திங்கள், 1 மார்ச், 2021

தேங்கி நிற்கும் தேமுதிக- அதிமுக பேச்சுவார்த்தை: பின்னணி என்ன?

தேங்கி நிற்கும் தேமுதிக- அதிமுக பேச்சுவார்த்தை: பின்னணி என்ன?
minnambalam :அதிமுக கூட்டணியில் தேமுதிகவுடனான பேச்சுவார்த்தை முடிவு ஏதும் எட்டப்படாமல் இழுத்துக் கொண்டே செல்கிறது. கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி, அதிமுக அமைச்சர்கள் விஜயகாந்த் வீட்டுக்கு வருவதை அறிந்த பிரேமலதா, தனது தம்பியும் தேமுதிகவின் துணைச் செயலாளருமான சுதீஷிடம் சொல்லிவிட்டு கள்ளக்குறிச்சி செயல் வீரர்கள் கூட்டத்துக்குச் சென்றுவிட்டார். கள்ளக்குறிச்சியில் செயல்வீரர்கள் கூட்டத்தில் பிரேமலதா பேசிக் கொண்டிருக்கும்போதுதான், சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கு அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகிய மூவர் சென்றார்கள். அப்போது பிரேமலதாவிடம் தகவல் தெரிவிக்க முயன்று முடியாததால் அடுத்த நாள் பேசுவோம் என்று சொல்லிவிட்டு அமைச்சர்கள் புறப்பட்டனர்.

இதுபற்றி மின்னம்பலத்தில் பிரேமலதா இல்லாமல் விஜயகாந்தை சந்தித்த அமைச்சர்கள்: பின்னணி என்ன? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

பாமகவுக்கு கொடுத்ததைவிட ஒரு சீட்டாவது கூடுதலாக தேமுதிகவுக்கு சீட் ஒதுக்க வேண்டும் என்பதுதான் பிரேமலதாவின் நீண்ட நாள் கோரிக்கை. மேலும் தைலாபுரம் தோட்டத்துக்கு அடிக்கடி சென்ற அமைச்சர்கள் தமிழகம் முழுதும் செல்வாக்கு பெற்ற விஜயகாந்தை தேடி வராதது ஏன் என்பதும் பிரேமலதாவின் கேள்வி. இந்தப் பின்னணியில் ஏற்பட்ட கோபத்தில்தான் அவர் அமைச்சர்கள் வரும் தகவல் தெரிந்தும் கள்ளக்குறிச்சி செயல் வீரர்கள் கூட்டத்துக்கு சென்றார் என்கிறார்கள் தேமுதிக நிர்வாகிகளே.

விஜயகாந்த் வீட்டில் நடந்ததை, முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தகவல் சொன்னார் தங்கமணி. இதையடுத்து நேற்று பிப்ரவரி 28ஆம் தேதி,பேச்சுவார்த்தைக்கு பிரேமலதா மற்றும் சுதீஷ் வருவார் என்று எதிர்பார்த்து அவர்களை அழைத்தார்கள் அமைச்சர்கள். ஆனால், அமைச்சர் தங்கமணி வீட்டுக்கு,தேமுதிக துணைப் பொதுச் செயலாளர் பார்த்தசாரதி, டாக்டர் இளங்கோவன் அனகை முருகேசன் மூவரும் சென்றார்கள்.

மேடம் என்ன சொன்னாங்க என்று அமைச்சர் கேட்க, சூழ்நிலையை தெரிந்து, “ 25 சீட் ஃபைனலா கேட்கிறார்” என பார்த்தசாரதி சொன்னதும் வாயடைத்துபோன அமைச்சர், ‘12 சீட்டுகள் ஒரு ராஜ்யசபா என்று ஒரு திட்டம் இருக்கிறது. இருந்தாலும் உங்கள் எதிபார்ப்பை முதல்வரிடம் சொல்லிப் பார்க்கிறேன்”என்று கூறியுள்ளார்.

“எங்களுக்கு பாமகவுக்கு கொடுத்ததைவிட ஒரு சீட்டாவது கூடுதலாக கொடுத்தால்தான் அண்ணி ஒகே சொல்வார்” என்றும் உறுதிபடக் கூறியுள்ளார் பார்த்தசாரதி.

“நாங்கள் முதல்வரிடம் கேட்டுச் சொல்கிறோம்” என்று அமைச்சர் தங்கமணி சொல்ல, “ நாங்கள் அண்ணியிடம் கேட்டுச் சொல்கிறோம்” என்று தேமுதிகவினர் சொல்ல அப்படியே நிற்கிறது பேச்சுவார்த்தை.

மேலும் இன்று மாலை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க சுதீஷ் அப்பாயின்ட்மென்ட் கேட்டிருப்பதாகவும் ஒரு தகவல் தேமுதிக வட்டாரங்களில் கசிகிறது.

-வணங்காமுடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக