வியாழன், 28 ஜனவரி, 2021

மணிமேகலையின் காதலும் துறவும் .. தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று ..

keetru.com : மணிமேகலைக் காப்பியத்தை இயற்றியவர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச்சாத்தனார். இப்பெயரைக் கொண்டு இவரது ஊர் சீத்தலை என்றும் இவர் மதுரையில் கூல வாணிகம் செய்து வந்தவர் என்றும் அறிகிறோம். பௌத்த மதப் பரப்பலுக்காக ஒரு தனிக் காவியமே படைத்த இச்சாத்தனார் ஒரு பௌத்த நெறியாளர். இவரது காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பார் மயிலை சீனி வேங்கடசாமி. தமிழின் முதல் காப்பியம் என்ற பெருமைக்குரிய சிலப்பதிகாரமும் சாத்தனாரின் மணிமேகலையும் கதைத் தொடர்ச்சியால் இரட்டைக் காப்பியங்கள் என்றழைக்கப் படுகின்றன. சிலப்பதிகாரத்தின் முப்பெரும் கதை மாந்தர்களாம் கண்ணகி, கோவலன், மாதவி மூவரில் கோவலன் மாதவி இருவருக்கும் பிறந்த ஒரே மகளே மணிமேகலை. இவளே மணிமேகலைக் காப்பியத்தின் தலைவி. காப்பியத் தலைவி மணிமேகலையை மாதவியின் கூற்றில் வைத்து காப்பியம் அறிமுகம் செய்யும் பகுதி பின்வருமாறு:

காவலன் பேர்ஊர் கனைஎரி ஊட்டிய

மாபெரும் பத்தினி மகள் மணிமேகலை

அருந்தவப் படுத்தல் அல்லது யாவதும்

திருந்தாச் செய்கைத் தீத்தொழில் படாஅள்        (2: 54-57)

இவ்வடிகளில் மாதவி, மணிமேகலையைக் கண்ணகி மகள் என்று சிறப்பிப்பதோடு இவள் தவத்திற்குரியவள் என்றும் கணிகையாகத் தீத்தொழில் புரிந்து வாழமாட்டாள் என்றும் தெளிவு படுத்துகின்றாள். ஆக மணிமேகலை, தாய் மாதவியால் ஆடலும் பாடலும் கூடிய பரத்தமை வாழ்க்கையிலிருந்து விடுவிக்கப்பட்டு தவ வாழ்க்கைக்கு உரியவளாகிறாள். 

 

இது மாதவியின் விருப்பம். மணிமேகலை தவ வாழ்க்கையை விரும்பி ஏற்றாளா? இல்லையா என்பது காப்பியத்தில் பேசப்படவில்லை...... காப்பியத்தில் மணிமேகலையின் அறிமுகம் அவளின் கண்ணீரோடுதான் தொடங்குகிறது. கண்ணீருக்குக் காரணம் மாதவி, தோழி வயந்தமாலையிடம் சொல்லிய கோவலன் கண்ணகியர் அடைந்த பெருஞ்சோகம் குறித்த விவரிப்பு. தாயின் துயரத்தோடு ஒன்றி கண்ணீர் வடிக்கிறாள் மணிமேகலை. ஒரு காப்பியத் தலைவியைக் கண்ணீரோடு அறிமுகம் செய்யும் சாத்தனாரின் உட்குறிப்பு கதையின் ஊடாக மணிமேகலையைத் தொடர்வோருக்கே புலப்படக்கூடியது.... காவியத்தின் தொடக்கத்தில் உவவனத்திற்கு மணிமேகலை வந்துள்ளாள் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு அவளைச் சந்திக்கத் தேரேறி வருகிறான் உதயகுமாரன். அவன் தேரொலி கேட்டு வருவது உதயகுமாரனே என்றும் அவன் தன்மேல் காதல் உடையவன் என்றும் மணிமேகலை சுதமதியிடம் கூறுகிறாள். உதயகுமாரனிடமிருந்து தப்பிக்க உவவனத்துப் பளிக்கறையில் புகுந்துகொள்கிறாள் மணிமேகலை. தேடிவந்த மணிமேகலையைக் காணாமல் சுதமதியிடம் அவள் எத்திறத்தாள்? என்று வினவும் உதயகுமாரனுக்கு சுதமதி கூறும் விடை முக்கியத்துவம் உடையது.

எத்திறத் தாள்நின் இளங்கொடி? உரைஎன

குருகுபெயர்க் குன்றம் கொன்றோன் அன்னநின்

முருகச் செவ்வி முகந்துதன் கண்ணால்

பருகாள் ஆயின்இப் பைந்தொடி நங்கை

ஊழ்தரு தவத்தள் சாப சரத்தி

காமற் கடந்த வாய்மையள் என்றே

தூமலர்க் கூந்தல் சுதமதி உரைப்ப    (5: 12-18)

‘முருகவேளை ஒத்த உன் இளமை அழகினை அவள் தன் கண்ணாலும் பார்க்கமாட்டாள். முன்வினைப் பயனால் தவநெறி புகுந்தவள். தீயோரைச் சுடுகின்ற சாபமாகிய அம்பினை உடையவள். காமனை வென்ற வாய்மை யுடையவள்’ என்றெல்லாம் சுதமதி மணிமேகலை குறித்து உதயகுமாரனுக்கு சொன்ன விவரிப்பு முற்ற முழுதாகக் காப்பிய ஆசிரியனின் கூற்றே ஆகும். ஏனெனில் இக்கூற்றில் பொதிந்துள்ள மணிமேகலை பற்றிய மதிப்பீடுகள் எவையும் அவள் யதார்த்த வாழ்க்கையின் பிரதிபலிப்பு அல்ல. படைப்பாசிரியர் சாத்தனார் மணிமேகலைக்கு விரும்பிச் சூட்டிய கிரீடமாகவே ஊழ்தரு தவத்தள் சாபசரத்தி காமற்கடந்த வாய்மையள் என்ற இம்மதிப்பீடுகள் அமைந்துள்ளன. குறிப்பாக, காமற் கடந்த வாய்மையள் என்று சாத்தனார் சுதமதி வாயிலாக மணிமேகலைக்கு தரும் அடைமொழி காப்பியத்தின் போக்கில் எவ்வாறு ஒத்தும் உறழ்ந்தும் நிற்கின்றது என்பதனை இனிக் காண்போம்.

      உவவனத்தில் பளிக்கறையில் மறைந்துகொண்ட மணிமேகலைக் கண்டு தன் காதலைத் தெரிவிக்க முயன்று முடியாமல் திரும்பும் உதயகுமாரன் சுதமதியிடம் மணிமேகலையை அவள் பாட்டி சித்திராபதியைக் கொண்டு அடைவேன் (வஞ்சி நுண்இடை மணிமே கலைதனைச் சித்திரா பதியால் சேர்தலும் உண்டு) என்று சொல்லிவிட்டுப் புறப்படுகிறான். உதயகுமாரன் புறப்பட்டுவிட்டான் என்று தெரிந்து பளிக்கறையை விட்டு வெளியே வந்த மணிமேகலை உதயகுமாரனைக் குறித்தும் அவன் சொன்னவை குறித்தும் தன்நிலை குறித்தும் மிகவும் வெளிப்படையாகச் சொல்லும் பின்வரும் பகுதி கூர்ந்து கவனிக்கத்தக்கது.

பளிக்கறை திறந்து பனிமதி முகத்துக்

களிக்கயல் பிறழாக் காட்சியள் ஆகிக்

கற்புத் தான்இலள் நல்தவ உணர்வுஇலள்

வருணக் காப்புஇலள் பொருள்விலை யாட்டிஎன்று

இகழ்ந்தனன் ஆகி நயந்தோன் என்னாது

புதுவோன் பின்றைப் போனதுஎன் நெஞ்சம்

இதுவோ அன்னாய்! காமத்து இயற்கை

இதுவே ஆயின் கெடுகதன் திறம்!என       (5: 84-90)

‘இவள் கற்பு இல்லாதவள், நல்ல தவ உணர்வும் இல்லாதவள், குலமரபின் படியும் தனக்கொரு காவல் அற்றவள், பொருளுக்காகத் தன்உடலை விற்பவள்’ என்றெல்லாம் என்னைக் குறித்து மிகஇழிவாகப் பேசி என்னை அடைய விரும்புகின்றான் என்பது தெரிந்தும் அதனைப் பொருட் படுத்தாமல் அந்தப் புதிய ஆடவனின் பின்னே என் நெஞ்சமும் செல்கின்றதே. இதுதான் காமத்தின் இயல்பா? அப்படியாயின் அக்காமத்தின் வலிமை கெட்டொழியட்டும்.

      மணிமேகலை தோழி சுதமதியிடம் மனந்திறந்து கூறுவதாக வரும் இப்பகுதி உண்மையில் மணிமேகலையின் நிலை என்ன? என்பதனை நமக்குத் தௌ;ளத் தெளிவாகக் காட்டுகிறது. மணிமேகலை இதுவரை காமத்தின் வயப்படாதவள், இப்பொழுதுதான் முதன்முறையாக ஒரு ஆடவனைக் கண்டு அவன்மேல் காதல் கொள்கிறாள். உதயகுமாரன் தன்னை விரும்புகின்றான் என்பதனைத் தன்பாட்டி சித்திராபதியிடமிருந்து தெரிந்துகொண்ட வயந்தமாலை அதனை ஒருநாள் தன்தாய் மாதவியிடம் சொல்லக் கேட்டிருக்கிறாள் அவள். அப்பொழுதெல்லாம் அவளுக்கு உதயகுமாரனைக் குறித்து யாதொரு சிந்தனையும் தோன்றியதில்லை. இப்பொழுது பளிக்கறைக்கு உள்ளிருந்து அவனைக் கண்டபொழுதுதான் அவள் காதல் வயப்பட்டாள். அதிலும் தன்னைக் குறித்து அவன் மிகக்கேவலமாகப் பேசியதைக் கேட்டபிறகும் அவன் பின்னாலேயே தன் மனம் செல்லுகிறது. இதுதான் காமமா? என்று முதன்முறையாக அந்த அனுபவம் குறித்துக் கேள்வி எழுப்புகிறாள் மணிமேகலை. அப்படியானால் இதற்கு முன்பே சுதமதி வாயிலாக சாத்தனார் சொன்ன, காமற் கடந்த வாய்மையள் என்ற மதிப்பீட்டிற்கு என்ன பொருள். காமத்தை அடைந்த பிறகல்லவா? அதனைக் கடக்க வேண்டும். இங்கே மணிமேகலை அடைந்த காமத்தைக் கடக்கத் துணிகிறாள்.

இதுவோ அன்னாய்! காமத்து இயற்கை

இதுவே ஆயின் கெடுகதன் திறம்!என 

இதுதான் காமத்தின் இயல்பா? அப்படியானால் அந்தக் காமம் என்னை விட்டு விலகி அழிந்து போகட்டும் என்று காமத்தைக் கடக்கக் கருதுகிறாள். ஆனால் மணிமேகலை உண்மையில் காமத்தைக் கடந்து வென்றாளா? என்பதனைக் காப்பியத்தின் தொடர் நிகழ்ச்சிகளில் நாம் காணவேண்டும்.

      காமத்தை எதிர்கொள்ளாமலே அதனைக் கடந்திருக்க வேண்டிய மணிமேகலை ஏன் உதயகுமாரனிடத்தில் காதல் கொண்டாள். காப்பிய ஆசிரியனுக்கு விடைசொல்ல வேண்டிய கடமை இருக்கிறது. ‘மந்திரம் கொடுத்த காதை’ இதற்குப் பதில் சொல்கிறது. சென்ற பிறவியில் அசோதர நாட்டு மன்னன் இரவிவன்மன் அமுதபதி இணையருக்குப் பிறந்த பெண் இலக்குமி. அவளே இந்தப் பிறவியில் மணிமேகலையாகப் பிறந்துள்ளாள். இலக்குமியின் கணவனாக இருந்தவன் இராகுலன். அவன் மன்னன் அத்திபதி நீலபதி இணையருக்குப் பிறந்தவன். அந்தப் பிறவியில் இராகுலனைத் திட்டிவிடம் என்னும் பாம்பு கொன்றுவிட இலக்குமி அவனோடு தீக்குளித்து இறந்து போனாள். இந்த இலக்குமி இராகுலன் இணையரே இப்பிறவியில் மணிமேகலை உதயகுமாரனாகப் பிறந்துள்ளார்கள் என்ற செய்தியை பீடிகை கண்டு பழம் பிறந்துணர்ந்தும் மணிமேகலா தெய்வம் உரைத்தும் தெரிந்துகொண்டாள் மணிமேகலை. மேலும்,

உவவன மருங்கில் உன்பால் தோன்றிய

உதய குமரன் அவன்உன் இராகுலன்

ஆங்குஅவன் அன்றியும் அவன்பால் உள்ளம்

நீங்காத் தன்மை நினக்கும்உண்டு ஆகலின்

கந்த சாலியின் கழிபெரு வித்துஓர்

வெந்துஉகு வெங்களர் வீழ்வது போன்ம்என

அறத்தின் வித்துஆங்கு ஆகிய உன்னைஓர்

திறப்படற்கு ஏதுவா சேயிழை! செய்தேன்    (10: 42-49)

உவவனத்தில் காமத்தோடு உன்னைநாடி வந்த உதயகுமாரனே உன்னுடைய முற்பிறப்புக் கணவனாகிய இராகுலன். அதனால்தான் அவன் உன்னை விரும்பியதோடு மட்டுமல்லாமல் நீயம் அவனிடத்தில் நீங்காத விருப்பம் கொண்டாய். உன் உள்ளத்தில் தோன்றிய அக்காமம், கந்தசாலி என்னும் நெல்லின் மிகச்சிறந்த வித்து வெந்து உருகுகின்ற உப்பு நிலத்தில் வீழ்வதைப் போன்றது என்று கருதி அறத்தின் வித்தாகிய உன்னைச் சரியான நிலைக்கு ஆற்றுப்படுத்தவே இத்தீவிற்குக் கொண்டுவந்தேன் என்று மணிமேகலா தெய்வம் மணிமேகலையிடம் உரைத்தது.

      மணிமேகலா தெய்வத்தின் இக்கூற்று சில விளக்கங்களை சாத்தனார் சார்பாக நின்று நமக்குத் தெரிவிக்கின்றது. ஒன்று, மணிமேகலை உதயகுமாரனைக் கண்டு காதல் வயப்பட்டது முன்வினைத் தொடர்ச்சியே, காமவயப்படுதல் என்ற குறையைக் காப்பியத் தலைவிமேல் சுமத்தமுடியாது. இரண்டு, தெய்வம் மணிமேகலையை இத்தீவிற்குக் கொண்டு வரவில்லையெனில் அறத்தின் வித்தாகிய மணிமேகலை காமம் என்ற வெங்களர் நிலத்தில் வீழ்ந்துவிட வாய்ப்பிருக்கிறது. மூன்று, பிறவிகள் தோறும் தொடரும் கணவன் மனைவி உறவுகள் வினைப்பயனால் விளைவது, அதனை வெல்லுதல் அத்துனை எளிமையானதன்று.

      தெய்வத்தின் இச்சீரிய முயற்சியால் பழம் பிறப்புணர்ந்து உதயகுமாரன் மேல் கொண்ட காமத்தை வெல்லவேண்டிய மணிமேகலை அதற்கு நேர்மாறாக முற்பிறப்புக் கணவன் என்று உதயகுமாரன் மேல் கூடுதல் ஈர்ப்புடையவளாக மாற்றம் பெறுகிறாள். ஒரு பக்கம் கொண்ட துறவிக் கோலத்தால் இயல்பாக எழும் காதலை அடக்கிய தவிப்பும் மறுபுறம் முற்பிறவிக் கணவன் என்பதனால் உதயகுமாரன் மீதான ஈர்ப்புமாக மணிமேகலையின் மனம் ஊசலாடுகிறது.

      ஆபுத்திரனின் அமுதசுரபி பெற்று பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக என உண்டி கொடுத்து உயிர்க்குலம் காக்கும் கடமையில் ஈடுபட்டுவரும் மணிமேகலைக்கு உதயகுமாரனின் சந்திப்பு மீண்டும் சிக்கலை உருவாக்குகிறது.

      சித்திராபதியால் தூண்டப்பட்ட உதயகுமாரன் குதிரைகள் பூட்டப்பட்ட நெடுந்தேரில் ஏறி மணிமேகலை தங்கியிருந்த உலக அறவியை அடைந்தான். அங்கே மணிமேகலை, கையில் அமுதசுரபி ஏந்தி பெரும்பசி உடைய வறியவர் களுக்கெல்லாம் மிகுதியான உணவினை வாரி வழங்கிக் கொண்டிருந்தாள். மணிமேகலையைக் கண்டவுடன் பெருகிய காமத்தோடு அவளை நெருங்கிப் பேசத் தொடங்கினான் உதயகுமாரன். முன்பு உவவனத்தில் இதுவோ அன்னாய்! காமத்து இயற்கை இதுவே ஆயின் கெடுகதன் திறம்!என, காமத்தைக் கடக்க உறுதி பூண்ட மணிமேகலை, இப்பொழுது, இவன் எனது முற்பிறவிக் கணவன் இராகுலனே என்று நினைக்கிறாள். அவன் பாதங்களில் விழுந்து வணங்குவதும் தகுதியானதே என்று கருதி அவனடி தொழுது வணங்கி நிற்கிறாள்.

என்அமர் காதலன் இராகுலன் ஈங்குஇவன்

தன்அடி தொழுதலும் தகவு!என வணங்கி

அறைபோய் நெஞ்சம் அவன்பால் அணுகினும்

இறைவளை முன்கை ஈங்குஇவன் பற்றினும்

தொன்று காதலன் சொல்எதிர் மறுத்தல்

நன்றி அன்று!என நடுங்கினள் மயங்கி             (18: 128-133)

உதயகுமாரனை வணங்கியதோடு அல்லாமல் மணிமேகலையின் சிந்தனையோட்டம் பல தடைகளைத் தாண்டி பெருக்கெடுக்கிறது. எனது நெஞ்சம் கட்டுப்பாட்டினை இழந்து உதயகுமாரனிடத்திலே சென்றாலும் வளைகள் குலுங்கும் எனது கரங்களை அவன் பற்றினாலும் முற்பிறப்புக் கணவனாகிய இவன் பேச்சை மறுத்தல் கூடாது என்று மனதில் உறுதி கொள்கிறாள் மணிமேகலை.... காப்பியத்தின் இப்பகுதி மணிமேகலையின் மனஓட்டப் பதிவு என்பதனை நாம் கருத்தில் கொள்ளுதல் வேண்டும். வெளிப்படையாகப் பேசுகிற பேச்சைவிட மனத்துக்குள்ளே ஒருவர் பேசுகிற பேச்சே உண்மைக்கு நெருக்கமாயிருக்கும். மன ஊசலாட்டத்தின் வெளிப்பாடுகள் யாவும் நம் விருப்பின் பல முகங்கள். இங்கே மணிமேகலையின் மனஓட்டத்தில் உதயகுமாரன் நம் கரங்களைப் பற்றினாலும் நாம் ஒன்றும் மறுத்துப் பேசக்கூடாது என்று நினைப்பது அவன் அத்துமீறி விடுவானோ என்ற அச்சத்தில் தோன்றுவது. ஆனால் இவள் தனக்குத்தானே சொல்லிக் கொள்கிறாள் நம் நெஞ்சம் கட்டுப்பாடிழந்து அவனிடத்திலே சென்றுவிட்டால் அதையும் நாம் ஏற்றுக்கொள்வது தான் நல்லது என்று. ஆக, மணிமேகலையின் மனம் உதயகுமாரனை அடையத் முடிக்கிறது, அதற்குக் காரணம் அவன் முற்பிறப்புக் கணவன். மணிமேகலா தெய்வம் நினைத்தது வேறு, நடந்தது வேறு. தெய்வம் நினைத்தது என்னவென்றால் மணிமேகலை பழம்பிறப்பு உணர்ந்தால் உதயகுமாரன் மீது ஏற்பட்ட காதலும் அதனால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியும் நீங்கிவிடும் அதனால் அவள் தெளிவு பெற்று அறத்தின் வித்தாக மாறுவாள் என்பதுதான். ஆனால் நிலைமை தலைகீழாகிப் போனது பழம்பிறப்பு உணர்ந்ததால் மணிமேகலை உதயகுமாரன் காதல் இன்னும் நெருக்கமாகிப் போனது. கதையின் போக்கிலேயே இதற்கு ஒரு தீர்வும் கிடைக்கின்றது.<... மயங்கிய மணிமேகலை தெளிவு பெறுகிறாள். அவளின் காதல் மனம் அடங்கி, துறவு மனம் விழிக்கிறது. மீண்டும் உதயகுமாரனைச் சந்தித்தால் துறவு வெல்லுமா? காதல் வெல்லுமா? என்ற ஐயத்தில் அதற்கான வாய்ப்பைத் தவிர்க்க விரும்பி காயசண்டிகை என்ற விஞ்சையப் பெண்ணாக மாற்றுரு கொள்கிறாள் மணிமேகலை. காயசண்டிகை உருவில் இருப்பவள் மணிமேகலையே என்று தெரிந்துகொண்ட உதயகுமாரன் அவளை நெருங்கி உரையாட, உறவாட, உண்மை அறியாத காயசண்டிகையின் கணவன் காஞ்சனன் உதயகுமாரனை வாளால் வெட்டிக் கொன்றுவிடுகிறான். கொலையுண்டு வீழ்ந்து கிடக்கும் உதயகுமாரனின் உடல்கண்டு மீண்டும் தடுமாறுகிறாள் மணிமேகலை.

      உதயகுமாரனின் வெட்டுண்ட உடலைக் கண்டு மணிமேகலை புலம்பும் காட்சியில் மணிமேகலையின் தவக்கோலத்தை நாம் காண முடியவில்லை. கணவன் அல்லது காதலனின் மரணத்திற்கான புலம்பலாகவே அக்காட்சியைப் படைக்கின்றார். சாத்தனார்.

காதலனே! திட்டிவிடம் என்னும் தீண்ட உன்உயிர் நீங்கிய அந்தநாளில் பெருநெருப்புடைய ஈமத்தீயில் விழுந்து நான் உயிரைவிட்டேன். உவவனத்தில் உன்னிடம் என் உள்ளம் சென்றதைத் தவிர்க்க முடியவில்லை. என்று தொடங்கும் மணிமேகலையின் புலம்பலில்

திட்டி விடம்உண நின்உயிர் போம்நாள்

கட்டுஅழல் ஈமத்து என்உயிர் சுட்டேன்

உவவன மருங்கில் நின்பால் உள்ளம்

தவிர்விலேன்     .. .. .. .. .. ..                       (21: 11-14)

வைவாள் விஞ்சையன் மயக்குஉறு வெகுளியின்

வெவ்வினை உருப்ப விளிந்தனை யோ!என

விழுமக் கிளவியின் வெய்துஉயிர்த்துப் புலம்பி

அழுதனள் ஏங்கி அயாஉயிர்த்து எழுதலும்

செல்லல் செல்லல்! சேயரி நெடுங்கண்!

அல்லிஅம் தாரோன் தன்பால் செல்லல்!

நினக்கு இவன் மகனாத் தோன்றியதூஉம்

மனக்கு இனியாற்கு நீ மகள் ஆயதூஉம்

பண்டும் பண்டும் பல் பிறப்பு உளவால்            (21: 23-31)

கூரிய வாளினையுடைய விஞ்சையன் காஞ்சனன் என்னைத் தன்மனைவி காயசண்டிகை எனத் தவறாக உணர்ந்து சீற்றம் கொண்டு உன்னைக் கொன்றுவிட்டானே என்று அழுது புலம்பி ஏக்கப்பெருமூச்சுடன் உதயகுமாரனை நெருங்குகின்றாள். தவக்கோலம் பூண்ட மணிமேகலையின் இப்புலம்பலில் மிக்குத் தோன்றுவது காமத்தைக் கடந்கவியலாத அவளின் இயல்பான சோகமே. நிலைமை கட்டுமீறிப் போவதை உணர்ந்த கந்திற்பாவை செல்லாதே! செல்லாதே மணிமேகலையே உதயகுமாரனை நெருங்கிச் செல்லாதே என்று எச்சரிக்கைக் குரல் எழுப்புகிறது. கந்திற்பாவையின் எச்சரிக்கை எழாமல்போனால் மணிமேகலையின் காதலும் துயரமும் துறவு என்ற கட்டினையும் மீறிச் செயல்பட்டிருக்கும் என நாம் ஊகிக்க முடியும்.

      கந்திற்பாவையே இச்சிக்கலான சூழலை முடிவுக்குக் கொண்டுவருகின்றது. சென்ற பிறப்பில் இவன் உனக்குக் கணவனாகத் தோன்றியதும் அவனுக்கு நீ மனைவியாகத் தோன்றியதும் அந்தப் பிறப்பினில் மட்டுமல்ல அதற்கு முன்னும் முன்னும் பல பிறப்புகளில் தொடர்ந்து வந்துள்ளது பிறவியில் அழுந்துகின்ற தடுமாற்றத்தினைப் போக்க முயலுகின்ற தவக்கோலப் பெண்ணாகிய நீ இவன் மரணத்திற்காகத் துன்பம் கொள்ளாதே என்று மணிமேகலையின் தவக்கோலத்தை நினைவுபடுத்தி காமத்தைக் கடக்க வேண்டிய கடமையை அறிவுறுத்துகின்றது.

      காப்பியத்தின் தொடக்கத்தில் சுதமதி கூறிய காமற் கடந்த வாய்மையள் என்ற தகுதிப் பாட்டினை ஒத்தும் உறழ்ந்துமே மணிமேகலையின் வாழ்க்கைப் பயணம் நடைபோடுகின்றது. மாதவி தவக்கோலத்தை புனைந்துவிட்டாள். தோழி சுதமதி அக்கோலத்திற்கு ஒரு பெரிய அங்கீகாரத்தை வாய்மொழியாக வழங்கிவிட்டாள். மணிமேகலா தெய்வம்தான் அவளின் தவக்கோலத்திற்கு ஓர் அர்த்தத்தை ஏற்படுத்துகின்றான். மணிமேகலை என்ற இயல்பான பெண்ணுக்கும் மணிமேகலை என்ற தவமகளுக்குமான மோதலே காப்பியத்தை நடத்திச் செல்கின்றது. உதயகுமாரனின் மரணம் இப்போராட்டத்தை ஓர் உச்சக் கட்டத்திற்குக் கொண்டு சென்று சிக்கலை ஒருவாறு முடித்தும் வைக்கிறது. காதலனாம் உதயகுமாரனின் மரணத்திற்குப் பின்னும்கூட அவன்தாய் பட்டத்தரசியை காதலன் பயந்தோய்! என்று விளித்து அறம் சொல்லத் தொடங்குகிறாள் மணிமேகலை.

காப்பியத் தலைவியை அறிமுகப்படுத்தும் போதே கண்ணீரோடு அறிமுகப் படுத்தினார் சாத்தனார் என்று முன்னர் குறிப்பிட்டேன். மணிமேகலையின் கண்ணீருக்குக் காரணம் தவக்கோலம். பிறர் ஏற்றிவைத்த சுமையோடு அதனைச் சுமக்கவும் முடியாமல் இறக்கி வைக்கவும் தோன்றாமல் அவள் படும் வேதனையின் முற்குறியே மணிமேகலையின் கண்ணீர். ஆசிரியர் சாத்தனார் மணிமேகலையின் இந்த உள்முரணை முழுதாக உணர்ந்தே காப்பியம் படைக்கின்றார். அதனால்தான் மணிமேகலையின் உள்மன ஓட்டங்களையும் தடுமாற்றங் களையும் ஆசிரியனின் அனுமதியோடு நாம் கேட்க முடிகிறது. இதுவே படைப்புக்கும் படைப்பாளிக்குமான வெற்றி.

துணைநூல்: சிலம்பொலி சு. செல்லப்பன், மணிமேகலைத் தெளிவுரை, பாரதி பதிப்பகம், சென்னை-17, 1998.

முனைவர் நா.இளங்கோ, தமிழ்த்துறைத் தலைவர், தாகூர் கலைக் கல்லூரி, புதுச்சேரி -605008

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக