செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

எங்களைத் தலைநிமிரச் செய்தவர் கலைஞர்! - வேட்புமனுத் தாக்கல் செய்த 'திருநங்கை' பேட்டி!

DMK has set up a board for transgender people in India says transgender Riya
DMK has set up a board for transgender people in India says transgender Riya
நக்கீரன் செய்திப்பிரிவு - பி.அசோக்குமார்: 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை அனைத்துக் கட்சிகளும் தொடங்கிவிட்டது.
அதையொட்டி, திமுக விருப்ப மனுக்களைப் பெற்றுவருகிறது. அதிமுக நாளை முதல் பெறவிருக்கிறது. இதில் திமுக சார்பில் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் நாமக்கல், திருச்செங்கோட்டில் ஊராட்சி மன்ற உறுப்பினராக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற திருநங்கை ரியா, இன்று விருப்ப மனு அளித்தார்
அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “திமுக முன்னாள் தலைவர் கலைஞர்தான் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் திருநங்கைகளுக்கு முதன்முதலில் நலத்திட்டங்களை அறிமுகம் செய்தார்.
மேலும் திமுகதான் திருநங்கைகளுக்கு உறுதுணையாக இருக்கிறது. அதனால், திமுகவின் சார்பாக கடந்த உள்ளாட்சித் தேர்தலில், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடத் தலைவர் ஸ்டாலினால் வாய்ப்பு வழங்கப்பட்டது.
அதில் நான் வெற்றி பெற்றேன். மேலும் 2021ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தலில் ராசிபுரம் தனித் தொகுதியில் போட்டியிட விருப்ப மனுவை அளித்துள்ளேன்.
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டால், அதில் வெற்றி பெற்று ஒடுக்கப்பட்டு சமுதாயத்தின் விளிம்பு நிலையில் இருப்பவர்களும் மக்கள் பிரதிநிதியாகச் செயல்படமுடியும் என்பதை நிரூபிப்பேன்.  

2008ஆம் ஆண்டு முன்புவரை எங்களை எவ்வளவோ அருவருக்கத்தக்கச் சொல்லாடல்களை எல்லாம் வைத்து அழைத்தனர். அதனை எல்லாம் கலைஞர் மாற்றி 2008-ல் 'திருநங்கை' என்று பெயர் சூட்டி, தலைநிமிரச் செய்து, பொது வெளியில் சாதிக்க வைத்தவர். இன்னும், அதில் சாதிக்க வேண்டும் என இந்த விருப்ப மனுவை வழங்கியுள்ளேன்” என்று தெரிவித்தார்.

 மேலும், “திமுகவின் தேர்தல் அறிக்கையில் திருநங்கைகளுக்கான நலவாரியத் திட்டங்கள் எதாவது எதிர்பார்க்க முடியுமா” எனக் கேட்டதற்குப் பதில் அளித்த ரியா, “இந்தியாவிலேயே திருநங்கைகளுக்காக வாரியம் அமைத்ததே திமுகதான். அதன் மூலமாக, சுதந்திர இந்தியாவில் தான் யார் என நிரூபிக்க முடியாத தருணத்தில் இருந்த ஒருவரை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து, ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள உள்ளிட்ட அனைத்தும் பெறுகிறோம். இந்த வாரியத்திலிருந்து வீடு பெறுகிறோம்” என்றார். 

 மேலும் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு, “ராசிபுரம் தொகுதியில் குடிநீர் பிரச்சனை இருக்கிறது. சாலை வசதி என்பதே இல்லை. தற்போதுள்ள சமூகநலத்துறை அமைச்சர் அதிகமாக தொகுதிக்கு வருவதே இல்லை எனும் குற்றச்சாட்டு உள்ளது. அவர்களின் தேவைகளும் இன்னும் பூர்த்தி அடையாமல் இருக்கிறது. மக்கள் தங்கள் பிரதிநிதிகளுடன் நெருங்கி இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். அப்படி இருப்பவர்களைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். நான் அவர்களை அடிக்கடி சென்று சந்தித்துவருகிறேன்” என்றார்.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக