ஞாயிறு, 7 பிப்ரவரி, 2021

உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் .. பனிமலை உடைந்து உருகியதால் ஏற்பட்ட

maalaimalar : டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டம் ஜோஷிமாத் பகுதியில் உள்ள நந்தாதேவி பனிமலை இன்று திடீரென உடைந்துள்ளது. ரேனி கிராமத்தில் ரிஷிகங்கா மின்நிலையம் அருகே பெரிய அளவில் பனிப்பாறைகள் சரிந்து, வேகமாக உருகியதால் தவுலிகங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதும் ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மீட்பு பணி நடைபெற்று வருகிறது. ரேனி கிராமத்தின் அருகே முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ராணுவ வீரர்களிடம் பாதிப்பு நிலவரம் குறித்து கேட்டறிந்தார். ஆற்றங்கரையோரத்தில் உள்ள ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. 100 முதல் 150 பேர் வரை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இத்தகவலை மாநில தலைமைச் செயலாளர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். 

கடினமான இந்த சமயத்தில் மாநில அரசுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உறுதி அளித்துள்ளார். டெல்லியில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையின் மூன்று குழுக்கள் உத்தரகாண்ட் சென்றடைந்துவிட்டதாகவும், தேவைப்பட்டால் கூடுதல் குழுவினர் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் கூறி உள்ளார். ஏற்கனவே இந்தோ திபெத் எல்லை போலீஸ் படை வீரர்கள் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் அமித் ஷா கூறி உள்ளார். 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக டேராடூனில் விமானப்படையின் எம்ஐ-17 ரக இரண்டு ஹெலிகாப்டர்கள், ஒரு துருவ் ஹெலிகாப்டர் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப கூடுதல் ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்படும் என்று விமானப்படை அதிகாரிகள் கூறி உள்ளனர். 

600 ராணுவ வீரர்கள் பாதிக்கப்பட்ட பகுதிக்கு விரைந்திருப்பதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். 

உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு சூழல்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் மற்றும் உயர் அதிகாரிகளிடம் பேசி அங்குள்ள நிலவரத்தை அறிந்துகொண்டதாகவும் பிரதமர் மோடி கூறி உள்ளார். 

உத்தரகாண்ட் மாநிலத்திற்கு நாடே துணை நிற்பதாகவும்,  அங்குள்ள அனைவரின் பாதுகாப்பிற்காக தேசம் பிரார்த்தனை செய்வதாகவும் பிரதமர் கூறி உள்ளார்.

இதேபோல் உத்தரகாண்டில் ஏற்பட்ட இந்த பேரிடர் குறித்து கேள்விப்பட்ட பல்வேறு தலைவர்கள் தங்கள் கவலைகளைவும், பிரார்த்தனைகளையும் பதிவு செய்தவண்ணம் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக