வியாழன், 7 ஜனவரி, 2021

கரூரில் இளைஞர் ஆணவ கொலை பெண்ணின் தந்தை கைது

dhinakaran:  கரூர்: கரூரில் வேறு சாதி பெண்ணை காதலித்த இளைஞர் ஹரிஹரன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக பெண்ணின் தந்தை வேலன் கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் காமராஜபுரம் சாலையை சேர்ந்த ஜெயராம் என்பவரின் மகன் ஹரிஹரன். இவர் அதே பகுதியில் உள்ள வேலன் என்வரது மகளை கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். ஹரிஹரன் வேற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் காதலித்த பெண்ணின் பெற்றோர் ஹரிஹரனிடம் பேசுவதை நிறுத்தி கொள்ளுமாறு மிரட்டி வந்துள்ளனர். எனினும் இருவரும் திருமணம் செய்துகொள்வதில் உறுதியாக இருந்துள்ளனர். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத பெண்ணின் உறவினர்கள் நேற்று பட்டப்பகலில் கரூர் பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் பெண்ணின் பெரியப்பா உள்ளிட்ட ஐந்துக்கு மேற்பட்ட நபர்கள் ஹரிஹரனை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர்.



ரத்த வெள்ளத்தில் மிதந்த ஹரிஹரன் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார். இது தொடர்பான காட்சி வெளியாகி கரூர் மாநகரில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 7 பிரிவுகளின் கீழ் 3 பேரை கைது செய்தனர். கொலையில் முதல் குற்றவாளியாக இருந்த பெண்ணின் சித்தப்பா சங்கர், மாமன்கள் கார்த்திகேயன், வெள்ளைச்சாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் ஹரிஹரனை ஆணவ கொலை செய்த பெண்ணின் தந்தை வேலன் 4வது நபராக கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் முத்து என்பவர் தேடப்படும் குற்றவாளியாக உள்ளார்.

இதையடுத்து பெண்ணிடம் விசாரணை நடத்த வலியுறுத்தி ஹரிஹரனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியல் கைவிடப்பட்டது. ஆணவ கொலை செய்யப்பட்ட இளைஞர் ஹரிஹரனின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவரது உடலானது தற்போது அவரது இல்லத்திற்கு கொண்டுசெல்லப்படவுள்ளது. ஹரிஹரனின் நண்பர்கள் பலர் அதேபகுதியில் கூடியுள்ளதால் பாதுகாப்பு கருதி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக