வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து கழற்றி விடப்படுகிறது? சமூகவலையில் சீரியஸ் விவாதங்கள் !

டிஜிட்டல் திண்ணை: ராகுல் சொன்ன நம்பர்: கூட்டணிப் பேச்சில் நடந்தது என்ன?

 திமுக - 200
கம்யூனிஸ்ட் - 20 (CPI 10, CPM 10)
விசிக - 10
முஸ்லிம் லீக் - 4
அண்ணன் வைகோ, பேராசிரியர். ஜவாஹிருல்லா, திரு. வேல்முருகன், திரு. ஈஸ்வரன் போன்றவர்களின் இயக்கங்கள் உதயசூரியன் சின்னத்தில்!
அப்போ காங்கிரஸ்.?  காங்கிரஸ், கமலஹாசன், தேமுதிக - மூன்றாவது அணி!!!

மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ்அப் ஆன்லைனில் வந்தது.திமுக கூட்டணியின் அதிகாரபூர்வமான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை பிப்ரவரி 25ஆம் தேதி முதல் தொடங்கியிருக்கிறது. முதன்முதலாக காங்கிரஸ் கட்சியுடனான பேச்சுவார்த்தை திமுக தலைமையகமான அறிவாலயத்தில் நடந்தது. ஏற்கனவே திமுகவின் தலைவர் ஸ்டாலினுடைய பிரதிநிதியாக எ.வ.வேலு கூட்டணிக் கட்சியினருடன் சில ரவுண்டுகள் பேசி முடித்துவிட்ட நிலையில் அதிகாரபூர்வமான இந்தப் பேச்சுவார்த்தை தொடங்கியது.

திமுக சார்பில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, மகளிரணிச் செயலாளர் கனிமொழி ஆகியோர் கலந்துகொண்டனர். காங்கிரஸ் சார்பில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் கேரள முதல்வர் உம்மன் சாண்டி, ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமான அகில இந்திய காங்கிரஸ் தலைமை செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா, தமிழகப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், கே.ஆர்.ராமசாமி ஆகியோர் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

திமுக கூட்டணி பற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழுக்கு ஓரிரு நாள் முன்பு பேட்டியளித்திருந்த கே.எஸ்.அழகிரி, ‘கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை இரு கட்சித் தலைமைகளிடையே நான்கு மணி நேரத்தில் முடிந்தது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் கூடுதலாக நான்கு மணி நேரம் ஆகலாம்’ என்று சொல்லியிருந்தார்.

பேச்சுவார்த்தையை நேற்றே முடித்துவிட வேண்டும் என்றுதான் காங்கிரஸார் நினைத்திருந்தார்கள். வழக்கமான நலம் விசாரிப்புகள் முடிந்ததும், பொதுச் செயலாளர் துரைமுருகன், ‘நீங்க சொல்லுங்க...எந்த இடத்துலேர்ந்து ஆரம்பிக்கிறீங்க?’ என்று சிரித்துக் கொண்டே கேட்டிருக்கிறார்.

முந்தைய நாளே பல்வேறு சீனியர் தலைவர்களுடன் சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை நடத்தியிருந்தார் உம்மன் சாண்டி. அவரும் சிரித்துக்கொண்டே, ‘எந்த ஒரு கட்சியும் முந்தைய தேர்தலில் போட்டியிட இடங்களுக்குக் குறையாமல் போட்டியிடுவதைத்தான் கௌரவமாக கருதும். அந்த வகையில் திமுக கூட்டணியில் 2016இல் போட்டியிட்ட தொகுதிகளுக்குக் குறையாமல் போட்டியிடுவதுதான் எங்களுக்கு கௌரவமாக இருக்கும். அதைவிட அதிகமாக போட்டியிடுவது பெருமையாக இருக்கும்’ என்று எடுத்துக் கூறினார் உம்மன் சாண்டி. சொல்லிவிட்டு அழகிரியையும், ரன்தீப் சுர்ஜிவாலாவையும் பார்த்தார்.

அவர்களும் அதை ஆமோதிக்க... துரைமுருகனும், டி.ஆர்.பாலுவும், கனிமொழியும் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டார்கள். அப்போது கே.எஸ்.அழகிரி, ‘நீங்க நினைப்பது எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள்’ என்று கேட்டிருக்கிறார். ஆனாலும் அவர்கள், ‘நாங்கள் தலைவரிடம் சொல்கிறோம்’ என்றுதான் சொன்னார்கள்.

டெல்லியில் இருந்து புறப்படுவதற்கு முன்பே தமிழக நிலவரம் பற்றி ராகுல் காந்தி தமிழகப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவிடமும், சுர்ஜிவாலாவிடமும் சில விஷயங்களைத் தெளிவுபடுத்தியிருக்கிறார். அதாவது எக்காரணத்தை முன்னிட்டும் நாம் முன்பு போட்டியிட்ட இடங்களைவிட அதிக இடங்களில் போட்டியிட வேண்டுமே தவிர, குறையக்கூடாது. அப்படிக் குறைந்தால் நமது செல்வாக்கு சரிந்தது என்று நாமே ஒப்புக்கொள்வதாகிவிடும். தமிழகத்தின் நாம் போட்டியிட்டும் இடங்கள் குறைந்தால் அதை வைத்தே பிற மாநிலங்களிலும் நாம் எடைபோடப்படுவோம். இது தொடர் விளைவாகவும், தேசிய அளவிலும் நமக்குப் பிரச்சினையாகவும் இருக்கும். இப்போது இடங்கள் குறைந்தால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மேலும் நமக்கான இடங்களைக் குறைத்துவிடுவார்கள் என்றும் கூறியுள்ளார் ராகுல்.

ஏற்கனவே தமிழக விவகாரம் பற்றி ராகுல் நடத்திய ஆலோசனையில், ‘திமுக தரப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இப்போது காங்கிரஸுக்கு தமிழ்நாட்டில் ஆதரவு அதிகரித்திருப்பதாக மதிப்பீட்டு முடிவுகள் கிடைத்திருக்கின்றன. பாஜக எதிர்ப்பு, மோடி எதிர்ப்பு ஆகியவற்றை நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி முழுமையாக அறுவடை செய்ததற்கு காரணம் அந்தக் கூட்டணியில் காங்கிரஸ் இருந்ததுதான். மேலும் திமுகவின் சமீப கால நடவடிக்கைகளால் இஸ்லாமிய, கிறிஸ்துவர்கள் திமுக மீது வைத்திருக்கும் நம்பிக்கையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸுடன் திமுக கூட்டணி வைத்தால் மட்டுமே சிறுபான்மை வாக்குகளைப் பெரும்பான்மையாகப் பெறமுடியும் என்ற நிலையும் இருக்கிறது. காங்கிரஸுக்கு முந்தைய சட்டமன்றத் தேர்தல்களில் பெற்ற சீட்டுகளுக்குக் குறையாமல் சீட்டுகள் வேண்டும். இதே நிலைப்பாட்டில் இருங்கள். மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்திருந்தார் ராகுல் காந்தி. அதன் பின் சில முறை தமிழகம் வந்து சென்ற நிலையில் தமிழக விவகாரங்கள் குறித்து தொடர்ந்து கேட்டறிந்தார்.

ஒருகட்டத்தில் திமுக கமல்ஹாசனுடன் பேசி வருவதாகவும் காங்கிரஸுக்குக் கொடுக்கும் இடங்களில் பாதியை கமலுக்குக் கொடுக்க முடிவெடுத்திருப்பதாகவும் ராகுலுக்கு தகவல் கிடைத்தது. அதனால் அவர் கோபமானார். அந்தக் கோபத்தில்தான் தன்னை சந்திக்க டெல்லிக்கு வந்த ஸ்டாலினின் மாப்பிள்ளை சபரீசனை சந்திக்க மறுத்துவிட்டார். சில நாட்களுக்கு முன் கமல்ஹாசனே பத்திரிகையாளர் சந்திப்பில் திமுக தனக்கு அதிகாரபூர்வற்ற வகையில் தூதுவிட்டதை உறுதி செய்தார். இதையடுத்துதான் காங்கிரஸ் விட்டுக் கொடுத்துவிடக் கூடாது என்பதில் பிடிவாதமானார் ராகுல் காந்தி.

இந்தப் பின்னணியிலேயே வரும் தேர்தலில் 2016இல் போட்டியிட்ட 41 இடங்கள் அல்லது அதைவிட அதிக இடங்கள் என்று பேச்சுவார்த்தையை திமுகவுடன் தொடங்கியுள்ளது காங்கிரஸ். அரைமணி நேரத்துக்கும் சற்று அதிகமாக நடந்த இந்தப் பேச்சுவார்த்தையின் முதல் கட்டம் முடிந்ததும், ஸ்டாலினிடம், ‘60 சீட் கேட்கிறார்கள்’ என்று சொல்லியிருக்கிறார் துரைமுருகன். திமுக ஏற்கனவே காங்கிரஸுக்கு 20 இடங்கள் என்றும் மிஞ்சிப் போனால் 25 இடங்கள் என்றும் ஒரு கணக்குப் போட்டு வைத்திருக்கிறது. ஆனால் பேச்சுவார்த்தையின் முதல்கட்டத்திலேயே காங்கிரஸ் 60 என ஆரம்பித்திருக்கிறது. அப்போதுதான் 2016இல் போட்டியிட்ட 41 இடங்களாவது கிடைக்கும் என்பதும், அடுத்தடுத்த கட்டங்களில் 35 என்ற அளவிலாவது கொண்டுவந்து நிறுத்த முடியும் என்பதும் காங்கிரஸின் எதார்த்தக் கணக்காக இருக்கிறது. கூட்டணிக் கட்சிகளைச் சமாளிப்பது திமுகவுக்கு சாதாரணமாகவோ, எளிதாகவோ இருக்காது என்பதையே முதல் கட்ட பேச்சுவார்த்தைத் தெரிவிக்கிறது” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் சென்றது வாட்ஸ்அப்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக