புதன், 10 பிப்ரவரி, 2021

மலேசியா ஓரின சேர்க்கையாளர்கள் மீது கடும் போக்கு

BBC : மலேசியாவை சேர்ந்த ஓரின சேர்க்கையாளர் ஒருவர் வெளிநாட்டில் உள்ள தனது 'வாழ்க்கை துணை'யை சந்திக்கும் நோக்கத்துடன், பயண அனுமதி கோரி மலேசிய குடிவரவு (இமிகிரேஷன்) துறையிடம் அளித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும், நிராகரிப்புக்கு காரணம் குறிப்பிடப்பட வேண்டிய பகுதியில் "மனம் வருந்துங்கள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகவலை அந்த ஆடவர் தெரிவித்ததாக மலேசிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவலான விவாதங்களை தூண்டியிருக்கிறது. மலேசியாவில் பொது நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்ட பிறகு, இதுவரை வெளிநாடு செல்வதற்காக தாம் 30 முறை குடிவரவுத்துறையிடம் அனுமதி கோரி விண்ணப்பம் அளித்ததாக அந்த ஆடவர் தெரிவித்துள்ளார். ... முறையும் தமது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகவும், அச்சமயங்களில் 'போதுமான துணை ஆவணங்கள் இல்லை' அல்லது 'தேவையற்ற பயணம்' என்பதே நிராகரிப்புக்கான காரணமாக குறிப்பிடப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

தாம் நிரந்தரமாக ஐரோப்பாவுக்கு குடிபெயர இருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காகவே தற்போது பயணம் மேற்கொள்ள விரும்புவதாகவும் அவர் கூறுகிறார்.

இந்நிலையில் கடந்த வாரம் மீண்டும் வெளிநாடு சென்று திரும்ப தாம் அளித்த விண்ணப்பம் வழக்கம்போல் நிராகரிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ள அவர், இம்முறை அதற்காக சுட்டிக்காட்டப்பட்ட காரணம் அதிர்ச்சி அளித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

நிராகரிப்புக்கான இதர காரணங்கள் என்ற பகுதியில், 'தயவு செய்து மனம் வருந்துங்கள்' (please repent) என்று மலாய் மொழியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

"எனது விண்ணப்பத்துடன் பல துணை ஆவணங்களை அளித்திருந்தேன். அதில் எனது 'வாழ்க்கைத் துணை' ஒரே பாலினத்தவர் என்பதை அவரது பெயர் வெளிப்படுத்தி இருப்பதாக நம்புகிறேன்.

"எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதில் எனக்கு ஆச்சரியம் ஏதுமில்லை. ஆனால் அதற்காக தெரிவிக்கப்பட்டுள்ள காரணம்தான் அதிர்ச்சி அளிக்கிறது. என்னை மனம் வருந்துமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற பொறுப்பற்ற பதிலை இப்போதுதான் முதல் முறையாக பெறுகிறேன்.

"மலேசியாவில் இருந்து வெளியேறுவதற்கு அனுமதி கோருவதை தற்காலிகமாக கைவிட்டுள்ளேன். ஏனெனில் நான் செல்ல விரும்பும் நாட்டிலும் அதன் எல்லைகளை மூடிவிட்டனர். எனவே மலேசியாவில் இருக்கும் நேரத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதை எதிர்நோக்கி உள்ளேன்," என்று அந்த ஆடவர் குறிப்பிட்டதாக மலேசிய ஊடகச் செய்தி மேலும் தெரிவிக்கிறது

மலேசியாவில் மீண்டும் பொது நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருப்பதால் பயணங்கள் மேற்கொள்ள பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. எனினும் முக்கியமான மாநாடுகள், தொழில்முறை சந்திப்புகளில் பங்கேற்பதற்கும், மருத்துவ அவசர நிலையை முன்னிட்டும், இதர சில அவசர காரணங்களுக்காகவும் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.

மேலும், மலேசியாவில் ஓரினச் சேர்க்கை குற்றமாகக் கருதப்படுகிறது. அந்நாட்டின் முன்னாள் துணைப் பிரதமர் அன்வார் இப்ராகிம் மீதும் இத்தகைய குற்றச்சாட்டு முன்பு எழுந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக