வெள்ளி, 1 ஜனவரி, 2021

நித்தியானந்தா கைலாசா இருப்பது Vanuatu Island! . காட்டிக்கொடுத்த வீடியோ! அரெஸ்ட் எப்போது?

Indian godman Nithyananda running his account from Vanuatu? |

nakkheeran.in - தாமோதரன் பிரகாஷ் L கைலாசா நியாபகமிருக்கா? கரோனா காலத்தில் மறந்து போயிருந்ததை, லாக்டவுன் தளர்ந்து, விமான சர்வீஸ்கள் மெல்ல தொடங்கி, தடுப்பூசிகளும் வரும் நேரத்தில் கைலாசாவை மீண்டும் நினைவூட்டியிருக்கிறார் நித்யானந்தா.   சமீபத்தில் அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.                              அதில், ‘கைலாசா நாட்டிற்கு வர விரும்புவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். கைலாசாவிற்கென தனியாக 'விசா' எடுக்கத் தேவையில்லை. இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு செல்ல ஒருவார 'விசா' எடுத்தால் போதும். கைலாசாவிற்கு வருவதற்காக முன்பதிவு செய்தவர்கள் ஆஸ்திரேலியாவிற்கு வந்தால் அங்கிருந்து 'கருடா' எனப்படும் தனியார் விமான சர்வீஸ்கள் மூலம் அவர்கள் கைலாசாவிற்கு அழைத்துவரப்படுவார்கள்.                             அப்படி வருபவர்கள் கைலாசாவில் மூன்று நாட்கள் தங்கலாம், சிவபெருமானை (நித்திதான்) நேரடியாகச் சந்திக்கலாம்’ என்று அறிவித்துள்ளார். பாலியல் வன்கொடுமை வழக்கில் நித்யானந்தா குற்றவாளி.                        அவரை இந்திய நீதிமன்றங்கள் விசாரணைக்கு அழைத்து வாரண்ட்டுகள் பிறப்பித்துள்ளன. ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவரைப் பிடித்துக் கொண்டுவர ‘ரெட் கார்னர்' நோட்டீஸ் எனப்படும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சர்வேதேச போலீஸ் உதவியும் நாடப்பட்டுள்ளது.

 அப்படிப்பட்டவர், ஆஸ்திரேலியாவிற்கு பக்கத்தில் "கைலாசா' என்ற நாட்டை உருவாக்கி விட்டதாகவும், ஐ.நா. சபையில் தனிநாடு அந்தஸ்து கோருவதாகவும் கூறுகிறார். அந்த நாட்டிற்கு வருவதற்கான வழியைச் சொல்லி, தனது தரிசனத்திற்காக பணமும் வசூல் செய்கிறார். இந்திய நாட்டின் சட்டங்களுக்கு கட்டுப்படாதவர் போல நடந்துகொள்கிறார். எப்படி இது சாத்தியம்?

 இது பற்றி நித்யானந்தாவிற்கு நெருக்கமானவர்களிடம் கேட்டோம், "நித்யானந்தாவின் இந்த அறிவிப்பு 'நானும் ரவுடிதான்' என்பது போன்ற அலப்பறை. இதுபோல பல அறிவிப்புகளைப் பொய்யாக வெளியிடுவார். அவரை இந்திய அரசால் ஒன்றும் செய்ய முடியாது. அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட ‘ரெட் கார்னர்' நோட்டிஸும், சர்வேதச பிடிவாரண்டும் தன்னைப் பாதிக்காது என்று நித்தியானந்தா சொல்கிறார்.” என்று தெரிவித்தனர்.

 ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக பிரபாகரன் மீது இந்திய அரசு வழக்குப் பதிவுசெய்து பிடிவாரண்ட் பிறப்பித்து, இன்டர்போல் போலீஸ் உதவியை நாடியது பற்றி ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பிரபாகரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. "நடக்கிற கதை எதையாவது கதைக்கச் சொல்லுங்கள்'' என்றார் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன். அந்த மாவீரனுக்கான பிடிவாரண்ட்டுடன் தனக்கானதை மமதையுடன் ஒப்பிட்டுக் காட்டி ஏளனமாகச் சிரிப்பது நித்தியானந்தா வழக்கம் என்கிறார்கள் ஆசிரமவாசிகள். ‘பிரபாகரனிடம் படை இருந்தது. என்னிடம் பணம் இருக்கிறது’ என்பாராம்.

 நித்தியானந்தா நேரடியாக இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்லவில்லை. நேபாள நாட்டிலிருந்து வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளார். அப்போதே தனது காலாவதியான இந்திய பாஸ்போர்ட்டை கிழித்து எறிந்துவிட்டார். பெலிக்ஸ் என்கிற கரீபியா நாட்டின் குடிமகன்தான் தற்போதுள்ள நித்தியானந்தா. அந்த நாட்டின் பாஸ்போர்ட்டில்தான் அவர் வெளிநாடுகளில் சுற்றித் திரிக்கிறார். இந்திய அரசு இன்டெர்போல், ரெட் கார்னெர் நோட்டீஸ்களைக் கொடுத்து தீவிரமாக தேடியபோது அவர் எந்த நாட்டிலும் தங்கவில்லை. கரீபிய தீவுக் கூட்டங்களுக்கு இடையே ஆழ்கடலில், சர்வதேச கடல் எல்லைகளில் கப்பலில் சுற்றித் திரிந்தார். இப்போழுது கரையொதுங்கியிருக்கிறார். கொரோனா நடவடிக்கைகளால் அவரைத் தேடுவதை இந்திய அரசு நிறுத்திவிட்டதால் கைலாசா நாட்டிற்கு வாருங்கள் என வீடியோ வெளியிட்டுள்ளார்.

 வீடியோவில் உள்ள தகவலின்படி பார்த்தால், இவர் தங்கியிருப்பது வணுவாட்டி Vanuatu என்கிற தீவில்தான் என்பது தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து 750 கிலோமீட்டர் தொலைவில், அமெரிக்காவின் நார்த் கலிஃபோர்னியாவிலிருந்து 540 கிலோமீட்டர் தொலைவில், நியூ கினியா என்கிற மேற்கிந்திய தீவுகளின் கிழக்குப்பகுதியில் புகழ்பெற்ற 'சாலமன் ஐலேண்ட்' என்கிற தீவின் தெற்குப்பகுதியில் இந்த வணுவாட்டி தீவுகள் அமைந்துள்ளன. 1980-ஆம் ஆண்டு பிரெஞ்சு காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற வணுவாட்டி குடியரசு 4,000 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்ட தீவுக்கூட்டங்கள் ஆகும். இதில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை.

 வெறும் 6 சதவிகித விவசாய நிலங்களைக் கொண்ட இந்த நாட்டில், பொங்கும் எரிமலைகளும் கடும்புயல்களும் சகஜம். இந்த நாடு சுவிட்சர்லாந்தை (ஸ்விஸ்) போல வங்கிகளைக் கொண்டது. எந்த நாட்டில் இருந்தும் இந்த நாட்டு வங்ககளில் பணம் போடலாம். அதைப் பயன்படுத்தி கோடிக்கணக்கான ரூபாய்களை வணுவாட்டியில் வைத்துள்ளார் நித்யானந்தா. அவரது ஆன்லைன் யோகா வகுப்புகளுக்கான கட்டணம் வணுவாட்டி வங்கி மூலம்தான் வசூலிக்கப்படுகிறது என்கிறார்கள் நித்திக்கு நெருக்கமானவர்கள்.

 மொத்தத்தில் 'கைலாசா' என்பது வணுவாட்டியைச் சுற்றியிருக்கும் மனித நடமாட்டம் இல்லாத, குடிக்க தண்ணீர்கூட இல்லாத தீவுகளில் ஒன்று என்பதை ‘எங்கப்பன் குதுருக்குள் இல்லை' என்பதைப் போல நித்தியே வெளிப்படுத்தி, மாட்டிக்கொண்டார் என்கிறார்கள் மத்திய அரசு அதிகாரிகள்.

 அவராக மாட்டுவது இருக்கட்டும், மத்திய அரசு எப்போது அவர் கையில் விலங்கு மாட்டும் எனக் கேட்கிறார்கள் நித்தி ஆசிரமத்தில் பலவித கொடூரங்களை அனுபவித்தவர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக