சனி, 2 ஜனவரி, 2021

போராட்ட களத்தில் விவசாயி தற்கொலை!... என் தியாகம் வீண் போகக் கூடாது

minnambalam : கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த வெப்ப நிலை டெல்லியில் நிலவி வருகிறது. குறைந்தபட்ச வெப்ப நிலை 1.1 டிகிரி செல்ஷியஸ் அளவுக்குச் சென்ற போதிலும் கடும் குளிரில் எதனையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது போராட்டம் இன்றுடன் 38ஆவது நாளை எட்டியிருக்கிறது.

அதேசமயத்தில் லட்சக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், நாளுக்கு நாள் மற்ற மாநிலங்களிலிருந்து டெல்லிக்கு வரும் விவசாயிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. தங்களது கோரிக்கை நிறைவேற்றப் படும் வரை வீடு திரும்புவதில்லை என உறுதியாக இருக்கின்றனர். இதுவரை 6 கட்ட பேச்சுவார்த்தைகள் முடிந்துள்ளது. ஆனால் அவை விவசாயிகளின் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வரவில்லை. மின்சார கட்டண உயர்வு மற்றும் வைக்கோல்போர் எரித்தல் போன்றவற்றில் மட்டும் 6ஆவது கட்ட பேச்சுவார்த்தையில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. எனினும் குறைந்த பட்ச ஆதரவு விலை மற்றும் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்தல் போன்றவற்றில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை.

'என் தியாகம் வீண் போகக் கூடாது’: போராட்ட களத்தில் விவசாயி தற்கொலை!

இந்நிலையில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்படும் என்று மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். வரும் ஜனவரி 4ஆம் தேதி 7ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என்று எச்சரித்துள்ளனர். ஹரியானா மற்றும் ராஜஸ்தான் எல்லையான ஷாஜகான்பூரில் நடத்தி வரும் போராட்டக்காரர்களை டெல்லி நோக்கி அழைக்கவும் முடிவு செய்யப்படும். டெல்லியை நோக்கி பேரணி நடத்தப்படும் என்று 40 விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்த அமைப்பான சம்க்யுக்த் கிஷான் மோர்ச்சா நடத்திய ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லி காசியாபாத் பார்டரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். போராட்டக் களத்தில் அமைக்கப்பட்டிருந்த பாத்ரூமில் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். இவர் சத்தீஸ்கர் மாநிலம் , பிளஸ்பூரைச் சேர்ந்த கஷ்மீர் சிங் என்பது தெரியவந்துள்ளது. தற்கொலைக்கு முன் அவர் குறிப்பையும் எழுதி வைத்துள்ளார். அதில், “எனது தியாகம் வீணாகப் போகக்கூடாது. எனது உடலை டெல்லி-உ.பி. எல்லையிலேயே தகனம் செய்துவிடுங்கள்” என்று எழுதி வைத்திருக்கிறார்.

விவசாயியின் இந்த முடிவு ஒட்டுமொத்த விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை மாரடைப்பு, உடல் நலக் குறைவு என போராட்டத்தில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக