செவ்வாய், 19 ஜனவரி, 2021

தீவிர சிகிச்சை பிரிவில் அமைச்சர் காமராஜ்... எக்மோ உள்ளிட்ட சிகிச்சைகள் ..

tamil.oneindia.com : சென்னை: கொரோனா காரணமாக கடந்த 5-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.  சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். இதனிடையே அமைச்சர் காமராஜ் உடல்நிலை குறித்து கேட்டறிவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். ஆகியோர் இரவு 10 மணியளவில் எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு காமராஜின் உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். இது அதிமுக நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆரம்பத்தில் மூச்சுவிடுவதில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்த அமைச்சர் காமராஜுக்கு திடீரென சுவாசப்பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அவரது உடல்நிலை சற்று பின்னடைவை சந்தித்ததால் அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது. இதன் காரணமாக இப்போது அவருக்கு எக்மோ உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்படவுள்ளன. 
 
இன்று மாலை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இருந்து எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு காமராஜ் மாற்றப்பட்டார். அமைச்சர்கள் தங்கமணி, கே.பி.அன்பழகன், செல்லூர் ராஜூ, நிலோபர் கபில் போன்றோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் காமராஜுக்கு தீவிர சிகிச்சை தொடங்கப்பட்டுள்ள நிலையில் அவரது குடும்ப உறுப்பினர்கள் உடனிருந்து அவரை கவனித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக