வியாழன், 11 மார்ச், 2021

மம்தா பானர்ஜி மீதான தாக்குதல் வெட்கக்கேடானது” - திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்

dailythanthi.com : கொல்கத்தா, மேற்கு வங்காள சட்டசபைக்கு வருகிற 27 ஆம் தேதி முதல் ஏப்ரல் 29 ஆம் தேதி வரை 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க. இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் உள்ளது. அதேவேளையில் இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன மேற்கு வங்காள முதல் மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி கடந்த ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்த சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார்.

இந்நிலையில் மம்தா பானர்ஜி நேற்று மாலை பர்பா மெதினிபுர் மாவட்டத்தின் ரியாபாரா பகுதியில் பிரசாரம் மேற்கொள்ள சென்றார்.  அங்குள்ள கோயிலுக்கு வெளியே காரின் அருகே மம்தா நின்றிருந்தபோது, அவரை 4, 5 பேர் தாக்கியதாக மம்தா பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார். இதில் காலில் காயமடைந்த மம்தாவை பாதுகாவலர்கள் தூக்கி கொண்டு காரில் ஏற்றினர். 

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜிக்கு காயம் ஏற்பட்ட நிலையில், கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. மம்தாவுக்கு ஏற்பட்ட காயம் பற்றி காங்கிரஸ் தலைவர்கள் வெவ்வேறு வகையில் பேசியது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் மம்தா பானர்ஜி தாக்கப்பட்ட சம்பவத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்ஹ்தில் பதிவிட்டுள்ள அவர், மம்தா பானர்ஜி மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் வெட்கக்கேடானது என்றும் இது ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் கூறியுள்ளார்.

இந்த குற்றத்தைச் செய்தவர்கள் உடனடியாக நீதிக்கு முன் கொண்டு வரப்பட வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தவிர்க்க காவல்துறை துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மம்தா பானர்ஜி விரைவில் நலம் பெற வாழ்த்துவதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக