ஞாயிறு, 7 பிப்ரவரி, 2021

வீட்டு கிணற்றில் வரும் கியாஸ் மூலம் சமையல் செய்யும் பெண்

வீட்டு கிணற்றில் வரும் கியாஸ் மூலம் சமையல் செய்யும் பெண்
maalaimalar.com : திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழாவை அடுத்த ஆராட்டுவளியை சேர்ந்தவர் ரமேசன். இவரது மனைவி ரத்தினம்மா. இத்தம்பதியினர் தங்கள் வீட்டில் குடிநீருக்காக கடந்த 10 ஆண்டுக்கு முன்பு கிணறு தோண்டினர். அந்த கிணற்றில் தண்ணீர் நிறம் மாறி காணப்பட்டது.... இதனால் அவர்கள் அந்த கிணற்றை மூடிவிட்டு அதன் அருகில் வேறொரு கிணறு தோண்டினர். அந்த கிணற்றில் இருந்து வித்தியாசமான வாயு வெளியானது. அந்த வாயு சமையல் எரிவாயு போன்று வாடை அடித்தது... இதனால் ரமேசன் தம்பதியினர் அந்த வாயுவை பற்றவைத்து பார்த்தனர். அது எரிந்ததை கண்டு ஆச்சரியம் அடைந்தனர். உடனே அவர்கள் அந்த வாயுவை ஒரு குழாய் மூலம் வீட்டு சமையல் அறைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டனர்.

இதற்காக அருகில் உள்ள பிளம்பர் ஒருவரை அழைத்து அதற்கான ஏற்பாடுகளை செய்தனர். சமையல் அறைக்கு கொண்டு செல்லப்பட்ட வாயுவை அடுப்புடன் இணைத்து அதனை எரியவைத்தனர். அதுவும் அழகாக எரிந்தது.

இதையடுத்து ரமேசன் - ரத்தினம்மா தம்பதியினர் அந்த வாயுவை கொண்டே வீட்டின் சமையல் வேலைகளை செய்தனர். கடந்த 10 ஆண்டுகளாக வீட்டு கிணற்றில் இருந்து கிடைத்த வாயுவே அவர்கள் வீட்டு சமையல் எரிவாயுவாக பயன்படுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே அக்கம் பக்கத்தினர் மூலம் இந்த தகவல் பெட்ரோலிய துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. அவர்கள் உடனே ரமேசன் - ரத்தினம்மா வீட்டுக்கு சென்றனர். அங்குள்ள கிணற்றையும் பார்வையிட்டு அதில் இருந்து வெளியான வாயுவையும் ஆய்வு செய்தனர்.

அதன்பின்பு அதிகாரிகள் கூறும்போது, இது போன்ற வாயு கசிவு சில இடங்களில் ஏற்படுவது இயற்கையான நிகழ்வு. இதில் எந்த ஆபத்தும் இல்லை. என்றாலும் எங்கள் துறையின் உயர் அதிகாரிகள் இதுகுறித்து விரிவான ஆய்வு நடத்துவார்கள், என்றனர்.

இதுகுறித்து ரத்தினம்மா கூறும்போது, எங்கள் வீட்டு கிணற்றில் இருந்து கிடைத்த வாயு மூலமே நாங்கள் சமையல் செய்து வருகிறோம். மழை காலங்களில் மட்டும் கிண்ற்றில் இருந்து வாயு வருவதில்லை. அப்போது அரசின் சமையல் கியாசை பயன்படுத்தி கொள்வோம், என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக