வியாழன், 7 ஜனவரி, 2021

சிங்களவர்கள் முட்டாள்கள், நாங்கள் கெட்டிக்காரர்கள் என்பது அரசியல் கோட்பாடு அல்ல, அது Fantasy: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

Image may contain: 2 people
Rajes Bala - . London Thiruvalluvar
akazhonline.com - நேர்கண்டவர்: அனோஜன் பாலகிருஷ்ணன் : 84இல் என்று நினைக்கிறேன். புலிகள் அநுராதபுரத்தில் சாதாரண சிங்கள மக்களைக் கொலை செய்தார்கள் அல்லவா? அதேபோல எல்லைப் பகுதிகளில் எல்லாம் சிங்கள மக்கள் கொலை செய்யப்பட்டார்கள். பிக்குகளைக் கொலை செய்த சம்பவங்களும் நடந்தன. இவற்றைப் பற்றி ராஜினியிடம் கேட்டால் அவர் சொல்வார். ‘சண்டை என்றால் மக்கள் இறப்பார்கள்’ என்று.... இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், இங்கிலாந்துக்குப் புலம்பெயர முன்னரே இலங்கையில் எழுத்தாளராக நன்கு அறியப்பட்டவர். முற்போக்கு பாணியில் பல கதைகளை எழுதியிருக்கிறார். பெண்களின் மீதான் ஒடுக்குமுறைகள் உட்பட பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழுதியவர். உளவியல் நுட்பத்துடன் பல சிறந்த கதைகளையும் எழுதியிருக்கிறார். புலம்பெயர் இலக்கியத்தை, இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் என்ற பெயரைத் தவிர்த்துவிட்டு பேச இயலாது. அவர் நம் முன்னோடிகளில் ஒருவர். எழுத்து தவிர்ந்தும், அவரது மனித உரிமை செயற்பாடுகள் இங்கிலாந்து வாழ் தமிழர்களுக்கு பாரிய உதவிகளைச் செய்திருக்கிறது. அகதிகளுக்கான பிரித்தானியச் சட்டங்களில் சாதகமான மாற்றங்கள் ஏற்படுவதில் இவருடைய பங்களிப்பு முக்கியமானது. பிரித்தானியாவினால் அகதியாக ஏற்றுக்கொள்ளப்படும் ஒவ்வொரு தமிழருக்கும் இராஜேஸ்வரி அன்று பெற்றுக்கொடுத்த நலன்கள் இன்றும் உதவிபுரிகின்றன. அவருடனான நீண்ட நேர்காணல் இது.

இலக்கிய செயற்பாட்டில் ஈடுபட்ட அளவு, மனித உரிமைகள் அமைப்புகளின் செயற்பாடுகளிலும் ஈடுபட்டவர் நீங்கள். இலக்கியத்திலிருந்து சமூகச் செயற்பாட்டுக்குள் நுழைவதற்கான தாக்கம் எங்கிருந்து நிகழ்ந்தது? 


சிந்தனையின் வெளிப்பாடுதான் செயல்கள். சிந்தனை எவ்வாறு உங்களுக்கு உருவாகின்றது என்பது உங்களின் சூழ்நிலைகளைப் பொறுத்து இருக்கின்றது. ஒரு மனித சிந்தனை எப்படி உருவாகின்றது என்பதற்கு நிறைய கோட்பாடுகள் இருக்கின்றன.

குழந்தை பிறந்த நாளிலிருந்து குழந்தையின் எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிப்பது குழந்தையின் ஆரம்ப நாட்களும் அந்த குழந்தை வளர்கின்ற சூழ்நிலையும். அது மனநிலை ரீதியானது என்று பிராயிட் சொல்கின்றார். சூழ்நிலை சம்பந்தமானது என்று ‘எரிக் ஹெரிக்சன்’ என்ற குழந்தை உளவியல் நிபுணர் சொல்கின்றார். ஒரு குழந்தைக்கு சூழ்நிலை, பிறந்த இடம், வளர்ந்த இடம், ஆட்களுடனான தொடர்பாடல்  எல்லாவற்றையும் தாண்டி ஒரு சுயமை இருக்கின்றது என்று தியாஜே (Jen Piaget-1936) என்ற அறிஞர் சொல்கின்றார். அதிலிருந்து தான் எமது அறிவு வளர்கின்றது என்று அவர் சொல்கின்றார். நான் தியாஜே கோட்பாட்டை  நம்புகின்றேன்; பிராயிட் கோட்பாட்டைக் கேள்வி கேட்கின்றேன். ஹெரிக்சன் கோட்பாட்டை சரி என்று சொல்கிறேன். ஏனென்றால், நான் வளர்ந்தது மிக மிக கட்டுப்பாடான ஒரு கிராமம். அந்தக் கிராமத்தில் என் சுயமை வளர்ந்ததற்கு காரணம் சூழ்நிலை என்று சொல்லலாம். சூழ்நிலை சிந்தனையைத் தூண்டியது. என்னுடைய ஆரம்பகால வாசிப்பும், அந்த சூழ்நிலையும் முட்டி மோதின. அப்பா வைத்திருக்கும் தெய்வங்களைப் பற்றி பாடிய புத்தகங்களைப் படித்தேன். எங்கள் கிராமத்தில் பெண்கள் வலிமையான ஆணாதிக்கத்துக்குள் இருந்தார்கள். சமயங்களால் கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறை தான் அவர்களுடையது. பெரும்பாலான பெண்களுக்கு சுயம் என்பது இல்லை. There is no identity.

ஒருமுறை தம்பிகளோடு விளையாடிவிட்டு அம்மாவிடம் வந்த  நேரத்தில் “இனி ஓடித்திரிகின்ற வயதில்லை. பெரிய பிள்ளையாகப் போகின்றாய்.  சும்மா இரு” என்று அம்மா சொன்னார். அன்று எனக்கு நித்திரை வரவில்லை. பெரிய பிள்ளையாக இருக்க எனக்கு விருப்பமில்லாமல் இருந்தது. பெரிய பிள்ளை ஆனவுடன் என்ன நடக்கும் என்று தெரியும். உடனே கலியாணம் பேசுவார்கள். அப்போதுதான் சிந்தனையைச் செயல் வடிவமாக செய்ய வேண்டும் என்ற உந்துதல் எனக்கு வந்தது என்று நினைக்கின்றேன். படிக்க வேண்டும், இந்த கலியாணம், பிள்ளை குட்டி, சமையல் போன்றவை விருப்பமாக இருந்தாலும் அவைகளைத் தாண்டி இன்னொரு உலகத்தை நான் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற உணர்வு வந்தது.

அந்த காலகட்டத்தில் இலங்கையில் எங்களுடைய ஊரில் தமிழரசுக்கட்சி வந்தது. வெளியுலகம் தெரியாத எங்களுக்கு தமிழரசுக்கட்சி மூலம் தமிழர், தமிழ் சுதந்திரம் போன்ற விஷயங்கள் தெரியவந்தன. அவர்கள் பாட்டுக்கள் எல்லாம் பாடவைதார்கள். நாங்கள் கிராமத்து பாடசாலைகளில் கோயில்களில் வெள்ளிக்கிழமை பாடும் தேவாரங்களை மட்டுமே பாடுவோம். மேடைகளில் பாட வைத்தது தமிழரசுக்கட்சி கூட்டங்கள்தான். எனது ஆரம்பச் செயற்பாடுகள் அதில் இருந்து தான் ஆரம்பித்தன. அதாவது ஒடுக்கு முறைக்கு எதிராக, பெண்கள் ஒடுக்கு முறைக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வலுத்தது. நான் இந்தக் கல்யாண வாழக்கைக்குள் போகமல் இருப்பதற்கு படிப்பு முக்கியம் என்று உணர்ந்தேன்.

எனக்கு நிறையத் தம்பிமார்கள். என் தம்பிகள், சின்னம்மாவின் ஆண் குழந்தைகள் எல்லோருடன் சேர்ந்து விளையாடுவோம். அதனால் எனக்கு ஆச்சி திட்டுறதும், அம்மா பேசுவதும் குழப்பமாக இருந்தது. ஏனென்றால், தம்பிமாருடன் மரம் ஏறி இளநீர் குடிப்பது எல்லாம் செய்தேன். ‘பெண்’ என்பது யாரால் தரப்படுகின்ற அடையாளம்? பாரம்பரியத்தால் தரப்படுகின்றது. பெண்களாலேதான் தரப்படுகின்றது. பெண்கள், ஆண்கள் என்று இருப்பது இயற்கை நியதி. ஆனால் அதற்குள்ளே சுயமையற்ற ஒரு உயிராக பெண் இருக்க வேண்டும்  என்பதை நான் சிறு வயதிலேயே கேள்விப்பட்டு விட்டேன்.

நான் மிகவும் அதிஸ்டசாலி, எனக்கு நல்ல அன்பான ஆசிரியர்களும், அன்பான அப்பாவும் இருந்தார்கள். என்னுடைய செயற்பாடுகளுக்கு அப்பா சந்தோஷப்பட்டார். என்னுடைய அப்பாவும் என்னுடைய ஆசிரியர்களும் இல்லாமல் இருந்திருந்தால், அதற்குப் பிறகு யாழ்ப்பாணம் என்ற ஒரு வாசற்படியும் இல்லாமல் இருந்திருந்தால் ஒரு எழுத்தாளராக வந்திருக்க முடியுமா… செயற்ப்பாட்டாளராக வந்திருக்க முடியுமா… என்று எனக்குத் தெரியவில்லை.

என்னுடைய எழுத்திலிருந்துதான் மனித உரிமைக்கான செயற்பாடு புறப்பட்டது. பெண்களுக்கு உரிமையும், விடுதலையும் என்பது மனித உரிமை சார்ந்தது. ஆண்கள், பெண்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் இன்றியமையாதவர்கள். இரண்டு படைப்புக்கள். ஒருவர் அடக்கி வைப்பது மனித உரிமையற்ற விஷயம். அது தான் என்னுடைய தாரக மந்திரம்.

தமிழரசுக்கட்சியின் வருகையூடாகத்தான் உங்களது செயற்பாடுகள் ஆரம்பித்ததாகச் சொல்கிறீர்கள். ஆனால் இலண்டனுக்கு குடிபெயர்ந்த பின்னர், தமிழ் தேசியவாதிகளுக்கும், உங்களுக்கும் இடையில் முரண்பாடுகள் நிகழத்தொடங்கின அல்லவா?

இலங்கையில் நடந்த கொடுமைகளைத் தாங்க முடியாமல் எழுதத் தொடங்கினேன். 1976-ஆம் ஆண்டிலேயே சீதனக் கொடுமைக்காக எழுதினேன்.  ஓட்டைக்கள் விழுகுகின்றன,  ஒருவன் விலைப்படுகின்றான், மௌன அலர்கள் இப்படியான கதைகள் சீதனக் கொடுமைக்கு எதிராக, சாதிக்கு எதிராக நான் சின்னப் பெண்ணாக இருக்கும்போது எழுதியவை. நான் 19 வயதில் யாழ்ப்பாணம் போனேன்.  அங்கு பார்த்த சாதிக் கொடுமைகளைத் தாங்க முடியாமல் ‘இரத்தினம் அப்பா’ என்ற கதையை எழுதினேன். அது போல இலண்டனுக்கு வந்து இங்கேயும் சீதனம், சாதி என்று தமிழ் சமுதாயம் நாட்டில் இருப்பது போலவே அச்சு அசலாக இருப்பதைப் பார்த்து துயருற்றேன்.

நான் இலங்கையில் இருந்தபோதுபோது தமிழ் தேசியப் பாடல்களைப் பாடியபோதும், லண்டனுக்கு வந்து தமிழ்த் தலைவர்களின் பிரிவினை பற்றிப் பேசும் கூட்டங்களுக்கு செல்லும்போதும், என் கணவர் பாலசுப்பிரமணியம் இந்தப் பிரிவனைவாதங்கள் எங்கள் இனத்தை அழிக்கும் என்று சொன்னார். ஓர் அரசியல் கண்ணோட்டம் இல்லாமல் உணர்வு ரீதியாகப் பேசுகிறார்கள் என்று சொல்வார். பாலசுப்பிரமணியம், நான், எங்களைப் போன்ற சில நண்பர்கள் கூட்டங்களுக்குப் போனபோது எங்களை இங்கிருந்த தமிழ்தேசிய தலைவர்கள் துரத்தியும் இருந்தார்கள்.

ஆனாலும் சிங்கள அரசு தமிழர்களுக்குச் செய்த கொடுமைகள் அந்தக் காலத்தில் ஆரம்பிக்கத் தொடங்கிவிட்டன. 1970 இலேயே ஆரம்பிக்கத் தொடங்கி விட்டது. அதேநேரம் தமிழர்கள் அதை எப்படி கையாள்வது என்று தெரியாமல் தமிழ் உணர்வு என்று லண்டனில் ஒரு வியாபாரம் போன்று தொடக்கிவிட்டார்கள். தமிழைப் பற்றி பேசுவது தங்களை முன்னெடுப்பதற்கும், தங்களைப் பெரியவர்களாக காட்டிகொள்ளும் தன்முனைப்பு நிறைந்த விடயமாகியது.

இது பற்றியதுதான் என்னுடைய முதலாவது நாவல், ‘உலகமெல்லாம் வியாபாரிகள்’, லண்டன் தமிழ் முரசில் தொடராக வெளியாகி தமிழ் தேசியவாதிகளுக்கும் எனக்கும் பெரிய பிரச்சினைகளை உருவாக்கியது. நீங்கள் வாழும் கால கட்டத்தை மறைத்துவிட்டு இலக்கியம் படைக்க முடியாது. இலக்கியம் என்பது ஒரு மனிதன் வாழும் சமுதாயத்தின் சரித்திரத்தோடு சம்பந்தப்பட்டது. என் கதைகளில் எல்லாம் அது வந்தது.

1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாண நூலகம் எரிந்த உடனே எங்களால் தாங்க முடியவில்லை. நாங்கள் போராட்டம் செய்தோம். நாங்கள் 1971 ஆம் ஆண்டிலிருந்தே இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் செய்த ஒரு முற்போக்கு கூட்டம்.

 1971 ஆம் ஆண்டு ஜே.வி. பி கிளர்ச்சியின்போது அங்கே பொல்லாத கொடுமைகள் செய்யப்பட்டன, ஒரு மூன்று மாதத்தில் 10,000 மேற்பட்ட சிங்கள மாணவர்களும், சாதாரண மக்களும் இலங்கை அரசாலேயே கொலை செய்யப்பட்டார்கள். அதற்கு எல்லாம் நாங்கள் தெருவில் இறங்கி போராட்டம் செய்தோம். செல்வி மன்னம்பேரி என்ற பெண், சிங்கள இராணுவத்தால் கொடுமையாகப் பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட  காலங்களில் நாங்கள் மௌனமாக இருக்கவில்லை. இலங்கை அரசாங்கத்தை கண்டித்து போராட்டங்கள் செய்தோம். வெளியுலகுக்கு அவற்றை வெளிப்படுத்தினோம்.

என்னுடைய ஈடுபாடு, பெண்கள் அமைப்பு என்ற செயலாக்கத்திற்கு வந்தது, 1982 ஆண்டு நவம்பர் மாதம் என்று நினைக்கின்றேன். காந்தி இராஜசுந்தரம், Dr ஜெயப்பூர் ராஜா, நிர்மலா, நித்தியானந்தன் இப்படி நிறையப் பேர் இலங்கை அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் எல்லாம் மனித உரிமைகள் பற்றி அப்போது வெளிப்படையாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

அவர்களுக்கு ஆதரவான குரலை முதன் முதலில் இங்கிலாந்தில் Human right organisation-Tamil womens league வாயிலாக நான் ஆரம்பித்தேன். தொழிலாளர் கட்சியின் உறுப்பினராக இருந்தபடியால் அங்கிருந்தே ஆரம்பித்தேன். கூட்டங்களில் இலங்கையில் நடக்கும் கொடுமைகளை, கைதுகளை குறிப்பிட்டு பேசினேன்.

அந்தக் காலகட்டத்தில் பிரதமர் மார்க்கிரெட் தர்ச்சரால் பிரமாண்டமான மாற்றங்கள் இங்கிலாந்துக்கு வந்து கொண்டிருந்தன. அப்போது பெண்கள் நாங்கள் அரசியலில் துடியாட்டமாக இருந்தோம். நிறைய பெண்கள் தொழிலாளர் கட்சியினால் ஈர்க்கப்பட்டு ஆர்வமாக பங்குபெற வந்தார்கள். பெண்களின் பங்களிப்பு உச்சத்தில் இருந்தது. என்னுடைய இலங்கை பற்றிய விடயத்தை முன்னெடுக்க மிகவும் சந்தோஷமாக அவர்கள் முடிவு செய்தார்கள். நான் இலங்கையில் நடக்கும் தமிழர்களுக்கான அநீதியைப் பற்றி பேசும்போது, அங்கு பெண்கள் உணர்வு பூர்வமாக அழுதார்கள். யாழ் நூலகம் எரிந்தது என்று சொன்னவுடன் தாங்க முடியாமல் தவித்தார்கள். 1982 ஆம் ஆண்டு நிரந்தரமாக இந்த மனித உரிமைவாதிகள் கைது செய்யப்பட்டவுடன் பிரமாண்டமான போராட்டங்களை நாங்கள் தொழிலாளர் கட்சி மூலம் முன்னெடுத்தோம்.

நாலைந்து வெள்ளையின பெண்களும், நானும் தான் முதல் முதலில் இலங்கை தூதரகம் முன்னுக்கு நின்று ஆர்பாட்டம் செய்தோம். அதற்குப் பிறகுதான் தமிழ் ஆட்களுக்கும் தெரிய வந்து, பிறகு தமிழ் பெண்களும் சேர்ந்தார்கள். அந்த நேரம் British special branch வந்து என்னை நேர்முகம் செய்தார்கள். ஏனென்றால் இலங்கையில் கைது செய்யப்பட்டவர்கள், பயங்கரவாதிகளுக்கு ஆதரவானவர்கள். அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதம் எடுத்த பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்றபடியால்தான்  கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். அவர்களுக்காக லண்டனில் குரல் கொடுப்பவர்கள் பற்றிய விசாரனை என்ற பெயரிலேதான் அவர்கள் என்னை விசாரித்தார்கள். அவை பத்திரிகைகளில் பின்னர் வந்தன.

இதனைக் கேள்விப்பட்டு நிறையப் பெண்கள் என்னுடன் இணைந்து போராட வந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோருக்கு தமிழே தெரியாது. ஆங்கிலம் படித்த குடும்பத்தைச் சேர்ந்த தமிழர்கள். நாங்கள் எல்லோரும் சேர்ந்து பிரமாண்டமான போராட்டங்களை நடந்தினோம். பல்வேறு பல்கலைக்கழகங்களிலிருந்து மாணவர்கள் வந்து இலங்கைப் பிரச்சினை பற்றி எங்களை நேர்காணல் செய்தார்கள். இலங்கைப் பிரச்சினை உலக மயமாக்கப்பட்டது. தமிழ் மக்களுக்காக மட்டுமல்ல, இனவாதத்துக்கு எதிராக, பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு எதிராக  என்றெல்லாம் மனித உரிமை தொடர்பான விடயங்களாக அவை அமைந்தன. இதனால் பரந்த விதத்தில் black, white, Latino என்று பல அமைப்புக்கள் எங்களுக்கு ஆதரவாக வந்தார்கள். இலங்கைத் தமிழருக்கு இங்கிலாந்தில் மட்டுமல்ல, மேற்கு ஐரோப்பாவில் மட்டுமல்ல, உலகலாவிய ரீதியில் ஆதரவு வந்தது. அங்கோலாவிலிருந்து ஆதரவு தந்து கடிதம் வந்தது. மங்கோலியாவிலிருந்து ஆதரவு தெரிவித்துக் கடிதம் வந்தது. இலங்கைத் தமிழரின் நிலையை எடுத்துக் காட்டியது என் எழுத்தால் வந்த ஆவேசம். எழுத்து என்பது அறம் சார்ந்திருக்க வேண்டும் என்பதில் நான் அசையாத நம்பிக்கை கொண்டிருக்கின்றேன். பெயருக்கும், புகழுக்கும், ஒரு பத்திரிகையின் எதிர்பார்ப்பு ஆகியவற்றை எதிர்பார்த்து நான் எழுதுவதில்லை. இன்று யோசித்துப் பார்க்க அது திருப்தியாக இருக்கிறது.

உங்களது மனித உரிமை செயற்பாடுகள் எந்த வகையில் அகதிகளுக்கு உதவின? அதன் தோற்றம் எப்படி நிகழ்ந்தது?

London Tamil women’s league என்ற பெண்கள் அமைப்பின் மூலம் தான் அந்தக்காலத்தில் இலங்கையிலிருந்து ஓடி வந்த மக்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தேன். தொழிலாளர் கட்சியூடாக நானும் என்னுடைய சிநேகிதியும் பாராளுமன்ற உறுப்பினருமான கிரிஸ் ஸ்மித்தும், நண்பர் ஜெரமிக் கோபினும் சேர்ந்து பெண்கள் அமைப்பின் ஊடாக வந்த கோரிக்கைகளுக்கு உதவி செய்தோம்.

அப்போது எனக்கு ஒரு அழைப்பு வந்தது. ஈபிஆர்எல்எப் தம்பா, புலிகள் அமைப்பைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, ரெலோ ஜேசன் அப்படியானவர்கள் வந்து ‘அக்கா தயவு செய்து நாங்கள் எல்லோரும் சேர்ந்து அமைப்பு ஒன்று உருவாக்க வேண்டும். ஏனென்றால் தொழிலாளர் கட்சியே சொல்கிறது, எங்களுக்கு சமுதாயம் சார்ந்த அமைப்பு தேவை என்று’ என்றார்கள். அப்போது தான் நாங்கள் எல்லோரும் சேர்ந்து Tamil Refugee organization  ஐ தொடங்கினோம்.

அது ஆரம்பித்ததுமே இலங்கையில் போராடும் ஐந்து குழுக்களுக்கும், அதாவது விடுதலைப்புலிகள், ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப், ஈரோஸ் அவர்களுக்கெல்லாம் சேர்ந்த ஒரு பொது சமுதாய அமைப்புத் தலைவியாக ஆகவேண்டி வந்தது. அவர்களுடைய அரசியல் கோட்பாடுகள் எனக்கு அப்போது தெரியாது. ஆனால் ஈபிஆர்எல்எப், ஈரோஸ் இரண்டும் மாணவர் அமைப்பாக இருந்தபோது முற்போக்குவாத அமைப்பாக எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன.  அவர்களுடைய ஓரிரு கூட்டங்களிலும் நான் பேசியிருக்கின்றேன். ‘ஈரோஸ் இராஜநாயகம்’ வீட்டிலே இலக்கிய சந்திப்புக்களை வைத்திருந்தேன்.

மற்றவர்களுடைய அரசியல் கண்ணோட்டம் எனக்குத் தெரியாது. ஆனால் இவர்களுக்கெல்லாம் தலைவியாக வரவேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு வந்தது. நிர்ப்பந்தம் என்று சொல்வது ஏன் என்றால் என்னுடைய ஆரம்ப மனித உரிமை வேலை Labout Party Member ஆகத் தான் ஆரம்பித்தது. ஒரு தமிழ்ப் பெண் தொழிற்கட்சியில் இருக்கின்றபடியால் தொழிற்கட்சி மூலமாகத்தான் இந்தப் போராட்டங்கள் ஆரம்பித்தன. அதைச் சமூக ரீதியாகக் கொண்டு வந்தோம். சட்ட ரீதியாக ஒரு ஸ்தாபனமாக அமைப்பதற்கு தமிழ் அமைப்புக்கள் சேர்ந்து ஒரு குழுவாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. அதனாலேயே அவர்களுடன் சேர்ந்து அவர்களுக்கு தலைவியானேன். ஐந்து அமைப்புக்களுக்கும் தலைவி. ஆரம்பித்து, கொஞ்ச நாட்களில் பார்த்தால் அவர்களுக்குள் பிரச்சினை தொடங்கியிருந்தது. இலங்கையில் உங்களுக்குள் நடக்கின்ற பிரச்சினையை இங்கே கொண்டு வந்து தமிழ் அகதிகளை பாதிப்புக்குள்ளாக்காதீர்கள் என்று அவர்களுடன் வாதிட்டு வந்தேன்.

‘இது இலங்கை, நான் இந்தியன் ஆர்மியின் அனுமதியுடன் தான் போகனுமா என்னுடைய சொந்தக்காரர் விட்டுக்கு’ என்று கேட்டேன். உங்களுக்கு ஒன்றும் புரியாது. எல்லாமே இந்தியன் ஆர்மியின் கட்டுப்பாட்டில் தான் நடக்கின்றது என்றார்கள். ‘இலங்கையிலிருந்து இலங்கையின் இன்னொரு பகுதிக்கு போவதற்கு ஏன் இந்தியன் ஆர்மியின் அனுமதி’ என்று கேட்டேன்.

பிரித்தானியப் பாராளுமன்றத்தில் இலங்கை அகதிகளுக்கு உதவும் வகையில் சட்டத்தை மாற்றியதில் அல்லது தளர்த்தியதில் உங்களுக்கும், உங்களது அமைப்புக்கும் பெரும்பங்கு இருக்கின்றது. அது எவ்வாறு நிகழ்ந்தது?

அது 1985 ஆம் ஆண்டு இலங்கை அகதிகளுக்கு வழங்கப்படும் விசாக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தார்கள். இது அகதிகளைப் பாதித்தது. குடும்பம் குடும்பமாக தமிழ் மக்கள் அவதிப்பட்டார்கள். இந்த விசா கட்டுப்பாடுகள் பற்றிய விவாதத்தை எழுப்ப தொழிலாளர் கட்சி விரும்பியது. அதற்குள் நானும் இயங்கினேன்.

தொழிற்கட்சி, கடுமையான கட்டுப்பாடுகளை அரசாங்கம் விரும்பிய வகையில் அமுல்படுத்த முடியாத அளவுக்குத் தடுத்து அதைத் தளர்த்தியதால், சில மாற்றங்கள் வந்தன. அது அகதிகளுக்கு சார்பாக இருந்தது. ஏன் என்றால் ஒரு அகதியைக் கொண்டு வருவதென்றால், கொண்டு வரும் விமான நிறுவனத்துக்கு 1000 பவுண்ட் தண்டம் அறவிடுவதாக நிலைமை இருந்தது.

பாராளுமன்றத்தில் விவாதம் நிகழும்போது பார்வையாளர் அரங்கில் நானும் தமிழ்ப் பெண்கள் பலரும் கூடியிருந்தோம். ஆளும் கட்சியைக் சேர்ந்த அமைச்சர்கள் எங்களைக் கோபமாகப் பார்த்தார்கள். எங்களது போராட்டம் அந்தக் காலத்தில் மிக ஆக்ரோஷம் நிறைந்ததாக இருந்தது. இதனை சாதித்தது தமிழ் பெண்கள் அமைப்பு என்றே சொல்வேன்.

சமூக செயற்பாடுகள் தவிர்ந்து, லண்டனில் இயங்கிய ஐந்து இயக்கங்களில் ஏதாவது ஒன்றில்கூட சேர்ந்து இயங்கவில்லையா?

ஒரு நாளும் இல்லை. ஒரு நாளும் இலங்கை அரசியல் கட்சிகள், இயக்கங்கள் சார்ந்து நான் வேலை செய்யவில்லை. ஆனால், இலங்கை மக்களுக்காக அவர்களுடன் நான் வேலை செய்தேன். இயக்கம் சார்ந்து நான் செயற்படவில்லை. அகதிகளுக்கான அமைப்பு உண்டாக்க வேண்டும் என்று முன்னுக்கு நின்று உதவி செய்தது ஈபிஆர்எல்எப், ஈரோஸ், விடுதலைப்புலிகள் போன்றவர்களே. புளொட் ஆட்கள் பின்னரே வந்தனர். ரெலோவும் அதன் பிறகே வந்தது. ஆனால் முன்னுக்கு நின்று இதை ஒரு மக்கள் தொண்டு நிறுவனமாக ஆக்க வேண்டும் என்றது தம்பா. பின்னர் சத்தியமூர்த்தி. அதுபோல் எல்லா அமைப்புக்களும் வந்தார்கள். ஏன் என்றால் அதில் நிர்ப்பந்தம் இருந்தது. அப்படி இருப்பதால் அங்கே அந்தக் காலத்தில் எல்லோரும் சேர்ந்து போராட வேண்டும் என்ற உணர்வு இருந்தது. அரசியல் ரீதியாக மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் இலங்கை பேரினவாதத்துக்கு எதிராக தமிழர்க்ள ஒன்றுபட்டு போராட வேண்டும் என்று இருந்தது என்ற விம்பம் தான் எனக்கு தரப்பட்டது.

அன்ரன் பாலசிங்கத்துக்கும் உங்களுக்கும் இடையில் தனிப்பட நட்பு இருந்ததே?

அன்ரன் பாலசிங்கம் லண்டன் முரசில் நான் எழுதிய காலத்தில்(1977 அல்லது78) அவராகவே என்னைத் தொலைபேசியில் கூப்பிட்டார். அப்போது மகளிர் அமைப்புக்கு தலைவியாக கூட ஆகவில்லை. எழுத்தாளராக மட்டுமே இருந்தேன்.  இந்த தமிழ்த் தேசிய பிற்போக்கு வாதிகள் என்னைக் கண்டபடி திட்டிக்கொண்டிருந்தார்கள் தானே. நான் சாதியை எதிர்க்கின்றேன், சீதனம் வாங்குவதைக் கேவலமாக எழுதுகின்றேன், நீங்கள் ஆண் உறுப்பை விற்கப்போகின்றீர்களா என்று எல்லாம் என்னுடைய கதைகளில் எழுதி விட்டேன். அதெல்லாம் அவர்களுக்கு கோபத்தைக் கிளப்பியிருக்க வேண்டும். என்னைக் கண்டபடி திட்டிக்கொண்டு திரிந்தார்கள். பல இடங்களில் ஆபாசமாக எழுதி வைத்தார்கள்.

நான் தமிழ் மக்களைப் பற்றியும் நிறைய எழுதியிருக்கின்றேன். தமிழ் மக்கள் மீது பேரினவாதத்தால் நடக்கின்ற கொடுமைகளைப் பற்றி எழுதியிருக்கின்றேன். 1974 ஆம் ஆண்டு தரப்படுத்தல் (Standardization) வந்த பிறகு அதைப்பற்றி எல்லாம் லண்டன் முரசில் எழுதியிருக்கிறேன். அப்படி எழுதிய தேம்ஸ்நதிக்கரை என்ற கதையில் முற்போக்கு வாதிகள் எல்லாம் வருகின்றார்கள். படிப்பிற்காக நாலரை வருடங்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்ததை, One of the brilliant aspects எனச் சொல்வேன். பின்னர் திருமணத்துக்குப் பிறகும் பெரும்பாலான காலம் யாழ்ப்பாணத்திலேயே இருந்தபடியால் அங்கு இருந்த அற்புதமான முற்போக்கு சிந்தனை இலங்கையில் எங்கேயும் இருக்கவில்லை என்றே சொல்வேன். கொழும்பில் இருந்தாலும் அங்கிருந்த முற்போக்கு வாதம் British Educated ஆட்களால்தான் வந்தது. N. M. Perera இப்படியான ஆட்கள் British Educated. ஆனால் யாழ்ப்பாணத்தில் இருந்த முற்போக்கு வாதம் அடித்தளத்திலிருந்து வந்த முற்போக்கு வாதம். டானியலில் இருந்து பெனடிக்ற் பாலா வரை அந்தக் காலத்தில் முற்போக்காக எழுதியவர்கள் அதிகம்பேர். நான் மாணவியாக இருந்த காலத்தில் மல்லிகையில் எழுதியதும் அவ்வாறானது. யாழ்ப்பாணத்திலிருந்து அடித்தளத்திலிருந்து அதர்மத்துக்கு எதிராக வந்த குரல்.

இப்படியான விடயங்கள் என்னுடைய கதைகளில் இருந்தன. அதனைப் படித்த  அன்ரன் பாலசிங்கத்துக்கு நான் யார் என்று பார்க்க வேண்டும் போல் இருந்திருக்க வேண்டும். “தங்கச்சி வாங்கோ” என்று தொலைபேசியில் கூப்பிட்டார். அப்போது அவர் எந்த ஊர், என்ன பெயர் அதெல்லாம் தெரியாது. அவருடைய மனைவி மருத்துவ தாதி என்று மட்டும் யாரோ சொன்னார்கள். அது ஒருவித ஈடுபாட்டைத் தந்தது, because she is a nurse, and I am a nurse. அங்கே போனால் அடேல் இருந்தார். நிறைய மாணவர்கள் இருக்கைகள் இல்லாமல் தரையில் இருந்தார்கள். அந்தக்காலப் பகுதி 1978 என்று நினைக்கிறேன்.

அன்ரன் பாலசிங்கம் எப்போதுமே பிரிவினை (separation) பற்றியே கதைத்தார்.  இலங்கை பிரிவதைத் தடுக்க முடியாது என்றார். நான் கேட்டேன் என்னென்று பிரிய முடியும்? நாங்கள் சிறு நாடு அல்லவா… என்று. அதற்கு அவர் எனக்கு உதாரணம் சொன்னார். இந்தியாவிலிருந்து பிரிந்த பாகிஸ்தானிலிருந்து பங்களாதேஸ் பிரிந்தது என்று சொன்னார்.

யாருக்காக இந்த separation வருகின்றது என்றால், இன்றைய இளம் தலைமுறைக்கு விரிவாகக் கொஞ்சம் சொல்ல வேண்டும். British ஆட்சியில் 60% க்கு மேல் அரசாங்க உத்தியோகத்தில் இருந்தவர்கள் யாழ்ப்பாணத் தமிழர்கள். சுதந்திரம் வந்ததற்கு பிறகு அதே மாதிரி 70% க்கு மேலான சிங்களவர்களும் தமக்கு அரசாங்க உத்தியோகம் வேண்டும் என்று சொன்னதும், இலங்கை முழுவதும் ஒட்டுமொத்தமாக சம சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும் என்று சொன்னதும் எனக்கு நியாயமாகத் தான் இருந்தது.

இதைத்தான் நான் அவருடன் கதைத்தேன். அவர் ஆங்கிலத்தில் தான் என்னுடன் கதைப்பார். நானும் ஆங்கிலத்தில் தான் கதைப்பேன். How can you expect me to believe? that they are going to promote Tamil course என்று கேட்டேன். ஏன் என்றார். நான் சொன்னேன்; 1949 ஆம் ஆண்டு மலையகத் தமிழர்களை, தமிழர்கள் என்றே பலர் நினைக்கவில்லை. நான் யாழ்ப்பாணத்தில்தான் படித்தேன். அங்கு ஒடுக்கப்பட்ட மக்களை அவர்கள் தமிழராகவே நினைக்க வில்லை. என்னுடைய நண்பர்கள் வீட்டுக்கு எல்லாம் போயிருக்கின்றேன். ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு electricity இல்லை. ஏன் என்று கேட்டால் மற்றப் பக்கத்திலிருப்பவர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள். அவர்கள் தமிழர்களாக தெரிவதில்லையா? அந்தப் பெண்கள் இரவில் தனியாக tution சென்று வருவதென்றால் இருட்டில்தான் சென்று வரவேண்டும். அந்தப் பெண்கள் தமிழ்ப் பெண்களாக தெரியவில்லையா?

நான் 1966, 1967 ஆம் ஆண்டு மாணவியாக யாழ்ப்பாணத்தில் இருந்தேன். அந்தக் காலத்தில் சங்கானையில் சாதிக்கொடுமை நடந்தது. ஒடுக்கப்பட்ட மக்களின் முதுகைப் பிளந்து அனுப்பியிருந்தார்கள் ஆதிக்கக் சாதியினர். அவர்களுடைய வீடுகளை எரித்திருந்தார்கள்! நான் அவர்களுக்கு மருந்துவம் பார்த்திருந்தேன். அவர்கள் தமிழர்கள் இல்லையா?

அன்ரன் பாலசிங்கம் என்னை தங்கச்சி என்றுதான் சொல்வார். He encourages me to talk. He encourages me to argue. He encourages me to tell, what I feel. அவர் இந்தியாவுக்கு போவதற்கு நாங்கள்தான் செலவு செய்தோம். எல்லோருமாக காசு சேர்த்துக் கொடுத்தோம். அந்த அளவுக்கு,  அரசியலுக்கு அப்பால் I feel Anna. அண்ணா என்று தான் சொல்வேன். பாலா அண்ணா என்றுதான் அழைப்பேன்.

எந்தவொரு தமிழ் இயக்கங்களையும் சாராது மனித உரிமைகளுக்காக நீங்கள் போராடிக்கொண்டிருந்த அதே காலகட்டத்தில், ‘ராஜினி திரணகம’ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இங்கிலாந்தில் பிரசாரங்களைச் செய்து கொண்டிருந்தார். அதே காலத்தில் நீங்கள் அவருடன் தனிப்பட்ட நட்பில் இருந்தீர்கள். அவருடைய அப்போதைய புலி ஆதரவுக் கருத்தியலின் மீது விமர்சனங்களை வைத்திருந்தீர்களா… அது தொடர்பில் உங்கள் இருவருக்கும் இடையில் கருத்து மோதல்கள் உருவாகவில்லையா…? 

84இல் என்று நினைக்கிறேன். புலிகள் அநுராதபுரத்தில் சாதாரண சிங்கள மக்களைக் கொலை செய்தார்கள் அல்லவா? அதேபோல எல்லைப் பகுதிகளில் எல்லாம் சிங்கள மக்கள் கொலை செய்யப்பட்டார்கள். பிக்குகளைக் கொலை செய்த சம்பவங்களும் நடந்தன. இவற்றைப் பற்றி ராஜினியிடம் கேட்டால் அவர் சொல்வார். ‘சண்டை என்றால் மக்கள் இறப்பார்கள்’ என்று. 

நான் சொன்னேன்; ‘தேவையில்லாமல் இறப்பது போர் அல்ல. அது Atrocity. போரில் முன்னுக்கு நின்று சண்டை பிடித்து இறப்பது வேறு. இது சிங்களவர் செய்ததைத்தான் நாங்களும் செய்வதைப் போன்றது.  மட்டக்களப்பில் ஆமிக்காரர்கள் செய்த கொடுமைகளை எல்லாம் மக்கள் எனக்கு சொல்வார்கள். காலத்துக்குக் காலம் அங்கு என்ன கொடுமைகள் செய்யப்படுகின்றன எனறு இப்போதும் மக்கள் எனக்குச் சொல்லுகின்றார்கள். ஊர்காவல் படையில் இணைக்கப்பட்டிருந்த சில முஸ்லிம்கள் அடிப்படைவாதிகள், யார் யார் புலிகள்? எந்த ஏரியாவில் புலிகள் இருக்கிறார்கள் என்று உண்மையாகவும், பொய்யாகவும் இராணுவத்திடம் தகவல் சொல்ல, பிறகு நடந்த கொடுமைகள் விபரிக்க முடியாதவை! எவ்வளவு பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப் பட்டார்கள் தெரியுமா? எவ்வளவு ஆண்கள் கொலை செய்யப்பட்டார்கள் தெரியுமா? நினைத்தாலே நடுங்குகிறது. என்னுடைய சின்னம்மாவின் மூன்று பையன்கள் இறந்தனர். என்னுடைய அக்காவினுடைய மகன் இறந்தார். என்னுடைய அக்கா 51 வயதில் அந்தக் கொடுமை தாங்க இயலாமல் செத்துப் போனார். என்னுடைய தம்பி விமல் கைது செய்யப்பட்ட போது, என்னுடைய அம்மா அந்த அதிர்ச்சியில் இறந்தார். என்னுடைய அம்மா இறக்கும் போது 61 வயது. இப்படி ஆயிரக்கணக்கான மக்கள், ஆயிரக்கணக்கான பெண்கள் மட்டக்களப்பு முழுவதும் துன்பப்பட்டார்கள். இதையேதான் அப்பாவிச் சிங்கள மக்களுக்கும் நாம் திருப்பிக் கொடுக்கப்போகிறோமா…?  

அப்போது ராஜினி சொன்னார், ‘மாற்றங்கள் வருவது ஒரு சுதந்திரப் போராட்டத்தில் நியதி’ என்று.

நான் அடிக்கடி புலிகள் எல்லோரிடமும் கேட்கின்ற கேள்வி “நீங்கள் எல்லாம் தப்பி வருகின்றீர்கள், ஏன் நீங்கள் நின்று சண்டை பிடிக்க முடியாது? ஏன் ஏழை மக்கள் மட்டும் சண்டை பிடிக்க வேண்டும்?” Continue war என்பது You all must fight together ஆனால், நீங்கள் உங்களுடைய பிள்ளைகளைக் கொண்டு வந்துவிட்டு காசு மட்டும் கொடுக்கின்றீர்கள். நான் யாழ்ப்பாணத்திலிருக்கும் என்னுடைய சொந்தக் காரர்களைக் கூட கேட்டேன். அவர்கள் எல்லோரும் போராட்டத்திற்கு நிறையக் காசு கொடுக்கின்றவர்கள். “உங்களுடைய பிள்ளைகள் Cambridge க்கு போகவேண்டும், இம்பிரியலுக்கு போகவேண்டும். Engineering college க்கு போகவேண்டும். ஏன் அங்கே இருக்கும் இளம் பிள்ளைகளைப் பிடித்துக் கொண்டு போகின்றீர்கள்? பாடசாலையிலிருந்து பிடித்துக் கொண்டு போகின்றீர்கள் என்று விசனப்படுவேன். போர் என்றால் அப்படித்தான் என்றார்கள்.

போர் என்றால் அப்படித்தான் என்றால், நீங்கள் போய் சண்டை பிடியுங்கள். That is not happening in other countries. If they want to support their country, then go to their country and fight. நீங்கள் இங்கே இருந்து கொண்டு பிரச்சாரம். அங்கே இருப்பவர்கள் அழிகின்றார்கள். இது அதர்மம், இது சுயநலம். இந்தப் போர் ஒரு நாளும் வெற்றியடையாது. இந்த வார்த்தைகளை அடிக்கடி சொல்வேன்.

சிங்களவர்கள் முட்டாள்கள், நாங்கள் கெட்டிக்காரர்கள் என்பது ஓர் அரசியல் கோட்பாடு அல்ல. அது வெறும் Fantasy. இந்த மேற்குலக நாடுகளின் நிலைப்பாடு என்ன? They do not care who get killed. அவர்கள் தங்களுடைய நலனுக்காக யாரையும் கொலை செய்வார்கள். அது தான் நடக்கின்றது. இவற்றை நான் சொன்னால் ‘போர் என்றால் மக்கள் இறப்பார்கள்’ என்ற பதில் தான் ராஜினிடமிருந்து எத்தனையோ தரம் வந்தது. அவர் என்னுடன் City University கூட்டத்துக்கு வந்திருக்கின்றார். நான் மனித உரிமை பற்றி கதைத்தேன். அவர் தனி நாடு ஏன் தேவை? Legitimized struggle for oppressed   என்று பேசினார். 

ராஜினி திரணகமவுடன்

இந்திய இராணுவம் செய்த கொடுமைகளைப் பற்றியெல்லாம் பேசியிருக்கிறீர்கள், எழுதி இருக்கிறீர்கள். இந்திய இராணுவம் இலங்கையில் இருந்த போது அங்கு சென்றிருக்கிறீர்களா…? அவர்களுடன் நேரில் பேசி இருகிறீர்களா?

ஓம். அதனை நினைவு கூர்கிறேன். லண்டனிலிருந்து டெல்லிக்கு சென்று அங்கிருந்து புறப்பட்டு சாமம் 2 மணிக்கு சென்னையில் இறங்கிய போது விடுதலைப்புலிகள்தான் என்னை வரவேற்றார்கள். கஸ்ரோ தான் என்னை வரவேற்று “வாங்கோ அக்கா” என்று கூட்டிக்கொண்டு போனார். வீதியில், நான் நடுவில், முன்னுக்கு ஒரு ஓட்டோ, பின்னுக்கு ஒரு கார் என்று போகும் போது ஒரு பொலிஸ் கேட்டார் “என்னப்பா இந்த நடுச் சாமத்தில் ஊர்வலமாக போறீர்கள்?” என்று. “எங்களுடைய அக்கா லண்டனிலிருந்து வந்து இருக்கிறார். அவர் பெரிய எழுத்தாளர்.  அவர் ஆராய்ச்சிக்காக வந்திருக்கின்றார்” என்று காஸ்ரோ சொல்ல, “சரிப்பா போங்க” என்று பெரிய ஆரவாரம்.

அடுத்த நாள் பாலா அண்ணாவைப் பார்க்க அடையார் போனேன். அங்கே போனால் வெளியே இந்தியன் ஆர்மி நிற்கின்றார்கள். பொலிஸ்காரர்கள் நிற்கின்றார்கள். உள்ளுக்குள் விடுதலைப் புலிகள் துப்பாக்கிகளோடு நிற்கின்றார்கள். எனக்குத் தலை சுத்தத் தொடங்கி விட்டது. நான் லண்டனில் பார்த்த பாலா அண்ணா வேறு. லண்டனில் ஒரு கவுன்ஸில் வீட்டில் சாதாரணமாக இருந்தவர். சென்னையில் பார்த்தால் அவருக்கு இவ்வளவு பாதுகாப்பு. உள்ளுக்கு போவதற்கு நிறைய கேள்வி. அவர் ஒரு பெரிய கூட்டத்தோடு இருந்தார். இலங்கைக்கு போவதாகக் சொன்னேன். “கவனமாக இருங்க தங்கச்சி” என்று சொல்லி அனுப்பினார்.

அப்போதுதான் இந்தியன் ஆர்மி இலங்கைக்கு வந்திருந்தார்கள். இந்தியாவில் இருந்தபோது ஆய்வுகளுக்காக நிறைய இடங்களுக்கு போக வேண்டி இருந்தது. அப்போதுதான் அகதி முகாம்களுக்கு எல்லாம் போனேன். நிறைய அகதி முகாம்கள். கோவளத்திலிருந்து மதுரை வரை சுற்றினேன். அகதி முகாம்களில் நிலைமை மிகுந்த துயரை அளித்தது. இனி இல்லை என்ற ஏழ்மை. அகதி முகாம்கள் எல்லாம் பார்த்துவிட்டு வந்து பாலசிங்கம் அண்ணாவை கேட்டேன், ‘இவர்கள் எல்லோரையும் என்ன செய்வது? இலங்கையில் சமாதானம் வந்து விட்டதுதானே, இலங்கையில் resettlement செய்கின்ற வேலைகளை நீங்கள் செய்கின்றீர்களா’ என்று கேட்டேன். அவர் மறுமொழி பேசவில்லை.

‘இலங்கைக்கு போய்விட்டு வாருங்கள், இதைப்பற்றி கதைப்போம்’ என்று சொன்னார். கொழும்புக்கு போனால் அங்கே ஆர்மி ஒன்றும் இல்லை. ஊருக்குப் போனால் எங்கும் இராணுவம். காலையில் எழுந்து பார்த்தால் இந்தியன் ஆர்மி ரோந்து போய்க்கொண்டிருந்தார்கள். அது நான் எதிர்பாராத ஒரு விஷயம். ஏனென்றால் எனக்கு இராணுவ முகாம்கள் எங்கே இருக்கின்றன என்று தெரியாது. ஆர்மி அன்று ரோந்து போனபோதுதான் அவர்களுடைய பிரமாண்டம் எனக்கு தெரிய வந்தது.

இலங்கை ஆர்மி முகாமில் இருக்கின்றது என்று தெரியும். அவர்களை நான் கண்டதில்லை. இந்தியன் ஆமியோ ரோட்டால் ரோந்து போகிறார்கள். நான் யாழ்ப்பாணம் போக வேண்டியிருந்தது. என்னுடைய கடைசி மகனை மாமி பார்க்கவில்லை. மாமிக்கும் பிள்ளையைக் காட்டுகின்றேன் என்று சொல்லி விட்டுத் தான் வந்தேன். இந்தியன் ஆர்மியின் அனுமதி இல்லாமல் நீங்கள் போக முடியாது என்று உறவினர்கள் சொன்னார்கள். ‘இது இலங்கை, நான் இந்தியன் ஆர்மியின் அனுமதியுடன் தான் போகனுமா என்னுடைய சொந்தக்காரர் விட்டுக்கு’ என்று கேட்டேன். உங்களுக்கு ஒன்றும் புரியாது. எல்லாமே இந்தியன் ஆர்மியின் கட்டுப்பாட்டில் தான் நடக்கின்றது என்றார்கள். ‘இலங்கையிலிருந்து இலங்கையின் இன்னொரு பகுதிக்கு போவதற்கு ஏன் இந்தியன் ஆர்மியின் அனுமதி’ என்று கேட்டேன். ‘அப்படித்தான், இந்த இயக்கங்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டை பிடிக்கின்றார்கள். ஆளுக்கு ஆள் அடிபடுறாங்கள். அதில் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள். நீங்களும் அதுக்குள் அகப்படக்கூடாது’ என்றார்கள். எனக்கு இது எல்லாம் புதிய விடயங்கள். சமாதான காலம் என்றுதான் நான் போனேன். நான் இந்தியன் ஆமியை பார்க்க முகாமுக்குச் சென்றேன். வாயில் காவலரிடம், I want to see your commander in chief என்று சொன்னேன்.

Boss என்று ஏதோ சொன்னார். “I want to see your boss” என்று சொன்னேன். உள்ளுக்குள் விட்டார்.  உள்ளே போவதற்கே ஒரு மைல் நடக்க வேண்டும். அவ்வளவு தூரம். நடந்து போனால் பிரமாண்டமான ஒரு மண்டபத்தில் பட்டைகள் போட்ட சீருடையுடன் நிறைய பேர் இருக்கின்றார்கள். மட்டக்களப்பு commander in chief ஆக இருந்தவர் அருமையான ஒரு புன்னகையுடன் கேட்டார் ‘What can I do for you, medam?’ என்று.

I want to go to Jaffna to see my mother-in-law என்று சொன்னேன். அவர் சொன்னார் ‘I am so sorry, medam. Only the condition can take you. If you belong to an organization. What organization’ என்று கேட்டார். Any liberation groups? ‘I am not member of any liberation group. I am a British. I cannot belong to these liberation groups. I am not. I am a Sri Lankan origin. I want to see my mother-in-law. Is that crime?’ ‘No medam, you don’t understand the situation” என்று சொன்னார். பிறகு அவரைக் கேட்டேன் ‘You supposed to be peace keeping force. Why are you keeping so many stuffs? I am not understanding. I have not ever seen military force in my whole life. Why these many people? why these armories? why, why என்று நிறைய கேட்டேன். எங்களுடைய அரசாங்கம் சொன்னது அமைதியைக் காக்க என்று, அதனாலேயே நாங்கள் வந்து விட்டோம் என்றார்.

நன்றி சொல்லிவிட்டு வீட்டுக்குப் போனேன். ‘ஐயோ! இவ்வளவு துணிவா, உனக்கு நீ ஆர்மிகாரன்களின் camp க்குள் போய் வந்திருக்கின்றாய்’ என்று ஆச்சரியப்பட்டார்கள், நான் சொன்னேன் ‘ஆர்மிகாரன்களும் மனிதர்கள், என்னை பிடித்து சாப்பிடப்போகின்றார்களா?’ என்று. ஆர்மிக்காரர்கள் என்பதன் அர்த்தம் எனக்கு அதன் அப்ப விளங்கவில்லை. இப்பவும் விளங்கவில்லை. சண்டை தொடங்கியதன் பிறகுதான் புரிந்தது,  அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்று. யாழ்ப்பாணத்தில் என்ன கொடுமை செய்தார்கள் என்பதெல்லாம், Amnesty International report வரும் போது தான் தெரிந்தது. அன்று பார்த்த Army commanderக்கு பின்னால் இருந்தவர்கள்தான் இந்தக் கொடுமையெல்லாவற்றையும் செய்திருக்க முடியாமா என்ற கேள்வி எழுந்து கொண்டே இருந்தது. ஏன் என்றால் இலங்கை இராணும் செய்யாத atrocity எல்லாம் இந்தியன் ஆர்மி செய்தது.

‘கோவை ஞானி’ உங்கள் மீது தனிப்பிரியம் கொண்டிருந்தார். உங்களுக்கு அவர் ஓர் ஆசான் என்றும் சொல்லலாம். அவருடனான நினைவுகளை எவ்வாறு தொகுத்துக் கொள்கிறீர்கள்?

கோவை ஞானி ஐயா 1980களில் ‘சிறந்த நாவலாசிரியர்கள்’ என்ற ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் என்னுடைய பெயரும் வந்திருந்தது. அதை எனக்கு பத்மநாப ஐயர் அனுப்பியிருந்தார். நன்றி சொல்லி கோவை ஞானி ஐயாவுக்கு நான் கடிதம் போட்டேன். அதற்குப் பின்னரான காலத்தில் என் தனிப்பட்ட வாழ்க்கையிலும், இலங்கை அரசியலிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன, இவையெல்லாம் 1980-ஆம் ஆண்டின் நடுப்பகுதிகளில் நடக்கின்றது என்று நினைக்கின்றேன். அந்த கால கட்டத்தில் நான் மிகமிகத் தீவிரமாக, நேரமில்லாமல் இயங்கிக் கொண்டிருந்தேன். மனித உரிமை விஷயங்கள், தமிழருக்கான உரிமைப் போராட்டம், தமிழருக்காக பேரினவாத கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்கள் என்று பலவற்றில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன்.

இது ஒரு பக்கம், அடுத்த பக்கம் லண்டன் அரசியலில் தலைகீழாக பிரமாண்டமான மாற்றங்கள் நடந்து கொண்டிருந்தன. அதாவது 1980 ஆம் ஆண்டுகளில் Mrs Margaret Thatcher,  Nelson Mandela ஐ ஒரு பயங்கரவாதி என அறிவிக்கின்றார். ஆபிரிக்க  தலைவரை இங்கே கூப்பிடுகின்றார். நாங்கள் அதற்கு எதிராக போராடுகின்றோம். குறிப்பாக பெண்கள். இங்கிலாந்திலேயே பிரமாண்டமான எதிர் ஊர்வலமாக அது அமைந்தது.

இப்படியான அரசியல் வேலைகளினால் என்னுடைய தமிழ் வாசிப்பு குறைந்துவிட்டது. அப்போது தமிழ் அகதிகள் சார்ந்த வேலைகளுக்காக முழுநேரமும் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். பகுதிநேரமாக வாழ்க்கைச் செலவுக்காக வேலைபார்த்துக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் என்னால் ஒன்றும் தமிழில் எழுத முடியவில்லை. எதுவும் எழுதுகின்றீர்களா என்று ஐயாவின் கடிதம் அடிக்கடி வரும். நான் ஒரு பெரிய பட்டியல் போடுவேன். என்னென்ன செய்து கொண்டிருக்கின்றேன் என்று. Minors strike நடக்கின்றது, அரசியல் போராட்டங்கள் நடக்கின்றது, அமெரிக்கன் ஏவுகனை வந்திருக்கின்றது, பெண்ணிய போராட்டங்கள் நடக்கின்றது. ஐயாவுக்கு பெரிய சந்தோஷம், இதெல்லாம் கேட்கிறதுக்கு. மிகவும் சந்தோஷம், இதெல்லாம் நடக்கின்றது. இந்த அம்மா இதிலெல்லாம் ஈடுபடுகின்றார்கள் என்று எழுதுவார்.

1987 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு போயிருந்த நேரம் சென்னையிலிருந்து தொலைபேசியில் அழைத்தேன். ‘இந்தியாவில் நிற்கின்றேன் ஐயா. நான் வாஹினி ஸ்ரூடியோவில் நேர்காணல் செய்து கொண்டிருக்கின்றேன்..’ என்று சொன்னேன். அப்போது அவர் நீங்கள் ஏன் ஒரு எழுத்தாளரை நேர்காணல் செய்யக்கூடாது என்று கேட்டார்.  நான் அவருடன் கதைக்கும் போது சொல்லியிருக்கின்றேன். எனக்கு ராஜம் கிருஷ்ணனை பிடிக்கும் என்று. ராஜம் கிருஷ்ணனை நேர்காணல் செய்யக் கூடாதா, ஜெயகாந்தனை நேர்காணல் செய்யக் கூடாதா, இந்திரபார்த்தசாரதியை நேர்காணல் செய்யக்கூடாதா என்று ஒரு பட்டியலைத் தந்தார். ஐயா எனக்கு நேரம் இருக்குமா என்று தெரியவில்லை என்று சொன்னேன். எனக்கு  ஜெயகாந்தன், ராஜம் கிருஷ்ணன் இருவரையும்  ரொம்ப பிடிக்கும்.

ஐயாவிடம் போன பிறகு லண்டனில் என்ன செய்கிறீர்கள் என்று நேரடியாகக் கேட்டார். இந்தியப் பெண்களை விட வித்தியாசமான எழுத்தாளர் என்றும் சொன்னார். ஏன் என்று கேட்டேன். இந்தியப் பெண்களுக்கு தயக்கம் இருக்கின்றது எழுதுவதற்கு. அது உங்களிடம் இல்லை என்றார். நான் சொன்னேன் இலங்கையில் இருந்து கொண்டே தயக்கமில்லாமல் எழுதினேன். சாதிய கொடுமைகள் பற்றி எல்லாம் எழுதியிருக்கிறேன், லண்டனுக்கு வந்த பிறகு சுதந்திரமான பேச்சு இருக்கின்றதால் இன்னும் கூட எழுதுகின்றேன். ஆனால் எனக்கு தமிழில் எழுத இப்போதைக்கு நேரமில்லை என்று சொன்னேன். உங்களைப் போல் இருக்கின்ற பெண் எழுத்தாளர்கள் குறைவு, முடியுமானவரை எழுதுங்கள் என்று ஐயா சொன்னார். அது 1987 ஆம் ஆண்டு. அந்த ஆண்டில் நிறைய போராளிகளை லண்டனில் சந்தித்திருக்கின்றேன். ஓடி வந்த போராளிகள். ரெலோ உடைந்து பலர் அகதிகளாக வந்து கொண்டிருந்தார்கள்.

அப்போது ஐயா சொன்னது ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தது. நிகழ்காலத்தில் தைரியமாக எழுதக்கூடியவர்களில் நீங்கள் ஒருவர். நேற்று நடந்ததைக் கற்பனையாக எழுதி அதை Mythology  ஆக்கத் தேவையில்லை. இன்று நடப்பதை எழுதி சரித்திரமாக்குவது தான் ஒரு எழுத்தாளனுக்கு தேவையானது என்ற மாதிரியான கருத்தை அவர் சொல்லுவார்.

புலம்பெயர்ந்தவர்கள் நிறையப் பிரிவுகள் தொடங்கினார்கள். அப்போது எழுதுவதற்கு நிறைய விஷயங்கள் இருந்தன. ஆனால் படிப்பு, என்னுடைய தலையை அமத்திக்கொண்டிருந்து. சினிமா துறையில் வேலை தேடிக்கொண்டிருந்த அசதி ஒரு பக்கம் இருந்தது. ஆனாலும், தமிழ் மக்களின் உணர்வுகளைச் சார்ந்து தாங்கிக் கொண்டு வருகின்ற எழுத்துக்கள் நிறைய வரவேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. அவ்வளவுக்கு இலங்கையில் மாற்றங்கள். அது என்னுடைய எழுத்துக்களில் வரத் தொடங்கி விட்டது. ஐயாவுக்கும் அதைச் சொன்னேன். ஐயாவுக்கும் மகிழ்ச்சி. ஒவ்வொரு கதைகளையும் அனுப்பி வைப்பேன். சிலவேளைகளில். அவர் தேடிப் படிப்பார். அப்படித்தான் ஐயாவின் உறவு வந்தது. ஐயா இல்லை என்றால் 1985 ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழில் எழுதியிருக்க மாட்டேன்.

ஐயா என்னை எழுதச் சொல்லி தூண்டிக்கொண்டிருந்தார். அதன் நீட்சியாக நான் சொன்னேன், நான் ஒரு சிறுகதைப் போட்டி தொடங்கப் போகிறேன், உதவி செய்வீர்களா என்று கேட்டேன். என்ன உதவி என்று கேட்டார். நான் பெண்கள் எழுதுவதற்கு ஊக்குவிப்பதற்கு பொருளாதார உதவி செய்வேன். ஆனால் இந்தியா வந்து கதைகளை வாங்கி, அதைத் தெரிவு செய்து, தேர்ந்து எடுக்க எல்லாம் என்னால் செய்ய முடியாது. அதற்கு ஒரு கூட்டம் வேண்டும், ஒரு குழு வேண்டும் என்று சொன்னேன். அவர் அதெல்லாம் ஏற்பாடு செய்தார். நான் செய்த வேலை அதை ஆரம்பித்தது. பெரும்பாலான வருடங்கள், முதலாவது வருடம், இரண்டாவது வருடம் எல்லாம் விழாவுக்கு போயிருக்கின்றேன். ஆரம்ப காலத்தில் ஒவ்வொரு வருடங்களும் போயிருக்கின்றேன். போய் அந்தப் பெண்களுக்கு பரிசு கொடுப்பது, ஊக்குவிப்பது, கூட்டங்களில் பேசுவது  எல்லாம் செய்திருக்கின்றேன். அதனால் 1998 ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆம் ஆண்டு வரை  நான் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு ஐயாவுடன் கொள்வேன். என்ன செய்கின்றீர்கள் ஐயா? ஐயாவுக்கு உடல் நலமில்லை. கண் தெரியாது. அம்மாவும் இறந்து விட்டார்கள். தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தால் நீங்கள் என்ன எழுதுகின்றீர்கள் என்று தான் கேட்பார். எழுதுவதைப் பற்றித் தான் சொல்லுவார். சில விஷயங்கள் சிலரால் தான் எழுத முடியும் என்று சொல்லுவார். அப்போது அவர் தமிழ் இணையம் ஆரம்பித்திருந்தார்.

ஐயா எனக்கு ஓர் ஆசானாக இருந்ததற்கு காரணம் என்ன என்றால், அவர் ஒரு இடது சாரி. சாதி, மதத்துக்கு எதிரானவர். சமத்துவத்துக்குச் சார்பாக நின்று போராடுபவர். ஆனாலும் எனக்கு அவருக்கும் கருத்து வேறுபாடுகளும் வரத் தொடங்கின. ஏன் என்றால் அவர் விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர். விடுதலைப் புலிகள் என்பவர்களின் ஒரு பக்க கதையைத் தான் நீங்கள் கேட்கின்றீர்கள் என்று சொல்லிவிட்டு, அவர்கள் இயக்கங்கள் என்ற பெயரில் மற்ற இயக்கங்களை அழித்து ஒழித்தது மனித உரிமைக்கு அப்பாற் பட்டு செய்த விஷயங்களை அவருக்கு சொன்னேன். ஆனால், நாங்கள் அதைப்பற்றி நிறைய கதைக்கவில்லை. அவர் இறக்கும் வரைக்கும் தமிழ் தேசிய வாதத்தை நம்பியவர் என்று நினைக்கின்றேன். அதற்காக எதிர்க் கருத்துக்களை அவர் தீர்க்க நினைப்பவர் அல்ல.

ஒருமுறை ஒரு வாசகர் என்னிடம் கோவை ஞானி ஐயாவை ஜெயமோகன் தன் ஆசானாக கருதுவதாகச் சொன்னார். அப்படியா என்று வியந்தேன். அது உண்மையா என்று கேட்க விரும்பி ஐயா வீட்டுக்குப் போய் கதவைத் தட்டினேன். ஐயா தனியாகத் தான் இருந்தார். கேட்டேன். ஐயா சொன்னார், அபிப்பிராய பேதம் இருக்கலாம், ஆனால் அறிவாற்றலை மதிக்க வேண்டும் என்று. நான் சொன்னேன் அது என்னுடைய கோட்பாடு கூட என்று. எனக்கு என்னை விட வித்தியாசமாக எழுதுபவர்களிடம் திணிக்க நினைக்கின்ற மனம் இல்லை. Even I read the many voice. Everyone has the right to wright. அதை ஏற்றுக்கொள்ளுவதும், ஏற்றுக்கொள்ளாததும் வாசகர்களின் பொறுப்பு. அப்படி ஐயா பல விதமான மனிதர்களையும் ஈர்க்கக்கூடிய ஒரு பெருந்தன்மையான மனிதர். பெரும்பாலான மனிதர்களால் மதிக்கப்பட்ட ஒரு மனிதர்.

அசோகமித்திரன், சுஜாதா, வாஸந்தி ஆகியோர் உங்களுடைய எழுத்துச் செயற்பாட்டால் உங்களுடன் நட்பானவர்கள். அவர்களுடனான சிநேகிதம் உங்களில் என்ன வகையான செல்வாக்கைச் செலுத்தியது?

இவர்கள் அத்தனைபேரும் சென்னை இலக்கிய ஆளுமைகளில் ஒரு சிலர். சென்னையிலிருந்த  இலங்கை எழுத்தாளர் செ.கணேசலிங்கம் அவர்கள் எனது சில புத்தகங்களை வெளியிட்டார். எனது புத்தக வெளியீடுகளுக்கு வந்து எனது புத்தகங்களை விமர்சனம் செய்யச் சொல்லி மேற்கண்டவர்களுக்கு எழுதினேன. அவர்களும் ஒப்புக் கொண்டார்கள். எனது புத்தக விழாக்களுக்கு மேற்குறிப்பட்ட எழுத்தாளர்களை செ.கணேசலிங்கம் அவர்களிடம் சொல்லி அழைக்கச் சொன்னபோது அவர் அதைச் செய்தார். அதைத் தொடர்ந்து அவர்களுடனான எனது தொடர்பு எழுத்தாளர்களிடையே வரும் நட்பாக மாறியது.

வாஸந்தி அவர்கள் அக்கால கட்டத்தில் இந்தியா டுடே கெளரவ ஆசிரியராக இருந்தார். என்னிடம் படைப்பகள் கேட்டார். அவரின் பத்திரிகைக்கு ‘மிஸ்ட்டர் டெய்லர் அன்ட் மிஸிஸ் குமார்’ என்ற கதை ,‘இன்னும் ஒரு கிளி’, ‘மிஸ் ஜேன் நாதன்’, ‘அப்பாவின் சினேகிதி’ போன்ற சிறுகதைகளை எழுதினேன். அதைத் தொடர்ந்து இந்தியா டுடே பத்திரிகையில் ஒரு பக்க எழுத்து விருந்தினராக (கொலமிஸ்ட்) சிலவருடங்கள் எழுதினேன். வாஸந்தி இன்றும் எனது சினேகிதி.

2019ம் ஆண்டு லண்டனுக்கு வந்தபோது அவருக்குப் ஒரு கூட்டமும் ஒழுங்கு செய்தோம். இந்தியா போயிருக்கும் காலத்தில் அவருடன் செலவழித்த சில நாட்கள் மிகவும் இனிமையானவை. அவரின் வீட்டருகே மியுசிக் அக்கடமி இருந்தது. இனிமையான இசை மனதைக் கொள்ளை கொள்ளும். அவரின் மொட்டை மாடியில் உலகத்திலுள்ள பலவிதமான பூச்செடிகளும் பூத்துக் குலுங்கும். ஓரு நாள் இரவு நீண்ட நேரமாக இருவரும் அவரது மொட்டை மாடியில் பேசிக் கொண்டிருந்தோம். அன்று முழநிலவு. அந்த நேரம் முழு நிலவில் கடல் பொங்கிக் குதூகலிப்பதைப் பார்க்க ஆசையாக இருக்கிறது என்றேன். அப்போது அவருடைய கணவர், ‘என்ன இவ்வளவு நேரமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்’ என்ற தோரணையில் எங்களை எட்டிப் பார்த்தார். வாஸந்தி என்னுடைய விருப்பத்தை அவரிடம் சொன்னார். அவர் எங்களை மெரினா பீச்சக்கு அழைத்துச் சென்றார். கிட்டத்தட்ட நடுநிசியான அந்த நேரத்தில் கடற்கரையில் அமைதி. நிலவைக்கண்ட சந்தோசத்தில கடல் பொங்கிப் பூரித்துக் கொண்டிருந்தது. நாங்கள் இருவரும் உலகத்தில் எந்தத் துன்மமுற்ற குழந்தைகள் மாதிரி, எங்கள் ஆசைதீர அலைகளுடன் ஓடிப்பிடித்துச் சந்தோசப்பட்டோம். அவரின் கணவர் காரில் இருந்தபடி எங்கள் நள்ளிரவு கேளிக்கையைப் பார்த்துக் கொண்டிருந்தார். எனது அருமையான நினைவுகள் அவை. இன்னொரு தரம் திரும்பி வராதவை. எழுத்தும், நல்லெண்ணமும் சிலரைக் குழந்தைகளாக்குவதற்கு அந்தச் சந்தர்ப்பம் ஒரு சாட்சியாகும். என்றும் என் மனதில் மறையாது குடியிருக்கும் பல நல்ல நண்பர்களில் அவர்களும் அடங்குவர்.

திரு.அசோகமித்திரனைச் சிலதடவைகள் சந்தித்திருக்கிறேன். பழகுவதற்கு மிகவும் அன்பான, பண்பான, கௌரவமான மனிதர் அவர். ஓருநாள் அவரை அழைத்துக் கொண்டு தி.நகருக்குச் சென்றேன். அவரின் கதைகளில் ‘பிரளயம்’ என்ற வார்த்தை அவ்வப்போது வரும். அன்று தி.நகரின் சன நெருக்கம் அவர் சொல்லும் ‘பிரளயமாக’ என்னைத் திடுக்கிடப் பண்ணியது. எப்படித் தெருவைக்கடப்பது என்ற பயம் என்னைப் படாதபாடு படுத்தியது. சட்டென்று வந்த லாறிக்குப் பயந்து அவரின் கையைப் பிடித்துக்கொண்டேன். பகிரங்கமான இடத்தில் அன்னிய பெண் ஒருத்தி தனது கையை இறுக்கப் பிடித்த அதிர்ச்சி அவரின் முகத்தில் தெரிந்தது. மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன். லண்டனிலிருந்து வந்திருக்கிறீர்கள், அங்கு இப்படிக் கண்டபாட்டுக்கு வண்டிகள் ஓட்டமாட்டார்கள் என்று நினைக்கிறேன்’ என்று சமாளித்தார். அவருடைய எழுத்துக்கள் மட்டுமல்ல அவரின் பண்பான, அன்பான சினேகிதமும் என்னால் மறக்கமுடியாதவை.

திரு. சுஜாதா அவர்கள் எனக்கு மிகவும் வேண்டிய நண்பர்களில் ஒருத்தர். எனது புத்தகங்களை விரிவாக விமர்சனம் செய்த ஆளுமைகளில் ஒருத்தர். ஓரு எழுத்தாளன் என்ற உறவோடு ஆரம்பித்த அவரின் உறவு அவரின் மகன் லண்டனில் வேலை செய்து கொண்டிருந்த போது, அந்த மகனின் குடும்பம் எனது வீட்டுக்கு வந்து போகுமளவுக்கு வளர்ந்திருந்தது. எனது திரைப்படத் துறையில் நான் பெரிதாக ஒன்றும் செய்யமுடியவில்லை என்ற துக்கம் அவருக்கு இருந்தது. எனது தனிப்பட்ட வாழ்க்கைச் சுமையால் ஒரு படத்தயாரிப்பாளராக என்னால் வரமுடியவில்லை என்ற எனது துன்பத்தை அவருடன் பகிர்ந்து கொள்வேன். அவர், டைரக்டர் ராஜீவ் மேனனனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். ஆனாலும், எனது வாழ்க்கை நெருக்கடிகளால் என்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியவில்லை. இலங்கை வைத்தியர்களின் வேண்டுகோளின்படி ‘சுகாதாரக்கல்வி’ பற்றிய இருபுத்தகங்களை எழுதும்போது சுஜாதாவும் எழுத்தாளர், மாலனும் மிகவும் காத்திரமான பல அறிவுரைகளை வழங்கினார்கள். இவர்களுக்கு நான் எப்போதும் நன்றியாயிருப்பேன்.

பாலு மகேந்திரா எனது அன்பான ‘சகோதரராக’ நான் கணிப்பிடும் ஒரு ஆளுமை. என்னைப்போல் அவரும் கிழக்கிலங்கையைச் சேர்ந்தவர். என்னைப்போல் அவரும் ஒரு திரைப்படப் பட்டதாரி. அத்துடன் இலக்கியத்தில் மிகவும் பற்றுள்ளவர். லண்டன் திரைப்படக் கல்லூரியையை மையமாக வைத்து நான் எழுதிய அரசியல், இலங்கையில் இந்திய இராணுவத்தினரின் கொடுமை, லண்டனில் திரைப்படத்துறை, லண்டனில் ஆங்கில-இலங்கை சார்ந்த மாணவர்களுக்கிடையே வந்த காதல் வாழ்க்கை, போன்ற விடயங்களை வைத்து அவனும் சில மனிதர்களும் என்ற நாவலை நான் எழுத மிகவும் தூண்டுதலாகவிருந்தவர். அந்த புத்தக அறிமுகத்திற்குப் பல ஆளுமைகளான, அசோகமித்திரன், வாஸந்தி, கணேசலிங்கம் போன்றவர்கள் வந்து அந்த நாவல், திரைப்படத்துறையை ஆழமாகப் பார்க்கும் ஒரு ‘முத்திரை’ நாவலாகப் பார்க்கப்படவேண்டும் என்று பேசியபோது பெருமைப்பட்டவர். அவரும் திரைப்படத் துறை மாணவராகவிருந்தபடியால் அந்த நாவல் என்ன மாதிரியான யதார்த்தங்களைக் கொண்டுவருகின்றது என்ற தெரிந்துகொண்டவர்.

திருமதி. ராஜம் கிருஷ்ணன் எனது மதிப்புக்குரிய எழுத்தாளப் பெண்மணி. எனது சிறுவயதில் தமிழ் இலக்கிய உலகில், அவரின் பிராமண வர்க்கம் சாராத மக்களின் ‘யதார்த்த’ விடயங்களை எழுதியவர். அவரை 1987ல் சந்தித்தேன். அவரின் வீட்டில் ஆடும் ஊஞ்சலில் அமர்ந்துகொண்டு அவர் தந்த இனிப்புகளைச் சாப்பிட்டுக் கொண்டு இருவரின் இலக்கிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டது மறக்கமுடியாத இனிய ஞாபகங்களில் ஒன்று. 1994ம் ஆண்டு ‘எண்பதுகளில் தமிழ் நாவல்கள்’ என்ற இலக்கிய ஆய்வுப் புத்தகத்தை கோவை ஞானி அய்யா அவர்கள் எழுதும்போது அவர் குறிப்பிட்ட முற்போக்குப் பெண் எழுத்தாளர்களாக, ராஜம் கிருஷ்ணன், காவேரி, ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், சிவகாமி, போன்றவர்களை அடையாளம் காட்டி எழுதியிருந்தார். ஆனால் ராஜம் கிருஷ்ணன் பற்றிப் பெரிதாகப் பெண்ணியவாதிகள் பேசாதது துக்கமான விடயமே.

திரு.மாலன் அவர்கள், எனது நல்ல நண்பர்ளில் ஒருத்தர். 1981ம் ஆண்டு யாழ்ப்பாணம் நூலகம் எரிந்தபோது முதல்முதல் குரல் எழுப்பிய இந்திய எழுத்தாளர் இவர். அதுத்துடன் இவர் ஆசிரியராக இருந்த பத்திரிகைகளில் இலங்கை எழுத்தாளர்களுக்கு இடம் கொடுத்தார். சன் டிவியிலிருக்கும்போது என்னைப் போன்ற எழுத்தாளர்களைப் பேட்டி கண்டார். தினமணி ஆசிரியராகவிருந்தபோது ஒரு இதழை இலங்கை எழுத்தாளர் படைப்புக்களுக்கு அர்ப்பணித்தார். அத்துடன் புலம் பெயர் எழுத்தாளர்களின் படைப்புக்களை ‘கண்களுக்கப்பால் இதயத்திறகு அருகில்’ என்ற தொகுதியில் கொண்டுவந்தார். அண்மையில் புலம் பெயர் கவிஞர்களின் படைப்பை வெளியிட்டிருக்கிறார். அதற்கு நன்றிக்கடனாக, கொங்கு நாடு அறிவியல் விஞ்ஞானக் கல்லூரியைச்சேர்ந்த த. பிரியா அவர்கள் எனது எட்டு நாவல்களை ஆய்வு செய்து முனைவர் பட்டத்திற்கு எழுதிய ஆய்வு நூலை லண்டனில் வெளியிட அவரை அழைத்திருந்தேன்.

I’m not a post manஎன்பார் காஃப்காஉங்களது கதைகளில் இருக்கும் முற்போக்கு கூறுகள் சிலசமயம் பலவந்தமாகக் கருத்துகளை சொல்வது போல் அமைந்துவிடுகின்றன, என்பதை ஒரு விமர்சனமாக முன்வைத்தால் உங்களுடைய பதில் எவ்வாறு இருக்கும்?

இருக்கலாம், ஆனால் நான் எந்த விடயத்தையும் பலவந்தமாகப் ‘புகுத்துவது’ கிடையாது. அதாவது எனக்குத் தெரியாத விடயங்களை நான் எழுதுவது மிகவும் அருமை. என்னுடைய எழுத்தைப் படிப்பவர்கள், நான் ஏதோ ‘கருத்தை’ புகுத்துவதாகக் கருதினால் நான் என்ன சொல்ல முடியும்? நான் லண்டனுக்கு வந்த காலத்திலிருந்து எனது பெரும்பான்மையான காலம் தமிழர்கள் அல்லாதவர்களுடன், படித்த, வேலை செய்த, போராடிய, சினேகிதமாக இருந்தகால கட்டமாகும். அந்த மாதிரியான வாழ்க்கைச் சூழலில் தெரிந்து கொண்ட, புரிந்து கொண்ட, ஏற்றுக் கொண்ட, கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிற பல விடயங்களுள்ளன. அவற்றை எழுதுகிறேன். அவை எல்லாம் தமிழ் வாசகர்களுக்குத் ‘திணிப்பதாக’ இருக்கவேண்டும் என்று எழுதுப்படவில்லை. ஏனென்றால் நான், அரசியல், சமய, தேசியப் பிரசாரம் செய்பவரல்ல. எனது தாரக மந்திரம், அன்பும் அறமும் சாந்த ‘மனித உரிமை’, சமத்துவம் என்பதுதான். இவைக்கு அப்பாற்பட்ட உலகத்தில்தான் பெரும்பாலான மனிதர்கள் வாழ்கிறார்கள். ஒவ்வொருத்தரும் தாங்கள் வாழும் சூழ்நிலையிலிருந்துதான் மற்றவர்களையும் உலகையும் கணிப்பிடுகிறார்கள். பெரும்பாலான எழுத்தாளர்கள், முக்கியமான விடயங்களைப் பட்டும் படாமலும் எழுதுகிறார்கள். நான் சிலவேளைகளில் அந்தத் ‘தந்திரம்’ தெரியாமல் அப்பட்டமாக எழுதிவிடுகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக