வெள்ளி, 12 மார்ச், 2021

எழுத்தாளர் இமையத்திற்கு சாகித்ய விருது! ‘செல்லாத பணம்’ புதினத்திற்காக

dddd

நக்கீரன் : ”எனது விருதை திராவிட இயக்கத் தலைவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்” என்கிறார், இந்த ஆண்டுக்கான சாகித்ய அகடமி விருது அறிவிக்கப்பட்டிருக்கும் எழுத்தாளர் இமையம்.

எழுத்தாளர் இமையம் எழுதிய ‘செல்லாத பணம்’ புதினத்திற்காக, அவருக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகடமி விருது, 12-ந் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.  இமையம், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  அண்ணாமலை என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், 1964-ல் பிறந்தவர். ஆசிரியராக விருத்தாசலத்தில் பணிபுரிந்துவரும் இமயம், தீவிர திராவிட இயக்க உணர்வாளர் ஆவார்.        தான் பார்த்த, பழகிய, வாழ்ந்த கிராமத்தையும், கிராமத்து ஒடுக்கப்பட்ட மக்களையும் தனது கதைகளில் உயிர்ப்பாகச் சித்தரித்து வருகிறவர் இமையம். சாதி ஒடுக்கு முறைகளையும், கிராமத்துப் பெண்களுக்கு நேரும் பால் பேதத்தின் அடிப்படையிலான துயரங்களையும், ஆணாதிக்க அவலங்களையும், சமூக ரீதியிலான வக்கிரங்களையும், தொடர்ந்து தனது படைப்புகளில் தோலுரித்துக் காட்டிவருகிறவர் இவர்.


 சிறந்த பேச்சாளராகவும் திகழும் இமையம்,  தான் நினைத்ததை அப்பட்டமாகச் சொல்லும் துணிச்சல் மிக்கவராகவும் இலக்கிய உலகில் வலம் வருகிறார். 94-ல் வெளிவந்த இவரது ’கோவேறு கழுதைகள்’ தமிழ் இலக்கிய உலகின் பார்வையை இவர் பக்கம் திருப்பியது. அதைத் தொடர்ந்து 'மண்பாரம்', 'ஆறுமுகம்', 'செடல்', 'மாரியம்மன் வீடியோ தொகுப்பு', 'கொலை சேவல்', 'சாவுச் சோறு' எனப் பல்வேறு புதினங்களையும் குறு நாவல்களையும் எழுதி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறார். இவரது படைப்புகள் பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பாராட்டுதல்களையும் பெற்றிருக்கின்றன. 

 இந்த விருதுச் செய்தி வந்தவுடனேயே அவரைத் தொடர்பு கொண்டோம்.  அப்போது அவர், “இந்த விருதை நீதிக்கட்சியைத் தொடங்கிய தலைவர்களுக்கும், திராவிட இயக்கத் தலைவர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன். ஏனென்றால், அவர்களால்தான் நம் மண் நிமிர்ந்தது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், டாக்டர் அம்பேத்கர் ஆகியோருக்கு இந்த விருதைச் சமர்ப்பிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால் இவர்கள் ஊட்டிய உணர்வுதான் என்னை எழுதவைக்கிறது. ஒடுக்கப்பட்டவர்களுக்காக வாதாட வைக்கிறது. இப்போது கூட கறுப்பு சிவப்பு கரைவேட்டி கட்டிக்கொண்டுதான் இருக்கிறேன்.” என்கிறார் உற்சாகமாக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக