வியாழன், 28 ஜனவரி, 2021

மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா காலமானார்.

chakkaram.com :ஈழத்து சஞ்சிகையான ‘மல்லிகை’ ஆசிரியர் டொமினிக் ஜீவா தனது 94வது வயதில் இன்று (2021.01.28) கொழும்பில் காலமானார். டொமினிக் ஜீவா, ஒரு விளிம்புநிலை மனிதர், படிக்காத மேதை, சிறந்த மனிதாபிமானி, முற்போக்கு சிந்தனையாளர், தலை சிறந்த தமிழ் மொழி ஊடகவியலாளர், சிறந்த எழுத்தாளர், திறனாய்வாளர், சிறுகதையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி, உன்னதமான மேடைப்பேச்சாளர், கடின உழைப்பாளி, நவீன தமிழ் இலக்கியத்தின் வற்றாத ஜீவன் என பன்முக ஆளுமை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. keetru.com : “கலை, இலக்கியம் என்பனவற்றின் இன்றியமையாத பண்புகளிலொன்று மனித நேய உணர்வாகும். இவற்றைப் படைக்கும் கலைஞர், இலக்கியக்காரர் ஆகியோர் தம்மளவிலும் இவ்வுணர்வை உடையவர்களாகவே திகழ்வர் எனச்சமுதாயம் எதிர்பார்ப்பது இயற்கையே. ஆயினும் பெரும்பான்மையான கலைஞர், இலக்கியக்காரர் ஆகியோரிடம் இவ்வுணர்வை நிறைவாக நாம் கண்டுகொள்ள முடிவதில்லை. ஓரு சிலரிடம் அதனை நாம் முழுமையாக அவதானிக்க முடிகிறது. அத்தகைய மிகச் சிலருள் ஒருவர் நம் மத்தியில் வாழும் இலக்கியவாதி டொமினிக் ஜீவா.” என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் கலாநிதி சு.வித்தியானந்தன் புகழ்ந்துரைத்துள்ளார்.

டொமினிக் ஜீவா, ஒரு படிக்காத மேதை, உன்னத மனிதாபிமானி முற்போக்கு சிந்தனையாளர், தலை சிறந்த பத்திரிக்கையாளர், சிறந்த எழுத்தாளர், திறனாய்வாளர், சிறுகதையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி, கனல் கக்கும் பேச்சாளர், கடின உழைப்பாளி, நவீன தமிழ் இலக்கியத்தின் வற்றாத ஜீவன் - எனப் பன்முக ஆளுமை படைத்தவர்.

டொமினிக் ஜீவா 27.06.1927 அன்று யாழ்ப்பாணத்தில் அவிராம்பிள்ளை ஜோசப் -மரியம்மா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை ஜோசப் யாழ்ப்பாணத்தில் முடிதிருத்தகம் நடத்தி வந்தார்.

“பிறப்பில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சவரத் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தவன். ஐந்தாம் வகுப்புவரை படித்தேன். அந்தக் காலத்தில் தான் என்னை வெகுவாகப் பாதித்த அந்த நிகழ்ச்சி நடந்தது. என்னுடைய இலக்கியத்துறை பிரவேசத்திற்கே இந்த நிகழ்ச்சிதான் காரணம். நான் அப்போது தொடக்கப்பள்ளி மாணவன். அந்த பிஞ்சுப் பருவத்திலேயே என் இதயத்தில் விழுந்த அடி, அதன் வடு, என் படிப்பை, என்னை வளர்த்த என் தந்தை செய்த தொழிலைச் சுட்டிக் காட்டிய பொழுது, என் இதயத்தில் விழுந்த காயந்தான் என் எழுத்தில் எரிகிறது” எனத் தமது இளமைக்கால கொடுமையான நிகழ்வு குறித்தும், இலக்கிய உலகில் பிரவேசிப்பதற்கான சமூகச் சூழல் பற்றியும், ‘ஈழத்திலிருந்து ஒரு இலக்கியக் குரல்’ என்னும் தமது நூலில் டொமினிக் ஜீவா பதிவு செய்துள்ளார்.

ஈழத்து நவீன இலக்கியத்துறையில் 1946 ஆம் ஆண்டு அடி எடுத்து வைத்தார். தமிழகத்து கம்யூனிஸ்ட் தலைவர்களில் முக்கியமானவரான ப. ஜீவானந்தம் தலைமறைவு வாழ்வின் பொருட்டு 1948 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்துக்கு வருகை புரிந்தார். அப்போது டொமினிக் ஜீவா ப.ஜீவானந்தத்தை சந்தித்து, அவரது வழிகாட்டுதலின் அடிப்படையில் தமது அரசியல், சமூக இலக்கிய நோக்கினை சரியான திசைவழியில் அமைத்துக் கொண்டார். அது முதல் டொமினிக் என்ற தமது பெயருடன் ‘ ஜீவா ’ என்று இணைத்துக் கொண்டு ‘டொமினிக் ஜீவா ’ என்று அழைக்கப்பட்டா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக