புதன், 13 ஜனவரி, 2021

துக்ளக் தர்பார் ! நாம் தமிழர் சீமானுக்கு விஜய் சேதுபதி இருட்டடி?

nakkeeran  :விஜய் சேதுபதி நடிப்பில் அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'துக்ளக் தர்பார்'. இதில் பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ், பிக்பாஸ் சம்யுக்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். முழுக்க அரசியல் பின்னணி கொண்ட படமாக உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியிருந்த நிலையில் நேற்று இப்படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் 'ராசிமான்' என்ற கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு காட்சியில் அந்த பெயர் பொறித்த போஸ்டர்களை எல்லாம் கிழிப்பது போன்று ஒரு காட்சி இடம்பெற்றுள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை இக்காட்சியில் கிண்டல் செய்து இருப்பதாக கருதி, நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் இப்படக்குழுவினருக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...

 "நீண்ட நெடுங்காலமாக அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழ் தேசிய இனத்தின் விடுதலை ஒன்றையே ஒற்றை இலக்காக வைத்துக்கொண்டு கடந்த பதினொரு ஆண்டுகாலமாக லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்களின் வாழ்வை அர்ப்பணித்து இளமையைத் தொலைத்து பொருளாதாரத்தை இழந்து கட்டமைத்துவரும் கட்சி நாம் தமிழர் கட்சி. நேற்று வெளியான தங்களது திரைப்பட முன்னோட்டத்தில் நாம் தமிழர் கட்சிக்கும், எங்களின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமானுக்கும் எதிரானதுபோலக் கட்சியின் கோட்பாடுகளை களங்கப்படுத்துவதுபோல சில காட்சிகள் இடம்பெற்றிருந்தது எங்களை மிகுந்த மனவேதனைக்கு உள்ளாக்குகிறது.

 இதுபற்றி படத்தின் தயாரிப்பாளர் லலித்குமாரிடம் கேட்டபொழுது, "தெரியாமல் நடந்துவிட்டது. அந்த மாதிரி காட்சிகளை சிஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி படத்திலிருந்து முழுவதுமாக நீக்கிவிடுகிறேன் என உறுதி அளித்துள்ளார். இருப்பினும் இம்மாதிரியான காட்சிகளை எடுத்த இயக்குநர் மற்றும் இதில் நடித்த நடிகர்களை வன்மையாகக் கண்டிப்பதோடு, இந்தக் காட்சிகளோடு இப்படம் திரைக்கு வருமாயின் உலகம் முழுவதும் ஒரு காட்சிகூட திரையரங்குகளில் ஓடாது என்பதை எச்சரிக்கையோடு தெரிவித்துக் கொள்கிறோம். இழவு வீட்டில் இருக்கும் எங்களிடம் வந்து வம்பிழுக்கும் வேலையை விடுங்கள். இல்லையேல் இந்தக் கலைத்துறையிலிருந்து வெகு விரைவில் அப்புறப்படுத்தப்படுவீர்கள்" என குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக