வெள்ளி, 5 மார்ச், 2021

விசிக போட்டியிடும் 6 தொகுதிகள் எவை? வேட்பாளர்கள் ... சிந்தனைச் செல்வன், யூசுப், பனையூர் பாபு உள்ளிட்டோர்?

tamil.indianexpress.com : தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 12 தொகுதிகளை எதிர்பார்த்த விசிகவுக்கு இது ஏமாற்றத்தை அளித்தாலும் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், தமிழக நலன் கருதி 6 தொகுதிகளை ஏற்றுக்கொண்டோம் என்று தெரிவித்துள்ளார். 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக, மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம் கட்சிகளின் மக்கள் நலக் கூட்டணி என்ற 3வது அணியை உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தவர் விசிக தலைவர் திருமாவளவன். மக்கள் நலக் கூட்டணி ஒரு இடங்களில்கூட வெற்றி பெற முடியாமல் போனாலும் வாக்குகளை பிரித்ததிலும் வாக்காளர்களை மனரீதியாக மடை மாற்றம் செய்ததிலும் பெரும் பங்கு உண்டு.

தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, மக்கள் நலக்கூட்டணி கலைந்தாலும், அதில் இருந்த கட்சிகளில் தேமுதிக, தாமகவைத் தவிர எல்லா கட்சிகளும் 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்தன. இந்த அணி கடந்த மக்களவைத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து, நீடித்து வரும் இண்த கூட்டணி இப்போது சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்கிறது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடனான தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியில் நீடித்து வருகிறது. அதற்கு காரணம், திமுக கூட்டணி கட்சிகளுக்கு குறைவான தொகுதிகளை ஒதுக்க முன்வந்திருப்பதே காரணம் என்பது தெரிகிறது.

இந்த நிலையில், திமுக கூட்டணியில் விசிகவுக்கு 6 தொகுதிகளே ஒதுக்கப்படும் என்று தகவல் வெளியானதால், இன்று (மார்ச் 4) காலை சென்னை அசோக் நகர் அலுவலகத்தில் உள்ள விசிக அலுவலகம் முன்பு அக்கட்சியினர் ஒப்புக்கொள்ளக்கூடாது என்று தலைமைக்கு வலியுறுத்து கோஷமிட்டனர்.

ஆனால், விசிக தலைவர் திருமாவளவன், கட்சியின் நிலைமை மற்றும் அரசியல் சூழல் கருதி எடுக்கப்படும் முடிவுகளை தொண்டர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இதையடுத்து, இன்று மாலை நடைபெற்ற திமுக – விசிக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில், விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. குறைவான தொகுதிகள் ஒதுக்கப்பட்டதால் விசிகவினர் ஏமாற்றமடைந்தனர் என்றாலும் அக்கட்சியின் தலைவர் தமிழக நலன் கருதி 6 தொகுதிகளை ஒப்புக்கொண்டோம். விசிக தனி சின்னத்தில் போட்டியிடும் என்று தெரிவித்தார்.

முன்னதாக, விசிக தலைமை குறைந்த பட்சம் 9-12 தொகுதிகளில் போட்டியிடலாம் என்று திட்டமிட்டிருந்தது. இப்போது, கூட்டணியில் 6 தொகுதிகளே ஒதுக்கப்பட்டிருப்பதால் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது வேட்பாளர்களாக யார் யாரை நிறுத்துவது என்பதில் அக்கட்சி தலைமை ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

திமுக கூட்டணியில் 6 தொகுதிகளைப் பெற்றுள்ள விசிக, அக்கட்சி பலமாக உள்ள காட்டுமன்னார்கோயில், வானூர், செய்யூர், அரூர், திட்டக்குடி ஆகிய தனி தொகுதிகளையும் 2 பொதுத் தொகுதிகளையும் கேட்க உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விசிக தலைவர் திருமாவளவனும் பொதுச் செயலாளர் ரவிக்குமாரும் ஏற்கெனவே எம்.பிக்களாக உள்ளதால், இந்த விசிக சார்பில், அக்கட்சியின் பொதுச் செயலாளர்கள் சிந்தனைச் செல்வன், யூசுப், பனையூர் பாபு உள்ளிட்டோர் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக