சனி, 27 பிப்ரவரி, 2021

சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு!

 சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு!
  மின்னம்பலம் : ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. விவசாயிகள் போராட்டத்தை வைத்து சமீபத்தில் ட்விட்டர் மூலம் பொய் தகவல்கள் பரப்பப்பட்டதால், அத்தகைய 1,500 ட்விட்டர் கணக்குகளை நீக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டது. சில நாட்கள் தாமதத்துக்குப் பிறகே ‘ட்விட்டர்’ நிறுவனம் அந்த உத்தரவை அமல்படுத்தியது. இதுதொடர்பாக அந்த நிறுவனத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்தப் பின்னணியில், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளிட்டுள்ள அறிக்கையில், “சமூக வலைதளங்களில் தேச விரோதமானதாகவும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கக்கூடியதாகவும் அதிகாரிகள் கருதும் பதிவுகளை யார் முதலில் உருவாக்கியது என்பதை கண்டறியும் வசதி, கட்டாயம் இருக்க வேண்டும். அத்தகைய பதிவுகளை நீக்குமாறு அதிகாரிகள் உத்தரவிட்ட 36 மணி நேரத்துக்குள் அவற்றை நீக்க வேண்டும்.

புகார்களை விசாரிக்க சமூக வலைதளங்கள் ஒரு தலைமை அதிகாரி உள்பட மூன்று அதிகாரிகளை நியமிக்க வேண்டும். அவர்கள் இந்தியாவில் வசிக்க வேண்டும். புகார்கள் குறித்தும், அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், நீக்கப்பட்ட பதிவுகள் குறித்தும் மாதந்தோறும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். சமூக வலைதளங்கள் தொடர்பான விதிமுறைகளை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நிர்வகிக்கும்” என்று தெரிவித்துள்ளது

மேலும், நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார், ஜீ5 உள்ளிட்ட ஓடிடி தளங்கள் மற்றும் மின்னணு ஊடகங்களுக்கும் மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதுகுறித்து மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களிடம், “ஓடிடி தளங்கள், மின்னணு ஊடகங்கள், அவற்றில் செய்தி வெளியிடுபவர்கள் ஆகியோருக்கும் நடத்தை நெறிமுறைகள் பொருந்தும். ஓடிடி தளங்கள், குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை யார் யார் பார்க்கலாம் என்பதற்காக வயது அடிப்படையில் ஐந்து பிரிவுகளாக வகைப்படுத்த வேண்டும்...யு பிரிவு (அனைவரும் பார்க்கலாம்), யு/ஏ 7+ (பெற்றோர் வழிகாட்டுதலுடன் 7 வயதுக்கு மேற்பட்டோர் பார்க்கலாம்), யு/ஏ 13+, யு/ஏ 16+, ஏ (வயது வந்தோர் மட்டும்) ஆகிய ஐந்து பிரிவுகளாக வகைப்படுத்த வேண்டும்.

யு/ஏ 13+ மற்றும் அதற்கு மேற்பட்ட பிரிவுகளுக்கு உட்பட்ட நிகழ்ச்சிகளைப் பெற்றோர் முடக்கிவைக்கும் வசதி அளிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு நிகழ்ச்சியின் தொடக்கத்திலும், அது எதைப் பற்றியது, எந்த வயதினர் பார்க்கலாம் என்பதை குறிப்பிட வேண்டும். அதன்மூலம் அதை பார்க்கலாமா, வேண்டாமா என்பதை பொதுமக்கள் முடிவு செய்து கொள்ளலாம்” என்று கூறியுள்ளார்.

மேலும், “மின்னணு ஊடகங்களில் செய்தி வெளியிடுபவர்கள், இந்திய பத்திரிகை கவுன்சிலின் பத்திரிகையாளர்களுக்கான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். கேபிள் டிவி நெட்வொர்க் ஒழுங்குமுறை சட்டத்தையும் பின்பற்ற வேண்டும்.

அத்துடன், மூன்றடுக்கு குறைதீர்ப்பு நடைமுறை உருவாக்கப்படும். அந்த நடைமுறை, ஓடிடி தளங்களுக்கும், மின்னணு ஊடகங்களுக்கும் பொருந்தும். இது, சுயமாக ஒழுங்குபடுத்தும் முறை ஆகும்.

புகார்களுக்குத் தீர்வு காண வெளியீட்டாளர்களே ஓர் அதிகாரியை நியமிக்க வேண்டும். புகார் பெறப்பட்ட 15 நாட்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும்.

வெளியீட்டாளர்கள் இந்த விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றுகிறார்களா என்பதை உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு கண்காணிக்கும்” என்றும் தெரிவித்துள்ளார்.

-ராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக