புதன், 20 ஜனவரி, 2021

தொலைந்த உறவுகளைத் தேடும் ஆயிஷா பரமேஸ்வரியின் கதை.. மலையகத்தை சேர்ந்தவர்




மணி ஶ்ரீகாந்தன்:..எட்டு வயதில் தமது உறவுகளை தொலைத்து விட்டு அவர்கள் எங்கிருக்கிறார்களோ என்று கனத்த இதயத்துடன் இன்று வரை தேடிக் கொண்டிருக்கிறார்.சிறுவயதில் காணாமல் போனவர்கள் பல வருடங்களுக்குப் பிறகு தமது உறவுகளை சந்தித்து அகமகிழ்ந்து போகும் சம்பவங்கள் உலகில் பல நாடுகளில் தினமும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
போரில் தொலைந்து போன தமது குழந்தைகள் அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனப் பிறகு பெற்றோர்களுடன் இணைவது, சுனாமியில் தொலைந்த சிறுவனின் பெற்றோர்களை அடையாளம் காணும் முயற்ச்சி, வறுமையின் காரணமாக ஆங்கிலேயருக்கு தமது குழந்தையை விற்ற தமிழ்த் தாயை தமது 30வது வயதில் சந்திக்கும் பிரிட்டிஷ் தம்பதியரின் புதல்வன் உள்ளிட்ட செய்திகளை நாம் அவ்வப்போது படித்துக்கொண்டுதான் இருக்கிறோம். இப்படியான நிகழ்வுகள் இன்று வரை தொடர் கதையாக நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன.

இந்த பரமேஸ்வரி என்ற ஆயிஷாவின் கதையும் அப்படித்தான் தொடங்குகிறது.
எட்டு வயதில் தமது உறவுகளை தொலைத்து விட்டு அவர்கள் எங்கிருக்கிறார்களோ என்று கனத்த இதயத்துடன் இன்று வரை தேடிக் கொண்டிருக்கிறார்…

1971ல் கண்டி மாவட்டத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் பிறந்தவர்தான் இந்த பரமேஸ்வரி. இவர் பிறக்கும் போதே அவரின் அம்மா இறந்து விட்டாராம். அவரின் அப்பா ஆறுமுகம். பரமேஸ்வரி சிறு வயதாக இருக்கும் போதே அவரும்  இறந்து விட்டதாக கூறும் பரமேஸ்வரி,
“அப்பாவின் மரணம் வரை நான் என் வீட்டில்தான் இருந்தேன். அதன் பிறகு என்னையும் என் அண்ணன் கலியப் பெருமாளையும்  எனது அக்கா செல்லம்மா அவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டார். அதன் பிறகு அவர்களின் வீட்டிலேயே நானும் அண்ணனும் வளர்ந்தோம்.


அதன் பிறகு எனது அண்ணன் கலியப் பெருமாளை எனது மாமா தலமலை நாயுடு எங்கேயோ வேலைக்கு அழைத்துச் செல்வதாக கூறி அவரை அழைத்துச் சென்று விட்டார். அப்போது எனக்கு ஏழு, அல்லது எட்டு வயது இருக்கலாம்.
எனது அக்காவின் வீட்டில் எனது பெற்றோரின் கறுப்பு, வெள்ளை திருமணப் புகைப்படம் அந்த வீட்டுச் சுவரில் மாட்டப்பட்டிருக்கும். சில சமயங்களில் நான் அந்தப் புகைப்படத்தை ஆசையுடன் பார்த்து ரசிப்பேன். அப்போது ஒரு இனம் புரியாத சோகம் என்னைச் சூழ்ந்து கொள்வதை உணர்ந்திருக்கின்றேன்…”
என்று சொல்லும் பரமேஸ்வரி, தமது சோகக்கதையை மேலும் தொடர்ந்தார்.


“அக்காவின் வீட்டிலிருந்த என்னை சில நாட்களுக்குப் பிறகு எனது மாமா தலமலை நாயுடு அவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டார்.
அந்த தோட்டத்தின் பெயர் ‘கடுதாசி’ தோட்டமாம். எனக்கு அது மட்டும் கொஞ்சம் ஞாபகத்தில் இருக்கிறது. அதோடு நான் இருந்த வீட்டுக்கு பக்கத்திலேயே ஒரு கோயில் அமைந்திருந்து. எனது மாமாவின் வீட்டு சமையலறையில் இருந்த ஜன்னல் வழியே பார்த்தால் அந்த தோட்டத்தின் தொழிற்சாலை பளிச்சுன்னு தெரியும்.
எனது மாமா தலமலை நாயுடு ஒரு சீப்பு, சோப்பு, கண்ணாடி, வலையல் விற்கும் ஒரு பொட்டணிக்காரர் என்பதும் எனக்கு நினைவிருக்கிறது.” என்ற பரமேஸ்வரி தமது ஊரையும், உறவையும் பிரிந்த சம்பவத்தையும் கண்ணீருடன் எம்மிடம் பகிர்ந்து கொண்டார்.


“எனக்கு அப்போது பத்து வயதிருக்கும். என் அண்ணா கலியப்பெருமாள் கொழும்பு பங்களாவில் வேலை செய்து வந்தார். அவரை அந்த பங்களாவில் எனது மாமாதான் வேலைக்கு சேர்த்திருந்தார். ஒரு நாள் அவரை எனது மாமா வீட்டிற்கு அழைத்து வந்தார். அண்ணா பஸ்சில் போனக் கதையையும், கொழும்பு புதினம் பற்றிய கதைகளையும் சொல்வதைக் கேட்க எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது. அந்த மகிழ்ச்சியோடு இருந்த என்னை சில நாட்களுக்குப் பிறகு எனது மாமா கொழும்புக்கு அழைத்துச் சென்றார்.
பஸ்சில் போகும் ஆசையில் நானும் மாமாவோடு சென்றேன். கொழும்புவில் ஒரு பெரிய பங்களா வீட்டில் என்னை விட்டார்.
அந்த வீட்டில் நிறைய குழந்தைகள் இருந்தார்கள். அந்த வீட்டு உரிமையாளர்களிடம் பேசிய எனது மாமா சில நிமிடங்களில் எதையோ வாங்கிக் கொண்டு என்னை திரும்பி பார்க்காமலேயே புறப்பட்டு சென்றார்.
எதுவும் புரியாத அந்த வயசில் நான் கனத்த இதயத்துடன் அவர் செல்வதை அந்த பெரிய வீட்டு கேட்டின் துவாரம் வழியாக பார்த்துக் கொண்டிருந்தேன்.
அந்த ஒழுங்கையில் அவர் மறையும் வரை நான் பார்த்துக் கொண்டிருந்தேன், அவர் அந்த ஒழுங்கை முடிவில் மறைந்து போனார்.
அவரோடு, எனது உறவுகள் அனைவரும் மறைந்து போவார்கள் என்று எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.

தனிமை என்னை சூழ்ந்து கொண்டாலும் அந்த வீட்டில் இருந்த குழந்தைகளால் சில நாட்களிலேயே அந்த தனிமை என்னை விட்டு கடந்து போய்விட்டது.
சில சந்தர்பங்களில் அந்த வீட்டில் என்னை அடிக்கும் போது என் வீட்டுக்கு போயிட மாட்டோமா, என் மாமா வந்து என்னை அழைத்துச் செல்ல மாட்டாரா என்ற ஏக்கத்துடன் என் மாமா சென்ற வழியையே பார்த்துக்கொண்டிருப்பேன்.
பல நாட்கள் அப்படி வழிமேல் விழி வைத்து பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு அதுவும் கடந்து போனது. காலங்கள் வெகு சீக்கிரமாகவே உருண்டுப் போனது. அந்த வீட்டுக்காரர்கள் இசுலாமியர்கள் என்பதால் என்னை ஆயிஷா என்றே அழைத்தார்கள். அந்தப் பெயரே இன்று வரை நிலைத்து விட்டது.
நான் வேலை செய்த வீடு கிருளப்பனை என்ற இடத்தில்தான் இருந்தது. அந்த வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் வேலை செய்யும் மலைநாட்டு பிள்ளைகள் தீபாவளி, பொங்கலுக்கு அவங்க வீட்டுக்கு செல்லும் போது எனக்கு ரொம்ப கவலையாக இருக்கும். நமக்கும் சொந்தம் என்று யாராவது இருந்தால் நாமும் பெருநாளைக்கு போகலாமே என நினைத்து ரொம்ப வேதனையோடு பல நாட்களை கழித்திருக்கிறேன்.
நான் கடைக்கு செல்லும் போதுதான் அந்த வியாபார நிலையத்தில் பணி செய்த ஒரு இளைஞனை விரும்பி சில நாட்களிலேயே கல்யாணம் முடித்து விட்டேன். அதன் பிறகு 1989ம் ஆண்டு இங்கிரிய, றைகமைக்கு வந்து என் கணவரின் வீட்டிலேயே வாழத் தொடங்கி விட்டேன். திரும்பவும் புது உறவு கிடைத்ததில் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.
சுமார் எட்டு வருடங்களாக ஊதியம் பெறாமல் அந்த பங்களா  வீட்டில் வேலை செய்ததால் அந்த வீட்டில் எனக்கு ஏதாவது கிடைக்குமா என்ற நப்பாசையில் நானும் எனது கணவரும் அந்த பங்களாவுக்குச் சென்றோம்.
அந்த வீட்டில் எனக்கு அப்படி ஒன்றும் கிடைக்கவில்லை. எனது மாமா கொடுத்துச் சென்றாக கூறி ஒரு பாஸ்போர்ட்டை கொடுத்தார்கள்.
அது ஸ்ரீமா, சாஸ்த்திரி ஒப்பந்தத்தில் வழங்கப்பட்ட இந்திய பாஸ்ப்போர்ட். அதில் எனது சிறு வயது போட்டோ ஒட்டப்பட்டு எனது பெயரும் ஊரின் பெயரும் இருந்தது. அந்த பாஸ்போர்ட்தான் எனது பழைய ஞாபகங்களை மீண்டும் மீட்டியெடுப்பதற்கு காரணமாக இருந்தது.” என்று சொல்லும் பரமேஸ்வரிக்கு தற்போது 51 வயதாகிறது.
“எனக்கு ஒரு ஆசை. நான் இறப்பதற்கு முன்பாக எனது உறவுகள் எங்காவது இருந்தால் அவர்களை ஒரு தடவையாவது பார்த்திடணும்…”ன்னு ஏக்கத்துடன் சொல்லும் பரமேஸ்வரி கண் கலங்கினார்.
இதைப் படிக்கும் வாசகர்களுக்கு மேலதிக தகவல்கள் ஏதேனும் தெரியும் என்றால் தயவு செய்து வண்ண வானவிலுடன் அல்லது கட்டுரையாளரின் மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொள்ளவும். ஆயிஷா பரமேஸ்வரியை அவரது இரத்த உறவுகளுடன் சேர்த்து வைப்போம்.

tamilvamban.blogspot.com
படப்பிடிப்பு உதவி:  எஸ். சுசாந்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக