சனி, 20 பிப்ரவரி, 2021

புதுச்சேரியில் திமுக-காங்கிரசை சேர்த்துவைத்த பாஜக

திமுக-காங்கிரசை சேர்த்துவைத்த பாஜக

minnambalam :புதுச்சேரியில் மதசார்பற்ற ஜனநாயக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சியும் திமுகவும் கருத்து வேறுபாடுகளால் கடந்த ஆறு மாதங்களாக பிரிந்திருந்த நிலையில், தற்போதைய தனது நடவடிக்கைகள் மூலம் இந்த இரு கட்சிகளையும் மீண்டும் ஒன்றிணைத்துள்ளது பாஜக.

புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ்- திமுக இணைந்து போட்டியிட்ட 2016 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 15, திமுக 2 மொத்தம் 17 எம். எல்.ஏ. க்களுடன் காங்கிரஸ் ஆட்சியை அமைத்து முதல்வரானார் நாராயணசாமி.   கடந்த ஆறு மாதங்களாகவே முதல்வர் மீது அதிருப்தியான திமுகவினர் காங்கிரஸ் கட்சிக்கும் ஆட்சிக்கும் எதிராக செயல்பட்டுவந்தார்கள். ஒரு கட்டத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக தனித்து போட்டியிட தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டார்கள்.   புதுச்சேரி திமுக நிர்வாகிகள் இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலினை ஒன்றாக சென்று அறிவாலயத்தில் சந்தித்து, ‘புதுச்சேரியில் திமுக தனித்துப் போட்டியிட்டு ஆட்சியைப் பிடிக்க முடியும்’ என்று வலியுறுத்தினார்கள்.

இதன் அடிப்படையில் திமுகவின் எம்பி ஜெகத்ரட்சகனை புதுச்சேரியின் முதல்வர் வேட்பாளராகவே முன்னிறுத்தி திமுக நடத்திய பிரம்மாண்ட ஆலோசனைக் கூட்டம் பரபரப்பாக பேசப்பட்டது. அந்த கூட்டத்தில் ஜெகத்ரட்சகனும், புதுச்சேரி திமுக பொறுப்பாளர்களும் காங்கிரஸ் அரசைக் கடுமையாக விமர்சித்தார்கள். இது டெல்லி வரை எதிரொலித்து ஸ்டாலினும், ‘இது கட்சிப் பணிதான் தேர்தல் பணி அல்ல’என்று விளக்கம் அளித்தார்.

இதற்கிடையில் பாஜகவினர் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க முடிவு செய்து காங்கிரஸ் எம். எல். ஏ.க் களை தொடர்ந்து ராஜினாமா செய்ய வைத்தனர். பரபரப்பின் அடுத்த கட்டமாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு பதிலாக தெலங்கானா ஆளுநர் தமிழிசையை புதுச்சேரிக்கும் பொறுப்பு துணை நிலை ஆளுநராக்கியது மத்திய அரசு.

வரும் 22 ஆம் தேதி மெஜாரிட்டியை நிருபிக்க ஆணை பிறப்பித்தார் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.

இந்த பின்னணியில், முதல்வர் நாராயணசாமிநேற்று (பிப்ரவரி 19) மதசார்பற்ற ஜனநாயக கூட்டணியில் உள்ள 17 கட்சியினரை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதில் திமுக எம். எல். ஏ.க்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

திமுகவையும் காங்கிரசையும் பிரிக்க நினைத்து அதற்காக முயற்சி செய்த பாஜக, தனது செயல்பாடுகளால் பிரிய இருந்த இந்தக் கட்சிகளை தானாகவே ஒன்றிணைய வைத்திருக்கிறது.

-வணங்காமுடி

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக