சனி, 6 மார்ச், 2021

உதயசூரியன் சின்னத்தில் போட்டி... மதிமுகவுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியது திமுக

உதயசூரியன் சின்னத்தில் போட்டி... மதிமுகவுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியது திமுக
maalaimalar :அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், திமுக- ம.தி.மு.க. இடையே தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
வைகோ, மு.க.ஸ்டாலின்

சென்னை:தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள்,  இந்திய கம்யூனிஸ்டு ஆகிய 4 கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிவு செய்யப்பட்ட நிலையில், ம.தி.மு.க சற்று அதிகமான தொகுதிகளை எதிர்பார்த்தது. ஆனால் தி.மு.க. தரப்பில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே தொகுதிகளை தர முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.ம.தி.மு.க. மூத்த தலைவர்கள் மற்ற கட்சிகளை விட கூடுதலாக ஒரு தொகுதியாவது பெறுவதற்கு முயற்சி மேற்கொண்டனர். 

இதுதொடர்பாக இன்று பிற்பகல் ம.தி.மு.க. உயர்நிலைக்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதன்பின்னர் மாலையில் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.-ம.தி.மு.க தலைவர்கள் சந்தித்து பேசினர். அப்போது தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவுபெற்றது.

கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்தது. இதனை மதிமுக ஏற்றுக்கொண்டது. அத்துடன், இந்த 6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவும் மதிமுக சம்மதம் தெரிவித்தது. இதையடுத்து மு.க.ஸ்டாலின், வைகோ ஆகியோர் முன்னிலையில் தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. எந்தெந்த தொகுதிகள் என்பது பின்னர் அறிவிக்கப்படும்.

கருணாநிதியிடம் அளித்த வாக்குறுதியின் படி, திமுகவுடன் கூட்டணி அமைத்திருப்பதாகவும், மதிமுக வேட்பாளர்கள் 6 இடங்களிலும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்றும் வைகோ கூறினார். அனைத்து தகுதிகளையும் கொண்ட முதல்வர் வேட்பாளராக ஸ்டாலினை பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக