வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

ராமநாத சுவாமி கோவிலில் குருமூர்த்தி உடைத்த பழங்கால ஸ்படிக லிங்கம்! அத்துமீறிய சங்கராச்சாரியார், அடாவடியான ஆன்மீகம்…!

சாவித்திரி கண்ணன் - aramonline.in : ‘கூடா நட்பு கேடாய் முடியும்’ என்பது சங்கராச்சாரியார் விவகாரத்தில் மீண்டும் ஒரு முறை நிருபணம் ஆகியுள்ளது. அடாவடி அரசியல்வாதிகளான ஹெச்.ராஜா, குருமூர்த்தி புடை சூழ இராமேஸ்வரம் கோவிலில் ஆர்பாட்டமாக நுழைந்த சங்கராச்சாரியார் ஆகமவிதிகளை காலில் போட்டு மிதித்து, அத்துமீறி செயல்பட்டுவிட்டதாக ஆன்மீகவாதிகளே வருத்தப்படுகின்றனர். இது குறித்து சற்றே விபரமாகப் பார்ப்போம்;

பக்தி, ஆன்மீக விவகாரங்களில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் விரும்பத்தகாத சம்பவம் ஒன்று இராமேஸ்வரம் ராம நாதஸ்வாமி கோவிலில் நடந்தேறியது! கடந்த ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 22 ந் தேதி காஞ்சி சங்கரமட பீடாதிபதி விஜயேந்திரர் பாஜகவின் ஹெச்.ராஜா, ஆடிட்டர் குருமூர்த்தி..உள்ளிட்ட படை பரிவாரங்களுடன் இராமேஸ்வரம் ராமநாத ஸ்வாமி கோவிலுக்கு வந்தார்! அவருக்கு பூரணகும்ப மரியாதை எல்லாம் தரப்பட்டது. அவர் ஸ்வாமியை தரிசிக்க வருவதாக அனைவரும் கருதி இருந்த நேரத்தில், திடீரென்று கோவில் கருவறைக்குள் நுழைந்து தானே ஸ்வாமி மேனியைத் தொட்டு பூஜை செய்ய வேண்டும் என முயற்சிக்க, அதை அவருடன் வந்தவர்கள் ஆரவாரமாக ஆமோதிக்க கோவில் குருக்கள் இருவர் மிகுந்த பணிவுடன், ’’நீங்க பெரியவா..உங்களுக்கு தெரியாதது இல்லை. இந்த கோவில் கருவறையில் சிவாகம முறைப்படி தீட்சை பெற்று, பாரம்பரிய வழிமுறையில் சிவாகமத்தை ஓதுபவர்கள் மட்டுமே கருவறைக்குள் செல்ல முடியும்! பெரியவா.. நீங்களே ஆகமவிதிகளை அத்துமீறப்படாது..’’என எடுத்துச் சொல்லியுள்ளனர்.

ஆனால், அவரும்,அவர் கூட வந்தவர்களும் இந்த வேண்டுகோளுக்கு மதிப்பளிக்கவில்லை. மீண்டும், மீண்டும் வலியுறுத்தி உள்ளே போக எத்தனிக்கவும், குருக்கள் குறுக்கே படுத்து வீழ்ந்து கெஞ்சியுள்ளனர். ஆனால், அவர் கூட வந்தவர்கள் ‘’சங்கராச்சாரியாரையே அவமானப்படுத்துவதா..? அவருக்கு இல்லாத உரிமையா? அவர் லோக குருவாச்சே..’’ என்றெல்லாம் அடாவடியாகப் பேசியும், கத்தியும் சுமார் ஒரு மணி நேரம்ரகளையில் ஈடுப்பட்டனர். பக்தர்கள் பெருந்திரளாக இதை வேடிக்கை பார்க்கும் நிலை உருவாகிவிட்டது. கூட வந்தவர்கள் கோவில் நிர்வாக அதிகாரியை அழைத்து, ’’குருக்களை சமாதானப்படுத்தி, சங்கராச்சாரியாரை உள்ளே அனுமதிக்க ஆக வேண்டியதை செய்யுங்கள்’’ என கட்டளையிட்டதும், இதென்னடா மேலிடத்து பொல்லாப்பு நமக்கு ஏன்? அப்புறம் நம்ம வேலைக்கு ஆபத்தாகிவிடப் போகிறது என்ற பயத்தில் அவர்களும் சேர்ந்து வற்புறுத்தி, சங்கராச்சாரியாரை கருவறைக்குள் அனுமதித்துள்ளனர்! மூலஸ்தானத்தை,கருவறை பூஜையை போட்டோ எடுக்க கூடாது என்பது கண்டிப்பாக கடைபிடிக்கப்படும் மரபு.அதையும் சங்கராச்சாரியார் ஆட்கள் மீறியுள்ளனர்.போட்டோ  எடுக்கப்பட்டது அறிந்து,திரையிட்டு தடுக்க முற்பட்ட போது, அப்போதும் கத்தி,ரகளையில் ஈடுபட்டு திரையை விலக்க செய்துள்ளனர்.

மேற்படி சம்பவம் குறித்து நான் இராமேஸ்வரம் சிருங்கேரி மடத்தின் தலைமை நிர்வாகி மணிகண்ட நாராயணனிடம் (65) விசாரித்த போது, ‘’இப்ப நடந்த சம்பவம் ரொம்ப துரதிஷ்டவசமானது. இந்த கோவில் கருவறைக்குள் பூஜை செய்வதற்கு முறைப்படி சிவாமக மந்திரங்களை ஓதுகின்ற- மகாராஷ்டிரா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட- சிருங்கேரி மடத்து சங்கராச்சாரியாரிடம் தீட்சை பெற்ற – குருக்களுக்கு மட்டுமே அனுமதியுண்டு! இந்த பாரம்பரிய விதிமுறைகள் காஞ்சி சங்கராச்சாரியாருக்கு நன்றாகவே தெரியும். இதே போல 2001 ஆம் ஆண்டும், 2016 ஆம் ஆண்டு மீண்டும் ஒருமுறையும் ஜெயேந்திர ஸ்வாமிகள் முயற்சித்தார். அப்போது அவருக்கு விளக்கமாக எடுத்துச் சொல்லி திருப்பி அனுப்பி உள்ளார்கள். ஆனபோதிலும், தற்போது விஜேயேந்திரர் ஏன் இப்படி ஒருமுயற்சி செய்தார் எனத் தெரியவில்லை. இது நல்லதல்ல! ஆதிகாலத்துல இருந்து இராமேஸ்வரம் சேத்திரத்திற்கு என்று ஒரு பாரம்பரியம் உண்டு.அந்த பாரம்பரியத்தை மதிக்கணும், மீறுவது யாருக்குமே நல்லதில்லை. இந்தக் குழந்தைக்கு இவா தான் தகப்பன்னு யாரை சொல்லிக் கொடுத்திருக்காளோ..அவா தான் தகப்பன், மற்றவா உரிமை கொண்டாட முடியாது. விஜேயேந்திரருக்கு உரிய மரியாதை தரப்பட்டது.அவர் அர்த்த மண்டபத்துடன் நின்று ஆராதனை செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இவ்வளவு சொல்லியும் மீறப்பட்டுள்ளது. ஆன்மீகத்தில் இருக்கும் துறவிகளுக்குள்ளே மோதல் என்று வருவது ஆரோக்கியமானதில்லை என்பதால் நான் இந்த அளவோட நிறுத்திக்கிறேன். இது குறித்து எங்க தலைமை என்ன முடிவு எடுக்கப்போறான்னு தெரியல.’’ என்றார்!

சென்னையைச் சேர்ந்த மூத்த சிவாச்சாரியாரான சுப்பிரமணிய குருக்களிடம் (75) பேசிய போது, ‘’பொதுவாக சந்நியாசிகள் கருவறைக்குள் செல்ல ஆகமவிதிப்படி அனுமதி கிடையாது. பெரியவா இருக்கும் போது இந்த விதியை அவர் மீற முயன்றதில்லை! அடுத்தவா போன போதும் அவா அனுமதிக்கல.அப்படி இருக்கும் போது இவர் ஏன் போனார்னு எனக்கு விளங்கல. தெரிந்து போனாரா? தெரியாம போனாரா…? மொத்தம் 28 ஆகமங்கள் இருக்குது! அந்தந்த குருக்களிடம் அதற்கான ஆகமங்கள்,மந்திரங்கள் பயின்று, அதை அப்படியே வழிவழியாக பாரம்பரியமாக செய்பவர்களே செய்ய வேண்டும். இதை மீறினால் அதற்குரிய கஷ்ட, நஷ்டங்களை நாம் அனுபவிக்க தான் வேண்டும். இதனால் இந்த நாட்டுக்கே கூட ஆபத்து ஏற்படலாம். துறவின்னா எல்லாவற்றையும் துறந்தவா தான் துறவி. அவங்க தங்களோட அனுஷ்டானங்களுக்கேற்ப நடந்துக்கிடணும். அது போல லோகத்து ஜனங்களோட கஷ்டங்கள் தீர, அவா சார்பா கடவுளிடம் பூஜை செய்பவர்களே சிவாச்சாரியார்கள்! சிருங்கேரி மடத்திற்கு சொந்தமான இராமேஸ்வரம் கோவிலில் மற்றவர்கள் தலையிடுவது ஏற்புடையதல்ல!

கிருபானந்த வாரியாரின் சீடரும்,ஆகமவிதிமுறை அர்சகர்களை பயிற்றுவிப்பருமான சத்தியவேல் முருகனாரிடம் பேசிய போது, சங்கராச்சாரியார்கள் தொடர்ந்து இது போல அத்துமீறல்களை செய்ய முயன்ற போதெல்லாம் கடும் எதிர்ப்புகளை கடந்த காலங்களில் சந்தித்து உள்ளனர்! காஞ்சிபுரம் மடத்துக்கு உரிய கோவிலான காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிசேகத்தின் போது, முன்பு ஒரு சம்பவம் நடந்தது. கும்பாபிஷேக கோபுரத்தின் மீதே, இதே போல ஜெயேந்திரர் ஏறி தானும் செய்ய முயன்றார். அப்போது உடனே, அத்தனை கோபுரங்களில் இருந்த சிவாச்சாரியார்களும் கீழே இறங்கி ’’நாங்க இனிமே எதையும் செய்யமாட்டோம். அவரே செய்யப்பட்டும்’’ என கிளம்பிவிட்டனர். உடனே பெரியவர்  சிவாச்சாரியார்களைஅழைத்து சமாதானப்படுத்தியதோடு, ஜெயேந்திரரை மன்னிப்பு கேட்க வைத்தார். திரு நெல்வேலி நெல்லையப்பர் கோவிலும் ஜெயேந்திரர் இது போல முயற்சித்து அங்குள்ள சிவாச்சாரியார்களின் கடுமையான எதிர்ப்பை சம்பாதித்தார். திருப்பதியிலும் ஜெயேந்திரர் முயன்ற் போது ஜீயர்சுவாமிகள் அதை கண்டித்தார்! வேறு எந்த மடாதிபதிகளும் இது போன்ற அத்துமீறல்களை செய்வதில்லை.

அவரவர் எல்லைகளை உணர்ந்து அவரவர் செயல்பட்டால் நல்லது. மேற்படி விவகாரத்தில் கோவிலின் அரசாங்க நிர்வாகிகள் தலையிட்டு விஜயேந்திரருக்கு ஆதரவாக அவர் கருவறைக்குள் செல்ல துணை போயுள்ளனர். இந்து அறநிலைய சட்டப்படி பூஜை முதலிய உள்விவகாரங்களில் அரசு அதிகாரிகள் தலையிடக் கூடாது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும், அங்கு விஜயேந்திரர் உடன் சென்றவர்கள் அதிகாரிகளை தங்களுக்கு ஆதரவாக செயல்பட தூண்டியுள்ளனர். இதற்கு குருமூர்த்தி,ஹெச்.ராஜா ஆகியோரே காரணம். இந்த குருமூர்த்தி, ஹெச்.ராஜா போன்றவர்கள் இது நாள் வரை கோவில் விவகாரங்களில் அரசாங்கம் தலையிடக் கூடாது என்று பேசி வந்தவர்கள் தான். ஆனால், தற்போது அரசாங்கமே தலையிட வழிவகையற்ற கோவில் பூஜை போன்ற உள்விவகாரங்களில் இவர்கள் அரசாங்க அதிகாரத்தை மிஸ்யூஸ் செய்ய வைத்துள்ளனர்.’’ என்றார்.

ஆதி சங்கரரால் நிறுவப்பட்ட மடங்கள்; கிழக்கில் பூரியின் கோவர்தன மடம், தெற்கில் சிருங்கேரியில் உள்ள சிருங்கேரி மடம், மேற்கில் துவாரகையின் காளிகா மடம்  வடக்கில் பத்ரிகாஷ்ரமத்தின் ஜோதிர் மடம் ஆகிய நான்கு மட்டுமேயாகும்!. ஆதிசங்கரரின் வரலாறு, இந்த நான்கு மடங்களின் வரலாறு ஆகிய எதிலும் காஞ்சி சங்கர மடத்தைப் பற்றிய குறிப்புகள் கிடையாது. ஆனால், ஆதி சங்கரால் உருவாக்கப்பட்ட மடமாக தன்னை நிறுவ சங்கர மடம் பல பொய்யான கதைகளை சிருஷ்டித்துக் கொள்வதோடு, தனக்கு இல்லாத அதிகாரங்களும், உரிமைகளும் இருப்பதாக அடவாடி செய்கிறது! உண்மை என்னவென்றால், 1821ல் சிருங்கேரி மடத்தின் கிளை ஒன்று  கும்பகோணத்தில் துவங்கப்பட்டது. அந்த கிளை சிருங்கேரி மடத்தின் கட்டுப்பாட்டிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, தனித்து இயங்குவதாக அறிவித்துக் கொண்டது. அது பின்னாட்களில் காஞ்சிக்கு இடம்பெயர்ந்தது. அது தமிழக பிராமணர்களால் அரசியல், அதிகார மையங்களுக்கு தன்னை நெருக்கமாக்கிக் கொண்டது. எல்லா இடங்களிலும் தன் அதிகாரத்தை நிலை நிறுத்த முயற்சிக்கிறது. மற்ற உண்மையான சங்கரமடங்கள் ஆன்மீகப் பணிகளை தவிர்த்த அரசியல் விவகாரங்களில் அனாவசியமாக தலையிடுவதில்லை என்பதும் கவனத்திற்குரியது.

‘’உருவ வழிபாடே கூடாது.பக்தி மயக்கங்களில் இருந்து விடுபடுங்கள்.பிரம்சூத்திரத்தை உணர்ந்து ஞானம் பெறுங்கள்’’ என்பதே ஆதிசங்கரரின் உபதேசம்! அதற்கு விரோதமாக பூஜை, புனஸ்காரம், கோவில்..அவற்றுக்கு தங்க காசுகள்,வெள்ளி பொருட்கள் நன்கொடை.. பதிலாக தங்களுக்கு பூரணகும்ப மரியாதை என சராசரி மனிதர்களை போல சங்கராச்சாரியார்கள் செயல்படுவது துறவுக்கே இழுக்காகும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக