புதன், 17 பிப்ரவரி, 2021

கொரோனாவால் 24 மணி நேரத்தில் 18 மாநிலங்களில் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை

dailythanthi.com : புதுடெல்லி, கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிரான போரில் இந்தியா தொடர்ந்து வெற்றி நடை போட்டு வருகிறது. வலுவான சுகாதார கட்டமைப்பாலும், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் சுகாதார பணியாளர்களாலும் கொரோனா மீட்பில் இந்தியா தொடர்ந்து உலகளவில் முதல் இடத்தை தக்கவைத்து வருகிறது. நேற்றும் கூட 24 மணி நேரத்தில் நாட்டில் 11 ஆயிரத்து 805 பேர் இந்த வைரஸ் தொற்றில் இருந்து குணம் அடைந்து பல்வேறு ஆஸ்பத்திரிகளில் இருந்து வீடுகளுக்கு திரும்பி இருக்கிறார்கள்.

கேரள மாநிலத்தில் 5,073 பேரும், மராட்டிய மாநிலத்தில் 3,105 பேரும் கொரோனா வைரசின் கோரப்பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.   நமது நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் பெருந்தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 6 லட்சத்து 33 ஆயிரத்து 25 ஆக உயர்ந்து இருக்கிறது.

அதே நேரத்தில் மீட்பு விகிதம், 97.32 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது உலகின் அதிகபட்ச மீட்பு விகிதங்களில் ஒன்று என்பது அடிக்கோடிட்டு காட்டத்தக்கதாகும்.

இதற்கிடையே ஒரே நாளில் புதிதாக 9,121 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவல் பதிவாகி உள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 9 லட்சத்து 25 ஆயிரத்து 710 ஆக அதிகரித்து இருக்கிறது.

இந்த மாதத்தில் 4-வது முறையாக தினசரி பாதிப்பு, 10 ஆயிரத்துக்குள் வந்துள்ளது.

நேற்று முன்தினம் 6 லட்சத்து 15 ஆயிரத்து 664 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், புதிய பாதிப்பு 10 ஆயிரத்துக்குள் அடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் வைத்துக்கொண்டிருக்கிறது என்பதை இந்த புள்ளி விவரங்கள் பறை சாற்றுகின்றன.

கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படுகிற உயிர்ப்பலிகளும் தொடர்ந்து கட்டுக்குள் இருக்கிறது என்பது நல்ல செய்தியாக அமைந்திருக்கிறது.

அந்த வகையில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 81 ஆக பதிவாகி உள்ளது.

இவர்களில் 23 பேர் மராட்டிய மாநிலத்தினர் ஆவார்கள். கேரளாவில் 13 பேரும், பஞ்சாப்பில் 10 பேரும், சத்தீஷ்காரில் 5 பேரும் கொரோனாவால் மரணத்தை தழுவி உள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவுக்கு இரையானோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 55 ஆயிரத்து 813 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் 18 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் ஒருவர்கூட உயிரிழக்க வில்லை என்ற தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

கொரோனா வைரஸ் பலி விகிதம் 1.43 சதவீதமாக உள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து மீள்வதற்காக நேற்றைய நிலவரப்படி 1 லட்சத்து 36 ஆயிரத்து 872 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சையில் இருக்கிறார்கள்.

இது மொத்த பாதிப்பில் 1.25 சதவீதம் மட்டுமே ஆகும்.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்து 35 ஆயிரத்து 527 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இதன் மூலம் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் மொத்த எண்ணிக்கை 87 லட்சத்து 20 ஆயிரத்து 822 ஆக உயர்ந்து இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக