திங்கள், 18 ஜனவரி, 2021

"விவசாயக் கடன்கள் ரத்து? -முதல்வர் டெல்லி பயணத்தில் மெகா திட்டம்!

விவசாயக் கடன்கள் ரத்து? -முதல்வர் டெல்லி பயணத்தில் மெகா திட்டம்!
minnambalam.com  ;தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஜனவரி 18ஆம் தேதி பிற்பகல் டெல்லி சென்றடைந்தார். சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு டெல்லி சென்ற அவருக்கு இன்று பிற்பகல் தமிழ்நாடு இல்லத்தில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.   டெல்லியில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை முதல்வர் சந்திக்கிறார்.

டெல்லி சென்ற முதல்வர் தமிழ்நாடு அரசின் சார்பாக சில கோரிக்கைகளையும், அதிமுக- பாஜக கூட்டணி தொடர்பான சில விஷயங்களையும் பிரதமருடனும், அமித்ஷாவுடனும் விவாதிக்க இருக்கிறார்.தமிழகத்திற்கு தேவையான நிதி உதவி தொடர்பான கோரிக்கைகளுக்கு இந்த டெல்லி பயணத்தின் போது எடப்பாடி அழுத்தம் கொடுப்பார் என்று தமிழக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கிறார்கள். இதில் மிக முக்கியமான அம்சமாக விவசாயிகளின் கடன் தொடர்பான விஷயம் இடம்பெற்றுள்ளது என்கிறார்கள்.

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக பெய்த கன மழையால் விவசாயிகள் கடும் துயரத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில் விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய கடன் தொகையை தள்ளுபடி செய்தால் மட்டுமே இந்த நெருக்கடியிலிருந்து அவர்களால் மீள முடியும் என்று முதல்வருக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ரிப்போர்ட் அனுப்பப்பட்டது..

டெல்லி பயணத்தின் போது இந்தக் கோரிக்கைக்கு முதல்வர் மத்திய அரசிடம் அழுத்தம் கொடுக்க இருப்பதாக தெரிகிறது.

அதாவது தமிழக விவசாயிகளின் வங்கி கடன்களை, நகைக் கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக தலைவர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். ஆனால் திமுக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளிக்கிறது என்று முதல்வர் எடப்பாடி உட்பட அதிமுகவினர் பலரும் குற்றம் சாட்டி வந்தனர். ஆனால் அந்த வாக்குறுதி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்தது.

இந்நிலையில் கடந்த ஜனவரி 13ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் நத்தம் கிராமத்தில் பொங்கல் விழாவில் கலந்து கொண்ட ஸ்டாலின் பேசும்போது...

"2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைத்தவுடன் முதல் கையெழுத்தே 7,000 கோடி ரூபாய் விவசாயக் கடன்கள் ரத்து என்ற கோப்பில் முதல்வர் கலைஞர் கையெழுத்திட்டார்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கலைஞர் எப்படி விவசாய கடன்களை ரத்து செய்தாரோ அதுபோல ரத்து செய்யுங்கள் என்று விவசாயப் பெருங்குடி மக்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். உயர் நீதிமன்றம் உத்தரவு போட்டது. ஆனால் இந்த அரசு உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றத்தில் தடை கேட்டது. இப்போது சொல்கிறேன்... நான்கு மாதங்களில் ஆட்சிக்கு வரப் போகிறோம். அப்போது கலைஞர் வழியில் நின்று விவசாயிகள் கடனை ரத்து செய்வதற்கான உத்தரவை திமுக அரசு நிறைவேற்றும் என்று நான் உறுதி கூறுகிறேன். மேலும் 5 சவரன் வரையிலான விவசாயிகளின் கடனை ரத்து செய்வோம் என்று கடந்த தேர்தலின்போது சொன்னோம் இப்போது சொல்கிறோம்" என்று பேசினார்.

ஸ்டாலினின் இந்த பேச்சு மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற நிலையில்... தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த ஆட்சி முடிவதற்குள்ளேயே விவசாயிகளின் கடனை ரத்து செய்தால் அது மீண்டும் ஆட்சி அமைக்க தனக்கு சாதகமாக இருக்கும் என்று நம்புகிறார்.

அதன் அடிப்படையில் 2020 டிசம்பர் 31 வரையிலான விவசாயக் கடன்களை தற்போதைக்கு ரத்து செய்தால் அதற்கு எவ்வளவு கோடி ரூபாய் தேவைப்படும் என்று குறிப்புகள் தயார் செய்யப்பட்டு தமிழக முதல்வருடன் டெல்லிக்குப் பயணித்திருக்கின்றன என்கிறார்கள்.

பிரதமர் மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருடன் இது பற்றி விவாதித்து தமிழக விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதற்காக மத்திய அரசின் நிதி உதவியைக் கோருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இதன்மூலம் விவசாயி என்ற தன்னுடைய இமேஜை மேம்படுத்திக் கொள்ளவும், வரும் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு மிகப்பெரிய அரசியல் ஆதாயம் ஆக்கவும் முதல்வர் திட்டம் தீட்டியிருக்கிறார்.

டெல்லி பயணத்துக்குப் பின் இதுகுறித்த அதிரடி அறிவிப்புகள் வெளியாகலாம் என்கிறார்கள் அதிகாரிகள் வட்டாரத்தில்.

வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக