இது விடயமாக அவர்களின் அமைப்பில் எந்த வித கண்டனங்களோ அல்லது அதற்கெதிரான செயற்பாடுகளோ இல்லாத போக்கு துணிச்சலும் உறுதியும் கொண்ட அவனுக்கு உள உடல் உளைச்சலை சோர்வை ஏற்படுத்தியிருந்தது.

எம்மைப்பார்க்க வந்து சில தினங்களில் திரும்பி போகும் போது மிக மன வேதனையுடன் திரும்பி சென்றான் . பிரிய மனமில்லாதவன் போல் நிர்ப்பந்தத்தில் செல்வது போல் இருந்தது. அவனது ஏக்கமான பார்வை எங்கள் மனங்களில் இன்றும், அது இறுதியாக இருக்குமென்று நாம் அன்று நினைக்கவில்லை.

புலிகளின் கண்காணிப்பு, சுற்றி வளைப்பு தோழர்கள் சக போரளிகள் மாற்று கருத்து கொண்டோர் கைது கொலை போன்ற நிகழ்வுகளும் எவருடனும் தொடர்பு கொள்ளமுடியாத சூழலில் அதன் காரணமாக நானும் குடும்பத்தில் அனைவரும் மன உடல் ரீதியாக பாதிக்கபட்டிருந்தோம் 16 மார்ச் 1987 அதிகாலை நான் யாழ் மருத்துவமனைக்கு என் சினேகிதியுடன் சென்றிருந்தேன் .பஸ்சிலிருந்து இறங்கி வரும் வழியில் சினேகிதியின் வீட்டை நெருங்கியதும் அவரின் பெற்றோர் என்னை கண்டதும் அப்பன் அப்பன் அழுதனர். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

அந்த கணம் நான் நிலை குலைந்து என்னவென்று அறியாது எனது வீட்டை நோக்கி ஓடி வந்தேன். வீட்டில் அம்மா அப்பா அக்கா மாமா மாமி குடும்பத்தவர் அனைவரும் சேர்ந்திருந்து ஒரே அழுகை. ஒருவரையும் ஒருவராலும் கட்டுப்படுத்த முடியாத சூழல். சிறிது நேரத்திற்கு முன்னர் தான் செய்தி கிடைத்திருக்கவேண்டும். அந்த சூழலில் அந்த செய்தியை தெரிவிக்க வந்திருந்த ஈரோஸ் தோழர்களும் நின்றிருந்தனர்.

என்ன நடந்ததென்று அறியக் கூடிய விசாரிக்க கூடிய நிலைமையில் யாரும் இருக்கவில்லை. எங்கள் குடும்பத்தில் அனைவருமே அவன்மீது மிகுந்த அன்பும் மரியாதையும் பாசமும் கொண்டவர்கள்.

அந்த சம்பவம் நிகழ்ந்து ஒரு சிலவாரங்களுக்குள் தம்பியின்சக தோழர்கள் சாந்தன் ,ஜெயா ஆகியோர் மரணமடைந்த துயரச் செய்தி எமக்கு எட்டியது. இரண்டு வாரங்களில்- மார்ச் 30 இல் வெலிகடை சிறைப்படுபடுகொலைக்கு நிகரான கந்தன் கருணை படுகொலை என பெயர் பெற்ற 57 எமதும் சக இயக்கங்களினதும் தோழர்கள் போராளிகள் புலிகளின் வதை முகாமில் படுகொலை செய்யப்பட்டனர்.

அதை அவதானிக்கும் போது ஒருமாதகாலத்துக்குள் அப்பனோடு பயணித்த மூவரின் மரணம். பல நூற்றுக்கணகான தோழர்கள் போராளிகளின் மரணங்கள் அக்காலத்தில் சகோதரப்படுகொலைகளாக இரத்த பூமியாக இத்தேசம்.

தம்பி 1983 தை குடும்ப பொருளாதாரம் நாட்டு சூழல் காரணமாக வெளிநாடு சென்றவன் சுவிற்சலாந்தில் இருந்து யூலை இனவன்முறை, பின் நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் இயக்கங்களால் இளைஞர்கள் பாரிய அளவில் சேர்த்துக் கொள்ளப்பட்ட கால கட்டம் ஈழப்புரட்சி அமைப்புடன் தொடர்பு ஏற்பட்டு பயிற்சிக்கு இந்தியா சென்று விட்டான். தான் மக்களுக்காக செயற்பட போகிறேன் என்று ஏமக்கு நீண்ட கடிதம் ஒன்று அனுப்பி விட்டு சென்று விட்டான். ஒரு வருடத்திற்கு மேலாக எம்முடன் எவ்வித தொடர்பும் இல்லை.

அம்மா மிகுந்த வேதனையுடன் கவலையடைந்திருந்த நிலையில் தோழர் ஒருவர் எமது வீட்டுக்கு வந்த வேளையில் அவரைத் தன் மகன் என நினைத்து ஆவலுடன் அருகில் சென்ற போது அவர் தன் மகன் இல்லை என்பதை அறிந்து மிகுந்த வேதனைக்கு ஆளானதைப்பார்த்து அத் தோழர் அவரைப்பற்றி விசாரித்து அவர் நலமுடன் இருப்பதாக தாம் அறிந்து கொண்டதாகவும் அவரை நினைத்து கவலைப்பட வேண்டாம் விரைவில் வந்து விடுவார் என அம்மாவுக்கு தகவல் சொல்லி ஆறுதல் படுத்தினார்.

திடீரென ஒரு நாள் வெறுங்காலுடனும் அழுக்கு படிந்த சாரம் சேட்டுடன் வீட்டிற்கு வந்ததைப்பார்த்து ஒரு வகையில் பிள்ளைவந்து விட்டான் என்ற மகிழ்ச்சியும் இருந்த போதும் அவன் வந்தகோலம் அம்மாவின் மனதை துக்கத்தில் ஆழ்த்தியது.

ஓவ்வொரு தாய்க்கும் தன் பிள்ளைகள் பற்றி ஆயிரம் கனவுகள் . இந்தப் போராட்டம் நாட்டில் பல்லாயிரம் அன்னையர்களுக்கு மரணங்களும் இழப்புக்களும் ஏக்கங்களும் தமது பிள்ளைகள் மரணித்த நிலையில் அழமுடியாத துர்ப்பாக்கிய நிலையையும் தான். கடைசியல் இது தான் மிச்சம்.

அந்த வகையில் தான் எமது தாயாரும் தம்பி இறந்து அல்லது காணாமல் போய் 32 வருடங்கள் ஆகியும் அவன் வருவான் என்ற ஏக்கத்துடனேயே தன் வாழ்நாளை கழித்து மறைந்தார்.

இந்த போராட்டம் யாருக்கு விடிவைக் கொடுத்தது? எவருக்கும் எந்த விதமான விமோசனத்தை?? அல்லது சமூக மாற்றத்தையோ எந்த சமூக நன்மைக்காக தங்கள் உயிரை அர்ப்பணித்தார்களே அந்தஎம் சமூகத்தில் குறிப்பிடத்தகுந்த அடிப்படை மாற்றம் ???

30 வருட போராட்டம் சம்பந்தமில்லாத வாய்சவாடல் காரர் சிலரது அரசியல் அதிகாரத்திற்கு இன்று வரை பயன்படுகிறது. அவர்கள் சமூகத்தை இருட்டிலும் வெறுப்பிலும் மூடத்தனத்திலும் மூழ்கவைத்து தமது தமது சொந்த பிழைப்பை நடத்துகிறார்கள் , இது சமகால சரித்திரபேரவலம்.

சிறந்தவை எல்லாவற்றையும் அழிதொழிக்கும் எம் சமூகத்தில் நிலவிய உள்ளிருந்து கொல்லும் வியாதிதான் இந்த அற்ப பதர்கள் அதிகாரமும் ஐசுவரியமும் பெறுவதற்கு பெரும் பங்களித்திருக்கிறது. இழப்புக்களை சந்தித்த, மரணங்களை சந்தித்த அந்த குடும்பங்களோ அந்த அன்னையர்களோ எந்த வித நன்மைகளையும் பெற்றதில்லை.

எனது தம்பி உட்பட ஆயிரக்கணக்கான போராளிகள் பொதுமக்கள் தமது இளமைக்காலங்களை வாழ்க்கையை தொலைத்துவிட்டார்கள் நவீன உலக அனுபவங்கள் எவையும் அவர்களுக்கு கிட்டவில்லை . சாதாரண வசதிகளை கூட அனுபவிக்கவில்லை. அவர்களின் மரணங்களின் அர்த்தங்கள் தலைமுறைகளினூடு நிலைநிறுத்தப்பட வேண்டும்.

அதுவே எந்த பிரதிபலனையும் எதிர்பாராது மறைந்த என் தம்பியின் தலைமுறையினருக்கு செய்யும் அஞ்சலி.

ஞானசக்தி சிறிதரனின் துயரப்பதிவு..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக