வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

டிடிவி தினகரன் விடுத்த திடீர் அழைப்பு.. மௌனம் கலைப்பாரா ஒபிஎஸ்! செம்ம பரபரப்பு

tamil.oneindia.com -Velmurugan P : சென்னை: அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழகத்தின் துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வத்துக்கு மீண்டும் பரதன் ஆகலாம் வாருங்கள் என டிடிவி தினகரன் நேரடியாக அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த அழைப்பை ஏற்பாரா அல்லது மௌனம் கலைத்து டிடிவி தினகரனுக்கு பதிலடி கொடுப்பாரா என்ற பரபரப்பு நிலவுகிறது.
விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார்.
அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக தேர்தல் வேலைகளில் இறங்கி உள்ளார். கூட்டுறவு கடன் ரத்து, அரசு ஊழியர்கள் மீதான வழக்குகள் ரத்து, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகள் ரத்து, சிஏஏ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகள் ரத்து, ஊரடங்கு காலத்தில் போடப்பட்ட வழக்குகள் ரத்து என பல்வறு அறிவிப்புகளை வெளியிட்டு அசத்தி வருகிறார்.
ஓபிஎஸ் விளம்பரம் அத்துடன் வெற்றி நடைபோடும் தமிழகம் என்று அரசின் சாதனைகளை கூறி தமிழக அரசு சார்பில் முதல்வர் எடப்பாடியாரை முன்னிறுத்தி விளம்பரங்கள் வெளியாகி வருகிறது. இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் குறித்து முழு அளவில் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. அண்மையில் பரதன் என்ற பெயரில் விளம்பரம் ஓபிஎஸ் குறித்து வெளியிடப்பட்டது.


டிடிவி தினகரன் அந்த விளம்பரத்தில் முதல்வர் பதவியை திரும்ப ஒப்படைத்ததாக வரலாறே இல்லை. அந்த வரலாறை ஓபிஎஸ் செய்ததை பாராட்டி பரதன் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரை புகழ்ந்தது குறிப்பிடப்பட்டிருந்தது. இதை சுட்டிக்காட்டி இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பரதனாக ஓபிஎஸ் வந்தால் ஏற்போம் என்று கூறியுள்ளார்.

சசிகலாவுக்கு ஆதரவு இது தொடர்பாக தினகரன் கூறுகையில், பரதனாக இருந்த ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தவறான முடிவால் ராவணனுடன் சேர்ந்தார் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். தற்போது அவர் மனகசப்பில் இருக்கிறார். சசிகலாவிற்கு மீண்டும் ஆதரவு கொடுத்தால் அதை வரவேற்போம் அவர் மீண்டும் பரதனாவார் என்றும் கூறியுள்ளார்.

அதிருப்தியா? இப்படி டிடிவி தினகரன் அழைக்க காரணமாக சில காரணங்களை அரசியல் விமர்சகர்கள் முன் வைக்கிறார்கள். சசிகலா குணம் அடைய ஒபிஎஸ் மகன் ஜெயபிரதீப் வாழ்த்து தெரிவித்தார். அதற்கு மறுப்பு விளக்கம் அளித்தாலும், இதுநாள் வரை டிடிவி தினகரன் குறித்தோ, சசிகலா குறித்து ஒரு வார்த்தை கூட ஓ பன்னீர்செல்வம் பேசவில்லை. எனவே அவர் எடப்பாடியார் மீது அதிருப்தியில் உள்ளதாகவும் சொன்னார்கள்

எதிர்பார்ப்பு எதிர்பார்ப்பு அண்மையில் பிரதமர் மோடியின் வருகைக்கு பின்னரே எடப்பாடியாரை ஓ பன்னீர்செல்வம் வெகுவாக பாராட்டினார். அம்மா வழியில் சிறப்பாக ஆட்சி செய்வதாக கூறினார். இந்த சூழலில், டிடிவி தினகரன் ஓபிஎஸ்க்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஓபிஎஸ் ஏற்பாரா அல்லது மௌனம் கலைப்பாரா என்று பரபரப்பு நிலவுகிறது. தமிழக அரசியல் சூழலில் ஓபிஎஸ் என்ன முடிவு எடுப்பார் என்ற ஆவல் எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக