செவ்வாய், 2 மார்ச், 2021

காங்கிரஸ் கட்சிக்கு 24 தொகுதிகள் ஒதுக்க திமுக முடிவு என தகவல்..!

காங்கிரஸ் கட்சிக்கு 24 தொகுதிகள் ஒதுக்க திமுக முடிவு என தகவல்..!
  daylithanthi :சென்னை, தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் தொடங்க இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில், அரசியல்கட்சிகள் எல்லாம் இப்போதுதான் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி நடத்தி வருகின்றன. ஆளுங்கட்சியான அ.தி. மு.க., பா.ம.க.வை கூட்டணியில் இணைத்து கொண்டதுடன், அந்த கட்சிக்கு 23 தொகுதிகளையும் வழங்கியுள்ளது. தொடர்ந்து, பா.ஜ.க., தே.மு.தி.க., த.மா.கா. உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.

எதிர்க்கட்சியான தி.மு.க.வை பொறுத்தவரை, அந்த கூட்டணியில் ஏராளமான கட்சிகள் இருக்கின்றன. முதற்கட்டமாக நேற்று முன்தினம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய 2 கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தி.மு.க. நடத்தியது.

முதல் நாளில் முடிவு எட்டப்படாத நிலையில், நேற்று 2-வது நாளாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. நேற்றைய பேச்சுவார்த்தையில்2 கட்சிகளுக்கும் தொகுதிபங்கீடு உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொகுதி உடன்பாடு ஒப்பந்தம் கையெழுத்தானது.

கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது, இதே தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 4 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு கட்சிகளை தொடர்ந்து, ம.தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுடன் தி.மு.க. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தியது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழுவினரை ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, ஆய்வு மைய செயலாளர் செந்தில் அதிபன், உயர்நிலைக் குழு உறுப்பினர் வக்கீல் சின்னப்பா, தேர்தல் பணி செயலாளர் ஆவடி அந்தரி தாஸ் ஆகிய 4 பேர் அடங்கிய குழுவினர் நேற்று சந்தித்தனர்.

மாலை 5 மணிக்கு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தை இரவு 7 மணி வரை நீடித்தது. ஆனால் முதற்கட்ட கூட்டத்தில் தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்படவில்லை.

விடுதலை சிறுத்தைகள் கட்சியும் 10 தொகுதி கேட்டு நிர்ப்பந்தித்ததாகவும், தி.மு.க. தரப்பில் 5 தொகுதிகள் மட்டுமே வழங்கப்படும் என்றும், அந்த தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என கட்டாயப்படுத்துவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தநிலையில் ம.தி.மு.க., வி.சி.க. குழுவினருடன் இன்று நடக்கும் பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு எற்பட்டு மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுபோல் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் சுமுக முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றும் காங்கிரஸ் கட்சிக்கு 24 தொகுதிகள் ஒதுக்க திமுக முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 18 இடங்கள் என்று ஆரம்பித்த பேச்சுவார்த்தையில், தற்போது 24 இடங்கள் வரை ஒதுக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. 

வருகிற 6,7 ஆகிய தேதிகளில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் நேர்காணல் இருக்கும் என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்திருக்கிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக