புதன், 20 ஜனவரி, 2021

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட கூட்டணிக் கட்சிகளை நிர்பந்திக்கவில்லை: மு.க.ஸ்டாலின்

tamil.indianexpress.com :தமிழகத்தில் வரும் மே மாதம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த பிரச்சாரத்தில், அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  திமுக தலைவர் ஸ்டாலின்,  மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர்  கமல்ஹாசன் ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக – வை புறக்கணிப்போம் என்ற பெயரில், தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் கிராமசபா கூட்டத்தை நடத்தி வருகிறார்..... மேலும் அதிமுக ஆட்சியில் அடுக்கடுக்காக ஊழல் புகார்களை சுமத்தி வரும் ஸ்டாலின், வரும் தேர்தலில் மக்கள் அதிமுக – வை புறக்கணிப்பார்கள் என தெரிவித்துள்ளார். இதனால் தமிழக அரசியல் களம் பெரும் பரபரப்பாக இயங்கி வரும் நிலையில், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள், திமுக –வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடாமல் தங்களது சொந்த சின்னத்தில் போட்டியிடுவதாக கூறியுள்ளனர்.

திமுக கூட்டணியில், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனஸ்ட் கட்சி, கொங்கு தேசிய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ஐக்கிய ஜனநாயக கட்சி, மதிமுக ஆகிய 8 கட்சிகள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு, மதிமுக பொது செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல் திருமாவளவன் ஆகிய இருவரும் வரும் சட்டமன்ற தேர்தலில், தனி சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்தனர்.

இதனால் திமுக தங்களது கூட்டணி கட்சிகளிடம் உதய சூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று நிர்பந்தித்ததாகவும், இதனால் தான் கூட்டணி கட்சிகள் தனி சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளதாகவும் செய்திகள் பரவியது. இதனால் திமுக கூட்டணியில் பெரும் சலசலப்பு நிலவியதை தொடர்ந்து, கூட்டணி கட்சிகளை திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என நிர்பந்திக்கவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், கூட்டணி கட்சிகளை திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என நிர்பந்திக்கவில்லை, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்திக்கிறோம் என்பது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த சதி என்று தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக