திங்கள், 22 பிப்ரவரி, 2021

திருப்பூர் அதிமுகவுக்குள் சீறும் சீனியர்கள்! எட்டுத் தொகுதிக்குள்ளே சீட்டுப் பிடிக்க குத்து வெட்டு

 எட்டுத் தொகுதிக்குள்ளே சீட்டுப் பிடிக்க குத்து வெட்டு: திருப்பூர் அதிமுகவுக்குள் சீறும் சீனியர்கள்!

minnambalam :கடந்த தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடிக்க உதவிய கொங்கு மண்டலம்தான், இந்த முறையும் உட்காரவைக்குமென்று உறுதியாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள் அதிமுக தலைவர்கள் பலரும். இவற்றில் சேலம், ஈரோடு தொகுதிகளில் சீட் ஒதுக்கீடு, யாருக்கு சீட் என்பதையெல்லாம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், செங்கோட்டையனும் பார்த்துக்கொள்வார்கள் என்று தெரிகிறது. கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள 21 தொகுதிகளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு, தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

அதனால் இந்த மூன்று மாவட்டங்களிலும் பிரமாண்ட பிரசாரக் கூட்டங்கள், விளையாட்டு விழாக்கள், நலத்திட்ட உதவிகள், அரசு வளர்ச்சித் திட்டங்கள் தொடக்க விழா, ஜல்லிக்கட்டு, வெறித்தனமான விளம்பரங்கள் என்று வேலுமணியும், அவருடைய டீமும் பம்பரமாகச் சுழன்று வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இவற்றில் கோவையிலுள்ள 10 தொகுதிகளிலும், நீலகிரியிலுள்ள மூன்று தொகுதிகளிலும் எந்தத் தொகுதியை எந்தக் கட்சிக்கு ஒதுக்குவது, எங்கே யாருக்கு சீட் கொடுப்பது என்பதையெல்லாம் வேலுமணியே முடிவு செய்து விடுவார் என்று சொல்லும் அதிமுக நிர்வாகிகள், திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டுத் தொகுதிகளை ஒதுக்குவதில் தான் பெரும் பிரச்சினையாகுமென்று அச்சப்படுகிறார்கள்.

இதுபற்றி திருப்பூர் அதிமுக நிர்வாகிகள் சிலர் நம்மிடம் சில விஷயங்களைப் பகிர்ந்தனர்...

‘‘திருப்பூர் மாவட்டத்தில் அதிமுக வலுவாகத்தான் இருக்கிறது. ஆனால் அம்மா இருந்தபோது இங்குள்ள நிர்வாகிகளுக்குள் இருந்த ஒருங்கிணைப்பும், கட்சி விசுவாசமும் இப்போது இல்லை. அதற்குக் காரணம், சீனியர்கள் பலரும் ஆளுக்கொரு திசையில் பயணிப்பதுதான். பொள்ளாச்சி ஜெயராமன் எந்த வகையிலும் தனக்கு இடையூறாக வந்துவிடக் கூடாது என்பதற்காக, அவருடைய சொந்த மாவட்டத்தை விட்டே திருப்பூர் மாவட்டத்துக்கு அனுப்பி விட்டார் வேலுமணி. அவருக்கு திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பையும் கொடுத்து ‘அங்கேதான் இருக்க வேண்டும்’ என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்.

போதாக்குறைக்கு பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் அவருடைய மகனின் பெயர் அடிபட்டதால், இந்த முறையும் அவருக்கு பொள்ளாச்சி தொகுதியில் சீட் தரப்படுவது சந்தேகமே. திருப்பூர் வடக்கில்தான் அவர் போட்டியிடுவார் என்று ஒரு தகவல் பரவியது. ஆனால் அதே தொகுதிக்குத்தான் கட்சியின் சீனியர்களான சிவசாமியும், முன்னாள் அமைச்சர் ஆனந்தனும் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். சிட்டிங் எம்.எல்.ஏ விஜயகுமாரும் சீட் கேட்பார். அதனால் அம்மா உத்தரவுக்கேற்ப உடுமலையில் அவர் போட்டியிட்டதால் இந்த முறையும் அவருக்கு உடுமலை தொகுதியில் சீட் கொடுக்கப்படும் என்ற பேச்சு உள்ளது. அமைச்சர் ராதாகிருஷ்ணன் இந்த முறை அங்கு நின்றால் கண்டிப்பாகத் தோற்றுவிடுவார் என்று உளவுத்துறை ரிப்போர்ட் தந்திருப்பதாகச் சொல்கிறார்கள். அதனால் அவருக்கு இந்த முறை அங்கே மட்டுமில்லை; எங்கேயுமே சீட் கிடைக்க வாய்ப்புக் குறைவு.

பல்லடம் தொகுதியை இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியத்தின் மகனுக்காக பாரதிய ஜனதா கேட்கிறது. அதனால் அந்தத் தொகுதியிலும், தெற்கு தொகுதியிலும் சிட்டிங் எம்.எல்.ஏ.க்களுக்கு சீட் கிடைப்பது சந்தேகம்தான். அவினாசி தொகுதியில் சபாநாயகர் தனபாலுக்குப் பதிலாக அவருடைய மகனுக்கு சீட் கேட்கிறார்கள். ஆனால், தனபால் நிற்பதாக இருந்தால் அங்குள்ள அதிமுகவினர் வேலை பார்ப்பார்கள். மகன் நின்றால் கடும் எதிர்ப்பு கிளம்பும். காங்கேயம் தொகுதியில் எந்த வேலையும் நடக்கவில்லை. அதனால் தனியரசு கண்டிப்பாகத் தொகுதி மாறிவிடுவார்’’ என்று விளக்கியவர்கள், கடைசியாக கொசுறாக ஒரு தகவலையும் சொன்னார்கள்...

‘‘காங்கேயம் தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிற்கப் போவதாகவும் திருப்பூருக்குள் ஒரு தகவல் பரவிக் கொண்டிருக்கிறது" என்று.

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்கள், வேலுமணியின் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்கின்றன. ஆனால், திருப்பூர் என்ற சிறிய மாவட்டத்திற்குள் பொள்ளாச்சி ஜெயராமன், உடுமலை ராதாகிருஷ்ணன், ஆனந்தன், சிவசாமி என சீனியர்கள் பலரும் இருப்பதால் அதிகார மோதல் அமைதியாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஆட்சியில் இருக்கும்போது இது வெளிப்படப் போவதில்லை. ஆட்சி முடிவுக்கு வரும்போது எல்லாமே வெளிச்சத்திற்கு வரும்.

திருப்பூரை அதிமுக கோட்டை என திரும்பவும் நிரூபிப்பது அத்தனை எளிதான விஷயமாகத் தெரியவில்லை!

–பாலசிங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக