வியாழன், 28 ஜனவரி, 2021

இரவுக்குள் இடத்தை காலி செய்யுங்கள்: போராடும் விவசாயிகளுக்கு எச்சரிக்கை! Delhi Police To End Farmers Protest

dailythanthi.com : புதுடெல்லி, வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில், அரியானா மற்றும் பஞ்சாப் விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து தோல்வியை சந்தித்த சூழலில், குடியரசு தினத்தன்று சிங்கு மற்றும் திக்ரி எல்லைகளில் முகாமிட்டிருந்த விவசாயிகள், போலீஸ் தடுப்புகளை உடைத்து டெல்லி நகரத்திற்குள் நுழைந்தனர். ராஜபாதையில் குடியரசு தின அணிவகுப்பு முடிந்ததும், டெல்லியில் டிராக்டர் அணிவகுப்பை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறி, பாதுகாப்பு அதிகாரிகள் விவசாயிகளை தடுக்க முயன்றனர். 

ஆனால், விவசாயிகள் டிராக்டரை பயன்படுத்தி, தடுப்புகளை முட்டி மோதி, இடித்து உள்ளே நுழைந்தனர். தடையை மீறி உள்ளே நுழைந்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவியது. அதே போல காஜிப்பூர் எல்லை வழியாக டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது போலீஸ் கண்ணீர் புகை குண்டுகளை வீசியது.


பின்னர் போலீசாரின் தடுப்புகளை கடந்த விவசாயிகள், டிராக்டர்களுடன் டெல்லி செங்கோட்டை பகுதிக்குள் நுழைந்தனர். அங்கு செங்கோட்டையின் முன் டிராக்டர்களை நிறுத்தியும், தேசிய கொடி கம்பத்தின் அருகே திரண்டு கோஷங்களையும் எழுப்பினர். டெல்லி பேரணியில் போலீசார் அளித்த அனுமதிக்கப்பட்ட பாதைகளை மீறி சிலர் தடுப்புகளை உடைத்து கொண்டு சென்றால், அவர்களை தடுக்க முயன்ற போலீசாருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வன்முறை தொடர்பாக டெல்லி காவல்துறை பலர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. 

இந்நிலையில் டெல்லி விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக முதல் தகவல் அறிக்கையில் (FIR) இடம் பெற்றவர்களுக்கு டெல்லி காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. 

முதல் தகவல் அறிக்கையில் பெயர் உள்ளவர்கள் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்வதை தடுக்க டெல்லி காவல்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் பாஸ்போர்ட்டுகளை பறிமுதல் செய்யவும் டெல்லி காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக