செவ்வாய், 19 ஜனவரி, 2021

மலையக மக்கள் முன்னணி என்ற முதல் அரசியல் கட்சியை மலைநாட்டில் .. Murugan Sivalingam

Image may contain: 2 people, people dancing, people standing, people on stage and people playing musical instruments

Murugan Sivalingam : · சாஸ்திரி... சிறிமா வதைப்படலம் பழையன நினைத்தல்--6!  

சிவலிங்கம் செந்தூரன் இரட்டையர்கள் உருவாக்கிய ஹைலண்ஸ் கல்லூரி அடையாளங்களான சில பிரபல்யங்களை இங்கு பதிவிடுவதுபெருமைக்குரியதாகும்! மு.க.நல்லையா என்ற "சாரல்நாடன்"கல்லூரி காலத்திலேயே தமிழ்..ஆங்கில மொழியில் பேச்சாற்றல் கொண்டவர். கல்லூரி தமிழ்ச்சங்க கையெழுத்துப் பத்திரிகையான "தமிழோசை" யின் ஆசிரியராக செயற்பட்டவர். தொழிலில் தலைமை தேயிலைத் தொழிற்சாலை உத்தியோகத்தராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.தோட்ட சேவையாளர் சங்கத்தின் செயலாளராக இருந்தவர்.கவிதைகள் சிறுகதைகள்.. ஆய்வு கட்டுரைகள் என இலக்கியப் படைப்புக்களைத் தந்தவர் கோதண்டராமன் நடேசய்யர்...கவிமணி சி.வி. வேலுப்பிள்ளை...இர.சிவலிங்கம் ஆகியோர் பற்றி வரலாற்று நூல்கள் எழுதியவர். பல இலக்கிய ஆய்வு நூல்களும் எழுதியவர்.மு.சிவலிங்கம் நாடகம் நடித்தல்..மேடைப் பேச்சு என முன்னணியில் இருந்தவர். சாரல்நாடனுக்கு அடுத்து கல்லூரியில் தமிழ்ச்சங்கப் பத்திரிக்கையான தமிழோசைக்கு ஆசிரியராக இருந்தவர் .கதை..கவிதை..கட்டுரை என ஈடுபாடு கொண்டவர். தொழில் ஈடுபாட்டில்   பத்திரிக்கையாசிரியர்..பாடசாலை ஆசிரியர்.. என்றும் சமூகப் பணியில் ம.ம.முன்னணியின் பொதுச்செயலாளர்.. மத்திய மாகாண சபை பிரதித் தலைவர் என செயற்பட்டவர். மலையக மக்கள் முன்னணி உருவாக்கத்தில் ஒருவராக இருந்தவர். கல்வி... கலை..இலக்கியம் நாடகம்..சினிமா அரசியல் இவரது துறைகளாகும். சிறுகதைத்தொகுப்புகள்..நெடுங்கதைத் தொகுப்புகள்..மொழி பெயர்ப்புக்கள்..ஆய்வு நூல்கள்

Image may contain: 1 person, closeup

விமரிசனக்கட்டுரைகள் ஆகியன இவரது படைப்புக்களாகும்.
அரசியல் காரணங்களுக்காக இரண்டு முறை சிறை அனுபவம் பெற்றவர்.
எம்.வாமதேவன் கல்லூரியின் சிறந்த பேச்சாளர்.சிறப்பாகக் கட்டுரைகள் எழுதக்கூடியவர்.ஒவ்வொரு வருடமும் கட்டுரைப்போட்டிகளில் முதற் பரிசுகளைத் தட்டிக்கொள்பவர்! எங்களது பொறாமைகளுக்கெல்லாம் ஆளானவர்! எங்களது கல்லூரி காலத்தில் முதலாவது மாணவர்களாக பல்கலைக்கழகம் சென்ற பெருமை இவரையும் பீ.மரியதாஸ் ஆகியோரையுமே சேரும்.
நாட்டின் அரச நிர்வாகச் சேவைகளில் உயர் உத்தியோகம் புரிந்தவர்.திட்டமிடல் அமைச்சின் பணிப்பாளராகவும் பல அமைச்சுக்களில் செயலாளராகவும் பணி புரிந்தவர். தாயகம் திரும்பிய மக்களின் புனர்வாழ்வு சம்பந்தமாக பல ஆங்கில ஆய்வு நூல்கள் எழுதியவர். சிறுகதைகள்..இலக்கிய நூல்கள் நூல் விமரிசனங்கள் என படைப்புக்களைத் தந்தவர். படத்தில்..ஒரு நிகழ்வில் இந்திரா காந்தி அம்மையாருடன்....
Image may contain: 1 person, standing and outdoor

தை.தனராஜ் கல்லூரியில் முன்னணி மாணவனாகத் திகழ்ந்தவர். இனிமையாகப் பாடக்கூடியவர். சிறந்த பேச்சாளர். சிறப்பாக ஆங்கிலத்தில் பேசக்கூடிய இவரை ஆசிரியர் செந்தூரன் சேக்ஸ்பியரின் ஒத்தெல்லோ ஆங்கில நாடகத்தில் அழகி தெஸ்திமோனியாவாக நடிக்க வைத்து அவர் அழகற்ற ஒத்தெல்லோவாக நடித்தார். இந்த நாடகம் கல்லூரிகள் மத்தியில் பெரும் புகழையும் பாராட்டுக்களையும் பெற்றது. வெளியிலும் இந்நாடகம் மேடையேற்றப்பட்டதாக அறிகின்றோம்.
இவர் கல்வித்துறையில் தொடர்ந்து ஈடுபாடு கொண்டவர். ஆங்கிலப் புலமை கொண்ட பேராசிரியர்களில் இவர் குறிப்பிடக்கூடியவர். திறந்த பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவிருந்தவர். கல்வி செயற்திட்டங்களுக்கு ஆலோசகராக செயற்பட்டு வருகிறார். தற்போது மாலபே சிலிட் ( SLIIT ) நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார். இலங்கை கல்வி சம்பந்தப்பட்ட..... ...மலையகக் கல்வி சம்பந்தப்பட்ட பல ஆய்வு நூல்களை எழுதியுள்ளார்
Image may contain: 1 person, closeup

வி.டி.தர்மலிங்கம் சென்.பொஸ்கோ கல்லூரியைச் சேர்ந்தவர்.ஆரம்பத்தில். செந்தூரன் அக்கல்லூரியில்தான் பணியாற்றினார்..தர்மா நன்றாகப் பாடுவார். சிறந்த நாடக நடிகன். கல்லூரி காலத்திலேயே நிறைய நாடகங்கள் எழுதியவர்.. செந்தூரனும், தர்மாவும் இணைந்து தோட்டவாரியாக காமன் கூத்து எனும் ரதி மன்மதன் இசை நாடகத்தை நடத்தினார்கள்.!
Image may contain: 1 person

தனது உயர்தரக் கல்வியை நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரியில் பயின்றார். ஹைலண்ஸில் எனது வகுப்பாசிரியராகவிருந்த டி..வி. மாரிமுத்து சேர் தான் தர்மாவை நாவலப்பிட்டி கல்லூரிக்கு தனது இடமாற்றத்துடன் அழைத்துச்சென்றார். இவர் தற்போது சுகம் குறைந்த நிலையில் கொட்டகலையில் வசித்து வருகின்றார்.தர்மா ஒருவரே எங்களைவிட இந்த மூன்று ஆசிரியர்களின் (pet student)செல்ல மாணவனாகவிருந்தார்! எல்லாவிடயங்களிலும் புரட்சிகரமாக நடந்துக்கொள்வார். மார்க்சிய சித்தாந்தத்தில் வசப்பட்டவர்.சிறந்த அமைப்பாளராகச் செயல் படுவார். லங்கா சமசமாஜக் கட்சியில் இணைந்து மத்துகம நகரில் பணி செய்தார்.இவரது தூக்கு கயிறு என்ற எழுச்சி நாடகம் பிரபல்யமானதாகும்."மலையகம் எழுகிறது" என்ற நூலையும் "கொழு கொம்பு" என்ற நெடுங்கதையையும் தந்தவர்.
பாடசாலை அதிபரான இவரைப் போல பாரதி விழாக்கள் நடத்தி சமூக விழிப்புணர்வுகளைத் தூண்டியவர்கள் எவரும் கிடையாது!
அரசியல் காரணங்களுக்காக சிறை அனுபவம் பெற்றவர்.
மலையக மக்கள் முன்னணி என்ற முதல் அரசியல் கட்சியை
மலைநாட்டில் உருவாக்கியவர்களுள் தர்மாவும் முக்கியமானவராக இருந்தவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக