வியாழன், 18 பிப்ரவரி, 2021

பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் பயங்கர வெற்றி ! . பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது

schema.org : வெற்றிக் களிப்பில் காங்கிரஸ் . பாதின்டா மாநகராட்சியை காங்கிரஸ் 53 ஆண்டுகளுக்குப் பிறகு கைப்பற்றியிருக்கிறது
  • இந்த வெற்றி 2022ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான டீசர் என்று பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் கருத்து
  • கட்சிகள் செய்த வஞ்சகத்தையும் துரோகத்தையும் மன்னிக்கவோ மறக்கவோ யாரும் தயாராக இல்லை
  • மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, இந்த போராட்டத்தில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சீக்கிய விவசாயிகள் திரளாக கலந்து கொண்டுள்ளனர்.                இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 8 மாநகராட்சிகள் மற்றும் 109 நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு கடந்த 14ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. நீண்ட கால கூட்டணியான சிரோன்மணி அகாலிதளம் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணியில் இருந்து விலகியதால் இரண்டு கட்சிகளுன் தனித்து களம் கண்டன, அது தவிர, ஆளும் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் இருந்தன.

    விவசாயிகள் போராட்டத்துக்கிடையே நடைபெற்ற தேர்தல் என்பதாலும், அடுத்த ஆண்டில் பஞ்சாப் சட்டமன்றத்துக்கு தேர்தல் நடைபெறவுள்ளதாலும் அம்மாநிலத்தில் நடைபெற்ற இந்த உள்ளாட்சித் தேர்தல் கூடுதல் கவனம் பெற்றது.

    இந்த நிலையில் பஞ்சாப் மாநில உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில், பதான்கோட், பாதின்டா, ஹோசியார்பூர், மோகா, கபூர்தலா உள்ளிட்ட 7 மாநகராட்சிகளில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. முறைகேடுகள் காரணமாக மொஹாலி இரண்டு வாக்குச்சாவடிகளில் மீண்டும் தேர்தல் நடந்த பின்னர், அவை எண்ணப்பட்டு அதன் முடிவுகள் நாளை அறிவிக்கப்படும்.

    குறிப்பாக, 53 ஆண்டுகளுக்குப் பிறகு, பாதின்டா மாநகராட்சியை காங்கிரஸ் கைப்பற்றியிருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. சிரோன்மணி அகாலிதளம் கட்சியின் கோட்டையான பாதின்டா மக்களவை தொகுதியின் எம்.பி. ஹர்சிம்ரத் பாதல் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்ததுடன், அவரது கட்சி பாஜக கூட்டணியில் இருந்தும் சில மாதங்களுக்கு முன்னர் விலகியது. அப்போதே தேர்தல் அரசியல் காரணங்களுக்காகவே அக்கட்சி இம்முடிவை எடுத்ததாக காங்கிரஸ் விமர்சித்தது. அதற்கு ஏற்றவகையில், பாதின்டா மாநகராட்சியை காங்கிரஸ் கைபற்றியுள்ளது.

    இதுதவிர, 65 நகராட்சிகளை காங்கிரஸ் கட்சி கைபற்றியுள்ளது. 10 இடங்களை சுயேட்சைகளும், 5 இடங்களில் சிரோன்மணி அகாலிதளமும் வென்றுள்ளன. பாஜக, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் பெரும் பின்னடவை சந்தித்துள்ளன. மேலும், 1,815 நகராட்சி மன்ற வார்டுகளில் 1,199 வார்டுகளிலும், 350 நகராட்சி இடங்களில் 281 இடங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. மேலும், பெரும்பான்மையான இடங்களில் காங்கிரஸ் கட்சியே முன்னிலை வகித்து வருகிறது.

    தேர்தல் வெற்றி குறித்து பேசிய பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங், இந்த வெற்றி 2022ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான டீசர் என்று குறிப்பிட்டுள்ளார். “பஞ்சாப் மக்களுக்கு அந்த கட்சிகள் செய்த வஞ்சகத்தையும் துரோகத்தையும் மன்னிக்கவோ மறக்கவோ யாரும் தயாராக இல்லை. பஞ்சாப்பை விட்டு அக்கட்சிகள் வெளியேறுவதற்கான சக்திவாய்ந்த செய்தி இந்த தேர்தல் முடிவுகள்” என்றும் அம்ரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக