சனி, 13 மார்ச், 2021

திமுகவின் தொழிற்சங்கம் முதன்மைச் சங்கமாக தேர்வு!.. தொழிற்சங்க அங்கீகார தேர்தலில் 7,086 வாக்குகள் பெற்றது

DMK's trade union elected primary union
nakkeeran : தென்னிந்தியாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிறுவனமாக என்.எல்.சி இந்தியா நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்தில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அலுவலர்கள், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர ஊழியர்கள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இதில், நிரந்தர ஊழிய தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து என்.எல்.சி. நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது, பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது போன்றவற்றிற்காக தொழிற்சங்கங்களுக்கான அங்கீகாரத் தேர்தல் 4 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் . கடந்த, பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி தொழிற்சங்கங்களுக்கான அங்கீகாரத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் 7,086 வாக்குகள் பதிவான நிலையில், வாக்குகள் நேற்றிரவு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், தி.மு.கவின் தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் 2,352 வாக்குகள் பெற்று முதன்மைச் சங்கமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.  அதேசமயம், தொழிற்சங்க அங்கீகாரத்திற்காக 51% வாக்குகள் பெறவேண்டியது அவசியம். இந்நிலையில், அதற்குக் குறைவான வாக்குகள் (33.19%) தொ.மு.ச பெற்றிருப்பதால் அதற்கு அடுத்தபடியாக இரண்டாம் நிலையில் 23.95% (1697) வாக்குகள் பெற்றுள்ள அ.தி.மு.கவின் அண்ணா தொழிற்சங்கமும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமாக தேர்வு பெற்றுள்ளது. 

 அதே சமயம், கடந்த காலங்களில் இரண்டாம் நிலையில் உற்சாகமாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சி.ஐ.டி.யு தொழிற்சங்கம், 1,203 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சியின் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில், மத்திய அரசை ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தொழிற்சங்கமான பாரதிய மஸ்தூர் சங்கம் 208 வாக்குகளையே பெற்றுள்ளது. இந்த தேர்தல் முடிவையடுத்து இனிவரும் காலங்களில் தொழிலாளர்களுக்கான பிரச்சனைகள், கோரிக்கைகள் குறித்த பேச்சுவார்த்தையில் தி.மு.கவின் தொழிலாளர் முன்னேற்றச் சங்கமும், அ.தி.மு.கவின் அண்ணா தொழிற்சங்கமும் இணைந்து பங்கேற்கும் நிலை ஏற்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக