ஞாயிறு, 28 மார்ச், 2021

மியான்மர் 90 பேருக்கும் மேல் சுட்டுக் கொலை.. ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம்

 பிபிசி :மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடக்கும் போராட்டங்களில் கண்மூடித் தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் குழந்தைகள் உள்பட 90க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாக அரசியல் கைதிகளுக்கான உதவி கூட்டமைப்பு (ஏ.ஏ.பி.பி) எனும் கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.
பிப்ரவரி 1ஆம் தேதி மியாமரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியபின், போராட்டக்காரர்கள் ஒரே நாளில் கொல்லப்பட்ட அதிக எண்ணிக்கை இதுவே ஆகும். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என்று ஏ.ஏ.பி.பி தெரிவிக்கிறது.
மியான்மரில் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவம் ஆட்சிக்கு வந்ததை எதிர்த்து நடந்த போராட்டங்களில் இதுவரை 400 பேருக்கும் மேல் இறந்தள்ளனர்.
வெள்ளியன்று அரசு தொலைக்காட்சி, "முந்தைய அசிங்கமான மரணங்களில் இருந்து மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும். தங்கள் தலையிலோ அல்லது முதுகிலோ சுடப்படும் ஆபத்து உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்," என்ற ராணுவத்தின் எச்சரிக்கையை ஒளிபரப்பியது


அமெரிக்க அரசின் கலாசார மையம் ஒன்றின் மீதும் தாக்குதல் நடந்துள்ளது. பாதுகாப்பு படையினர் "ஆயுதமற்ற பொதுமக்களை கொல்கின்றனர்" என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் அதிகாரிகள் இந்த வன்முறை நிகழ்வுகளுக்கு கடுமையான கண்டனங்களைப் பதிவுசெய்துள்ளனர்.
மியான்மரில் சனிக்கிழமை என்ன நடந்தது?

கடுமையான வன்முறை பிரயோகிக்கப்படும் என ராணுவம் தெரிவித்த பிறகும் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான போராட்டக்காரர்கள் சனிக்கிழமையன்று வீதிகளில் குவிந்தனர்.

நாடு முழுவதும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டக்காரர்களுக்கு எதிராக, ஆயுதங்களைப் பயன்படுத்துவது உள்ளிட்ட மிகவும் வன்மையான நடவடிக்கைகளை ராணுவம் எடுத்து வருகிறது.
மியான்மர்

மியான்மர் நாட்டைச் சேர்ந்த செய்தி ஊடகமான 'மியான்மர் நவ்' கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 114 என்கிறது. அதிக எண்ணிக்கையிலானவர்கள் கொல்லப்படுவதாகவும், பல நூறு பேர் காயமுற்று இருப்பதாகவும் தங்களுக்குத் தகவல் வந்துள்ளது என்கிறது ஐக்கிய நாடுகள் மன்றம்.

சனிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களில் ஒரு 13 வயது சிறுமியும் அடக்கம் என்கிறது ஏ.ஏ.பி.பி அமைப்பு.

நாட்டின் மிகப்பெரிய நகரணம யங்கூனில் உள்ள அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு சொந்தமான கலாசார மையத்தை நோக்கியும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

மாக்வே, மோகோக், கியாக்படாங், மயங்கோன் உள்ளிட்ட நகரப் பகுதிகளில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக நிகழ்வுகளை நேரில் கண்டவர்கள் மற்றும் தகவல் அறிந்த வட்டாரங்கள் பிபிசி பர்மிய மொழி சேவையிடம் தெரிவித்துள்ளன.

யங்கூன் மற்றும் மாண்டலே நகரங்களிலும் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. மாண்டலேவில்

ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சியின் கொடிகளை ஏந்திச் சென்று போராட்டக்காரர்கள், சர்வாதிகாரத்துக்கு எதிரான குறியீடாகக் காட்டப்படும் 'மூன்று விரல்' குறியீட்டைக் காட்டினார்கள்.
மியான்மர் ராணுவ ஆட்சி எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கி சூடு: குறைந்தது 60 பேர் பலி

பட மூலாதாரம், EPA

போலீசார் போராட்டக்காரர்களுக்கு எதிராக வெடிமருந்துகளை பயன்படுத்தியதாக ஏஎஃப்பி செய்தி முகமையிடம் பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்தார்.
ராணுவ தலைவர் என்ன சொன்னார்?

"ஜனநாயகத்தை பாதுகாக்க மொத்த நாட்டினோடும் ராணுவம் கை கோர்த்துள்ளது" என ராணுவத் தலைவர் மின் ஆங் லைய்ங் தொலைக்காட்சியில் நேரடி உரையில் தெரிவித்தார்.

"கோரிக்கை வைப்பதற்காக, ஸ்திரத்தன்மையும் பாதுகாப்பும் பாதிக்கும்படி வன்முறையில் ஈடுபடுவது ஏற்றுக் கொள்ளமுடியாதது" என்றார் அவர்.

ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட ஆங் சாங் சூச்சி மற்றும் அவரின் கட்சியினர் செய்த "சட்டவிரோத நடவடிக்கைகளே" ஆட்சிக் கவிழ்ப்புக்கு காரணம் என்றார் அவர்.
இருப்பினும் துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்யலாம் என ராணுவம் ஆணையிட்டதாக அவர் குறிப்பிட்டு எதுவும் சொல்லவில்லை.
இதற்கு முன்பு போராட்டக்காரர்கள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக ராணுவம் தெரிவித்திருந்தது.

ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான ராணுவ எதிர்ப்பை குறிக்கும் ஆயுதப் படை நாளில் மின் ஆங் லைங் உரையாற்றினார். பொதுவாக ஆயுதப் படை நாள் அணிவகுப்பில் வெளிநாட்டினர் கலந்து கொள்வர். இந்த ஆண்டு ரஷ்யாவின் பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் கலந்து கொண்டார்.

நாட்டின் நிர்வாகப் பொறுப்பை தாங்கள் ஏற்றுக் கொண்டிருப்பதாக மியான்மர் ராணுவம் பிப்ரவரி 1ஆம் தேதி அறிவித்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைக்க ஒப்புக்கொண்டு ஒரு தசாப்தம் கழித்து இது மீண்டும் நடந்திருக்கிறது.

இந்த ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கை நாட்டில் அச்சத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. 2011-ல் ஜனநாயக ஆட்சி அமைவதற்கு முன்பு, சுமார் 50 ஆண்டு காலம் ராணுவத்தின் சர்வாதிகார ஆட்சியை சந்தித்த நாடு மியான்மர். அதிகாலை நேரத்தில் ஆங் சான் சூச்சி மற்றும் பிற அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்ட பாணி, தாங்கள் மறந்துவிட்ட அதே ராணுவ பாணியை நினைவுபடுத்துவதாக அந்த மக்களுக்கு இருந்தது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக, சூச்சி மற்றும் ஒரு காலத்தில் தடை செய்யப்பட்டிருந்த அவருடைய ஜனநாயகத்துக்கான தேசிய லீக் (என்.எல்.டி) கட்சி ஆட்சி நடத்தி வந்தது. 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சுதந்திரமாக, நேர்மையாக 2015ல் நடந்த தேர்தலில் அந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்திருந்தது.

2020 நவம்பர் 8-ம் தேதி நடந்த தேர்தலில் என்.எல்.டி கட்சி மொத்தம் உள்ள இடங்களில் 83 சதவீதம் வெற்றிபெற்றது. இதை பலரும் சூச்சியின் மக்கள் அரசாங்கத்தின் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பாகப் பார்த்தார்கள்.

2011-ம் ஆண்டு வரையிலான ராணுவ ஆட்சிக்குப் பிறகு நடத்தப்பட்ட இரண்டாவது தேர்தல் இது
பிப்ரவரி 1ஆம் தேதி காலையில், அந்தக் கட்சியின் இரண்டாவது பதவிக் காலம் தொடங்கி இருக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் கால்வாசி இடங்கள் ராணுவத்தின் வசம் இருக்கும் வகையிலும், மிக முக்கியமான அமைச்சகங்கள் ராணுவத்தின் வசம் இருக்கும் வகையிலும் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனத்தின் காரணமாக, மியான்மர் நிர்வாகத்தில் ராணுவம்தான் திரைமறைவில் கட்டுப்பாட்டை செலுத்தி வந்தது.
ஆங் சான் சூச்சி

அடுத்த ஓராண்டுக்கு ராணுவம் அவசர நிலையை அறிவித்திருக்கிறது. 2020ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டி, தன் ராணுவ ஆட்சிக்கவிழ்ப்பை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது மியான்மர் ராணுவம்.

ஆங் சான் சூச்சிக்கு ஆதரவாக சாலைகளில் இறங்கி பல்லாயிரக்கணக்கான மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பலரும் வேலைக்குச் செல்ல மறுத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் கூட்டத்தைக் கலைக்க, மியான்மர் ராணுவம் துப்பாக்கியால் சுட்டு பலரைக் கொன்றுள்ளதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஐ.நா மனித உரிமைகள் சபை ஆணையர் மிஷெல் பசெலெட்டின் கணக்குப்படி, 1,700-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் மியான்மர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 29 பத்திரிகையாளர்களும் அடக்கம்.
மியான்மர் - சில குறிப்புகள்

மியான்மர், பர்மா என்று அறியப்படுகிறது. 1948-ம் ஆண்டு இந்த நாடு பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்றது. நவீன வரலாற்றில் பெரும்பாலான காலம் இந்த நாடு ராணுவ ஆட்சியில்தான் இருந்தது.

2010-ம் ஆண்டு வாக்கில் இந்தப் பிடி தளரத் தொடங்கியது. இதையடுத்து 2015-ம் ஆண்டு சுதந்திரமான தேர்தல்கள் நடத்தப்பட்டு, ஆங் சான் சூச்சி தலைமையில் அரசு அமைக்கப்பட்டது.

2017-ம் ஆண்டு காவலர்கள் மீது ரோஹிஞ்சாக்கள் நடத்தியதாக கூறப்படும் தாக்குதலுக்கு மிகக் கடுமையாக ராணுவம் எதிர்வினையாற்றியதால், சுமார் 5 லட்சம் ரோஹிஞ்சா முஸ்லிம்களை நாட்டை விட்டு அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக