ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

இடியாப்ப தட்டுகள் பிளாஸ்டிக்கில் இருப்பது ஆபத்து . பிரம்புக்கு மாறுங்க

May be an image of food and indoor
CSJ Agri  :இடியப்பம் இலங்கையில் பிரபலமாக விற்பனையாகும் அல்லது வீட்டில் செய்யப்படும், எம்மில் பெரும்பாலானோருக்குப் பிடித்த ஆரோக்கியமான காலை, மாலை உணவாகும். சுமார் இருபது வருடங்கள் முன் பிரம்பு மற்றும் பனையோலை தட்டுகளில் அவிக்கப்படும் இடியப்பம் உண்மையிலேயே ஓர் பாதுகாப்பான உணவாக இருந்தது.ஆனால், தற்போது பிளாஸ்டிக் தட்டுகளின் வருகையுடன் அவற்றின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
அண்மையில் கொழும்பில் உள்ள ஓர் சகோதரமொழி பொறியியலாளரான நண்பர் ஒருவர் இடியப்பம் பற்றி வெளியிட்ட கருத்துக்கள் உண்மையில் அதிர்ச்சி தரக்கூடியனவாக இருந்தன.
தினசரி மூன்று வேளை கூட இடியப்பம் விரும்பி உண்ணக்கூடிய அவரின் உறவினர் ஒருவருக்கு வந்த புற்றுநோய்க்கு, பிளாஸ்டிக் இடியப்ப தட்டுக்களும் ஓர் காரணமாக இருக்கலாம் என வைத்தியர்கள் மட்டத்தில் கருத்து நிலவியதாக அவர் கூறினார்.
இதனை நிரூபிக்க இப்போது முடியாவிடினும், நிச்சயமாக நிராகரிக்க முடியாது. பிளாஸ்ட்டிக்கினை உயர் வெப்பத்தில் அவிக்கும் போது நிச்சயம் உடல் நலத்திற்கு தீங்கு தரும்.
ஆகவே இதனை ஓர் முன்கூட்டிய எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு, பிளாஸ்டிக் தட்டுகளுக்கு பதில் பனையோலை மற்றும் பிரம்பு தட்டுகளுக்கு உடனே மாறுவோம்.
கற்பகம் பனம்பொருள் விற்பனை நிலையம் மற்றும் கைப்பணி பொருட்கள் விற்கப்படும் கடைகளில் இயற்கை மூலப்பொருட்களாலான இடியப்ப தட்டுக்களை வாங்கலாம்.
இதனால் நமது உள்ளூர் உற்பத்தியாளர்களும் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
மேலும் இடியப்பம் வாங்கும் நுகர்வோரும், அடுப்பிலிருந்து இறக்கிய சூடான இடியப்பங்களை உடனே பொலித்தீன் பைகளில் போட்டு பெற்றுக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
வீட்டிலிருந்து பிளாஸ்டிக் அல்லாத பாத்திரங்களை அல்லது வாழை இலையை கொண்டு சென்று வாங்கலாம். சில தசாப்தங்கள் முன் இவ்வாறே நாம் வாங்கினோம்.
இடியப்பம் மட்டுமல்லாது,
சூடான பிட்டுக்கு, அதன் முழு நீளத்துக்கும் வாழை இலை போடாமல் நேரடியாக பொலித்தீன் தாளினால் (Lunch Sheets) சுற்றி விற்பனைக்கு வைப்பதையும், சூடான கறி, சாம்பார், சொதி போன்றவற்றை போலித்தீன் பைகளில் கட்டுவதை ஊக்குவிக்காதிருப்போம்.
பெருமளவில் சோறு மற்றும் பிரியாணி சமைப்போர், அரிசி வேகுவதற்கு வாழையிலைக்குப் பதில் பொலித்தீன் போட்டு மூடுவதை தவிர்ப்போம்.
அலுவலகம், பாடசாலை செல்வோருக்கு நேரடியாக பொலித்தீன் தாளில் (Lunch Sheets ) உணவு கட்டிக்கொடுப்பதை தவிர்த்து, வாழை, தாமரை இலை பயன்படுத்துவோம். முடியாவிடின் பிளாஸ்டிக் அல்லாத உணவுப் பெட்டிகளையும், வாகனங்களில், முச்சக்கர வண்டிகளில் செல்வோர் பீங்கான் கோப்பைகளில் சிரமம் பாராது உணவு கொண்டு செல்வோம்.
வாகனங்கள், Racing சைக்கிள், ஸ்கூட்டர், முச்சக்கர வண்டி வைத்திருப்போர், பிளாஸ்டிக் போத்தல்களில் குடிநீர் வைப்பதை முற்றிலும் தவிர்ப்போம். அவற்றுக்குப் பதில் கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் அல்லாத வேறு பாதுகாப்பான போத்தல்களை பயன்படுத்துவோம்.
இன்று நம் அறியாமை மற்றும் சோம்பேறித்தனத்தால், அதீத பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனை மூலம் எம்மையையுமறியாது, கொஞ்சம் கொஞ்சமாக நம் உடலில் விஷமேற்றிக் கொண்டுவருகிறோம் என்பது நிச்சயமான உண்மை.
மாற்று வழிகளைத் தேடுவோம். தெரிந்தே ஆபத்தினுள் வீழ்வதை தவிர்ப்போம்.
இது நம் ஆரோக்கியமான வருங்காலச் சந்ததிகளுக்கும் மற்றும் நமக்குமாக.
Copied from
CSJ Agri

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக