சனி, 6 பிப்ரவரி, 2021

ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்றுங்கள்... அ.தி.மு.க.வினருக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவுறுத்தல்

ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்றுங்கள்... அ.தி.மு.க.வினருக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவுறுத்தல்
maalaimalar : சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைக்காலம் முடிந்து விடுதலை செய்யப்பட்ட சசிகலா, பெங்களூருவில் ஒரு வாரகால ஓய்வுக்கு பிறகு நாளை மறுநாள் சென்னை திரும்ப உள்ளார். அவர் தனது காரில் அதிமுக கொடியை பொருத்தியது, அதிமுகவை கைப்பற்றுவோம் எனறு டிடிவி தினகரன் கூறியது, அதிமுகவில் சசிகலாவுக்கு ஆதரவு குரல் போன்ற நிகழ்வுகள் அதிமுகவில் சலசலப்பை உருவாக்கி உள்ளது. இந்த சூழ்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகளுடன், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்துவது குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

இக்கூட்டத்திற்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில்,  அனைவரும் ஒற்றுமையுடன் விழிப்புடன் தேர்தல் பணியாற்றி வெற்றியை ஈட்டுவது குறித்து, கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

‘எத்தனை நூற்றாண்டு வந்தாலும் மக்களுக்காகவே அதிமுக இயங்கும் என ஜெயலலிதா கூறி உள்ளார். ஜெயலலிதாவின் கனவை நனவாக்கும் வகையில் ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்ற வேண்டும். அதிமுக அரசின் சாதனைகளை பிரசாரம், துண்டுப் பிரசுரங்கள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்’ என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக